வீரகேசரி நிறுவனம் ஒருமுறை இரசிகமணி கனகசெந்திநாதன் நினைவாகக்குறுநாவல் போட்டியொன்றினை நடத்தியிருந்தது. எண்பதுகளின் இறுதிப்பகுதியில் 87/88 காலகட்டமென்று நினைக்கின்றேன். என்னிடம் அது பற்றியுள்ள போட்டோ பிரதியில் திகதி விடுபட்டுப்போயுள்ளதால் அது பற்றி உடனடியாக நிச்சயமாகக்கூற முடியாதுள்ளது.
அதற்குக் கனடாவிலிருந்து நானும் ஒரு கதையினை ‘போரே நீ போய் விடு!’ என்னும் தலைப்பில் எழுதி அனுப்பியிருந்தேன். வன்னியிலுள்ள அகதிகளுக்குச் சேவை புரிவதற்காகத் தம் வாழ்வினை அர்ப்பணித்த மூவரை மையமாக வைத்துப் பின்னப்பட்ட கதை அது. வாத்தியார் ஒருவர். அவரது மணவாழ்க்கை முறிவுற்று தனிமையில் வாழ்பவர். இளம் பெண் ஆசிரியை ஒருவர். நிலவிய போர்ச்சூழலினால் பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டு, நிராதரவான நிலையிலிருந்த அவரை அவரது மறைந்த தந்தையாரின் நண்பரான மேற்படி வாத்தியாரே ஆதரித்து, அகதிகளுக்குச் சேவையாற்றும்படியான சூழலை ஏற்படுத்தியிருந்தார். இளைஞரொருவன். அவனும் அகதிகளுக்குச் சேவை புரிவதற்காகத் தன் வாழ்வினை அர்ப்பணித்துச்செயற்படுபவன். ஆசிரியையான அந்தப்பெண்ணோ தன்னை ஆதரித்த ஆசிரியரைத் தன் தந்தையைப்போலெண்ணி வாழ்பவள். அந்த இளைஞன் அவள் மேல் காதலுறுகின்றான். ஆனால் அவளோ தன் மணவாழ்வு அகதிகளுக்குச் சேவை செய்வதிலிருந்து. தந்தையைப்போன்ற ஆசிரியருக்குப் பணிவிடை செய்வதிலிருந்து தன்னைத்தடுத்துவிடுமென்பதைப்பிரதான காரணங்களிலொன்றாகக்கூறி மறுத்து விடுகின்றாள். தொடர்ந்தும் நண்பர்களாக அதே சமயம் தன்னார்வத்தொண்டர்களாக இருப்பதையே அவள் விரும்புகின்றாள். அவனும் ஏற்றுக்கொள்கின்றான். இதுதான் அப்படைப்பின் கதைச்சுருக்கம்.