ஒல்லாந்தர் பார்வையில் ‘யாழ்ப்பாணத்தவர்’!
பேராசிரியர் க.கணபதிப்பிள்ளை, பண்டிதமணி சி.கணபதிப்பிள்ளை, தென்புலோலியூர் மு.கணபதிப்பிள்ளை எனத் தமிழ் இலக்கிய உலகில் கணபதிப்பிள்ளைகள் பலர். யாழ் இந்துக்கல்லூரியிலும் ஆசிரியரொருவரின் பெயர் கணபதிப்பிள்ளை. அவருமொரு பண்டிதரென்று நினைக்கின்றேன். அவரும் பத்திரிகைகளில் இலக்கியக்கட்டுரைகள் எழுதியதாகக்கூறக் கேட்டிருக்கின்றேன். இவ்விதம் கணபதிப்பிள்ளைகள் பலர் இருந்ததால் ஆரம்பத்தில் எனக்குப் பெருங் குழப்பமேயிருந்தது. நான் முதலில் அறிந்த கணபதிப்பிள்ளை அவர்கள் பேராசிரியர் க.கணபதிப்பிள்ளை அவர்கள். அவரை அவரது சங்கிலி நாடகத்தினூடாகத்தான் முதலில் அறிந்து கொண்டேன். அந்தச் சங்கிலி நாடகப்பிரதி எனக்குக் கிடைத்தது தற்செயலானதொன்று. யாழ்ப்பாணத்திலிருந்த ஆச்சி வீட்டிலிருந்த பரண் மேலிருந்து கிடைத்த புத்தகங்களில் சில: மறைமலை அடிகளாரின் நாகநாட்டரசி குமுதவல்லி, திப்புசுல்தான் (பெரிய அதிக பக்கங்களுள்ள நாவல்), தேவன் (யாழ்ப்பாணம்) எழுதிய மொழிபெயர்ப்பு நாவலான ‘மணிபல்லம்’ அடுத்தது பேராசிரியர் க.கணபதிப்பிள்ளையின் சங்கிலி.
என் மாணவப்பருவத்தில் நீண்ட நாள்களாக நான் பண்டிதமணி சி.கணபதிப்பிள்ளைதான் ‘சங்கிலி’ நாடகத்தை எழுதிய பேராசிரியர் கணபதிப்பிள்ளை என்று எண்ணியிருந்தேன். இதற்கு முக்கியமான காரணங்களிலொன்று பேராசிரியர் க.கணபதிப்பிள்ளை பற்றிப்போதுமான நூல்கள் வெளிவந்திருக்கவில்லை என்பதுதான்.
பேராசிரியர் க.கணபதிப்பிள்ளையின் ‘ஈழத்து வாழ்வும் வளமும்’ நூலினை அண்மையில் வாசித்துக்கொண்டிருந்தேன். ஈழத்தமிழர் வரலாறு பற்றி, அவர்தம் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த நகரங்கள் பற்றி, அவர்தம் வாழ்வு பற்றி, அவர்தம் உணவு மற்றும் பழக்க வழக்கங்கள், அவர்தம் கிராமியத்தெய்வ வழிபாடு, அவர்தம் இசை, சிற்பக்கலை பற்றி இவ்விதம் பல்வேறு விடயங்களைப்பற்றி அவர் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு இந்த நூல். குமரன் புத்தக இல்ல வெளியீடாக, கலாநிதி கா.சிவத்தம்பி அவர்களின் முன்னுரையுடன் வெளிவந்திருக்கின்றது.
இந்த நூலில் பேராசிரியர் ‘யாழ்ப்பாணத்தில் ஒல்லாந்தர்’ என்றொரு கட்டுரையினை எழுதியிருக்கின்றார். அதில் ஒல்லாந்தர் பார்வையில் யாழ்ப்பாணத்தவர் எவ்விதம் தோன்றினார்கள் என்பது பற்றியும் குறிப்பிட்டிருக்கின்றார். அதனை வாசித்ததும் வந்த சிரிப்பினை அடக்க முடியவில்லை. அது இது: