பதாகை இணைய இதழில் ‘எதற்காக எழுதுகிறேன்?’ தொடர்
‘காசுக்குப் பிரயோஜனமில்லாத காரியம்’ என்று நிச்சயமாக எந்த ஒருவருமே ஒப்புக் கொள்வார்கள் என்றால் அது கட்டாயமாக பேனா பிடித்து எழுதுவது தான். தமிழ்ச் சூழலில் இது மிகவும் கேவலமான போக்கத்த தனமான கிறுக்கு வேலை என்றே கருதப்படுகிறது. குடும்பத்தினரால் காயப்படுத்தப் படாத எழுத்தாளர் ஆணாயிருந்தால் ஆயிரத்தில் ஒருவர். பெண்ணாயிருந்தால் யாருமே இல்லை. பதிப்பாசிரியர்களால் விமர்சகர்களின் புறக்கணிப்பால் மனச்சோர்வடையாத எழுத்தாளரைத் தேடித்தான் கண்டுபிடிக்க வேண்டும்.
இத்தனையையும் மீறி சமகாலத்தில் எழுதுபவர்கள் எதற்காக எழுதுகிறார்கள்? அவர்களின் தரப்பை ஒரு தொடராக பதாகை இணைய தளம் வெளியிடத் துவங்கி இருக்கிறார்கள். இந்தத் தொடரைத் தொடங்கத் தூண்டுதலாயிருந்த ஒரு சிறு நூலின் பகுதிகளை மேற்கோள் இடுகிறார் நரோபா. அது கீழே:
அண்மையில், சந்தியா வெளியீடாக வந்துள்ள “எதற்காக எழுதுகிறேன்” என்ற சிறு நூலை வாசிக்க நேர்ந்தது. தி.ஜானகிராமன், ஜெயகாந்தன், சி,சு,செல்லப்பா, க,நா.சு, ந.பிச்சமூர்த்தி, கு.அழகிரிசாமி, லாசரா, ஆர்.ஷண்முகசுந்தரம் உட்பட அக்காலகட்டத்து எழுத்தாளர்கள் பலரும் இந்த கேள்வியை எதிர்கொண்டு எழுதி (பேசி) இருக்கிறார்கள். அன்றைய காலத்தில் பிரபலமாக இருந்த தொடர்கதை எழுத்தாளர் ஆர்.வியின் கட்டுரை கூட இடம் பெற்றிருக்கிறது. ஒவ்வொரு கட்டுரையும் ஒவ்வொரு விதம், ஒவ்வொரு தொனி.
“எனக்கே எனக்காக எழுதுவதைப்பற்றி என்ன சொல்ல முடியும்? விஸ்தாரமாக சொல்ல என்ன இருக்கிறது? எனக்கே எனக்காக எழுதவேண்டும் போலிருக்கிறது எழுதுகிறேன். அது என்னமோ பெரிய ஆனந்தமாக இருக்கிறது. காதல் செய்கிற இன்பம் அதிலிருக்கிறது. காதல் செய்கிற இன்பம், ஏக்கம், எதிர்பார்ப்பு, ஒன்றிப்போதல், வேதனை- எல்லாம் அதில் இருக்கின்றன. இன்னும் உள்ளபடி சொல்ல வேண்டும் என்றால் பிறர் மனைவியை காதலிக்கிற இன்பம், ஏக்கம், நிறைவு – எல்லாம் அதில் இருக்கின்றன.,“ என்று எழுத்து அளிக்கும் கிளர்ச்சியை, அதனால் தனக்கு கிடைக்கும் இன்பத்தை, அந்த நிலையை மீண்டும் மீண்டும் அடைந்து நிலைத்திருக்கும் வேட்கையை எழுதுகிறார் தி. ஜானகிராமன்..
ஜெயகாந்தன் அவருக்கே உரிய முறையில் தனது தரப்பை வலுவாக வைக்கிறார். எழுத்தாளன் தனக்குள் சுருண்டுகொள்ளும் குகைவாசி அல்ல என்று அவனை இழுத்து கொண்டுவந்து நிறுத்துகிறார்-