முல்லை அமுதனின் இலக்கியச்செயற்பாடுகளின் முக்கியத்துவம்!
எழுத்தாளர் முல்லை அமுதனைப் பலரும் அறிவர். எழுத்தாளர், சஞ்சிகை / இணைய சஞ்சிகை ஆசிரியர் / வெளியீட்டாளர், புத்தகக்கண்காட்சி நடத்துபவர், இலக்கிய ஆளுமைகளைப் பற்றிய ‘இலக்கியபூக்கள்’ தொகுப்புகளைத்தொகுத்து வெளியிட்டவர், எழுத்தாளர் விபரத்திரட்டினை வெளியிட்டவர் இவ்விதம் தமிழ் இலக்கிய உலகில் இவருக்குப் பன்முகங்களுள்ளன. அண்மையில் வெளியான ஞானம் சஞ்சிகையின் ஈழத்துப்புலம்பெயர் இலக்கியத்தொகுப்பில் இவரது கவிதை, சிறுகதை மற்றும் மேற்படி தொகுப்புக்காக இளைய அப்துல்லாஹ் (இலண்டன்) கண்ட நேர்காணல் ஆகியன இடம் பெற்றுள்ளன. மேற்படி நேர்காணலில் புகலிடம் நாடிப்புலம்பெயர்ந்த தமிழர் இலக்கியம் பற்றி பல தகவல்களைக்காணலாம். அதற்காக இவருக்கு நன்றி. மேற்படி தலைப்பில் ஆய்வுக்கட்டுரைகள் எழுதிய பலரின் கட்டுரைகளில் ஆவணப்படுத்தப்படாத பல விடயங்கள் , உதாரணமாக இணைய இதழ்கள் பற்றிய விபரங்கள் ,இவரது பதில்கள் முலம் ஆவணப்படுத்தப்பட்டிருக்கின்றன. எனக்கு ஆச்சரியம் தந்த விடயங்களிலொன்று. 1987இல் நான் நண்பர்கள் சிலருடன் சேர்ந்து கொண்டுவந்த கையெழுத்துச்சஞ்சிகையான ‘குரல் பற்றியும் மறக்காமல் இவர் தன் பதிலில் குறிப்பிட்டிருந்ததுதான். ‘குரலு’க்காய்க் குரல் கொடுத்த ஒருவர் இவர் ஒருவராகத்தானிருக்க முடியும். 🙂 அத்தகவலை ஆவணப்படுத்தியதற்காக நண்பருக்கு நன்றி.