[ எமக்கு பிலோ இருதயநாத் அவர்களது பயணக்கட்டுரைகள் மிகவும் பிடிக்கும். கானுயிர் பயணங்கள் மற்றும் மானுடவியல் ஆய்வுகளின் முன்னோடியாகக் கருதப்படுபவர். அவர் ஞாபகமாக ‘எங்கள் புளக்’ (engalblog.blogspot.com) வலைப்பதிவில் 1965இல் வெளியான மஞ்சரி இதழில் வெளியான ‘நாய் கற்பித்த பாடம்’ மீள்பிரசுரமாகியிருந்தது மகிழ்ச்சியினைத்தருகின்றது. அந்தக் கட்டுரையினை இங்கு மீள்பதிவு செய்கின்றோம் பதிவுகள் -.]
ஆபத்தில் உதவாத நண்பர்களிடம் நாயானாலும் ஆத்திரம் வராதா?
அன்று மைசூரிலிருந்து சென்று கூடலூரில் ஒரு நண்பரின் இல்லத்தில் தங்கினேன். மறுநாள் காலையில் சுல்தான்பத்திரி, தேவர்சோலை ஆகிய இடங்களுக்குச் சென்றேன். தேவர் சோலையில் என்னை நீண்ட நாட்களாக அழைத்துக் கொண்டிருந்த நண்பரான ரூப் சிங் என்பவருடைய இல்லத்தில் தங்கினேன். அவர் சிறந்த வேட்டைக்கார். அவரிடம் கன்றுக்குட்டியைப்போல ஒரு வேட்டை நாய் உண்டு. வேட்டைக்கு ரூப் சிங் செல்லும்போதெல்லாம் அந்த நாயும் அவருடன் செல்லும்.
“இந்த நாயை எங்கிருந்து கொண்டு வந்தீர்கள்?” என்று அவரிடம் கேட்டேன்.ரூப் சிங் சொல்லலானார். “அது ஒரு பெரிய கதை. இந்த நாயின் குடும்பத்தைச் சேர்ந்த முன்னூறு நாய்கள் என் நண்பருள் ஒருவரிடம் இருக்கின்றன. அவர் ஒரு செல்வர். இந்த நாயை அவர்தான் எனக்குக் கொடுத்தார். அவர் நல்ல வேட்டைக் காரர். அது மட்டுமல்ல; நாய் வளர்ப்பிலும் அவருக்கு அளவு கடந்த ஆசை. நாய்களைக் கவனிப்பதற்கு மட்டும் சுமார் இருபது ஆட்களுக்கு மேல் வைத்திருக்கிறார். இரவில் அந்தச் செல்வர் தமது பங்களாவில் எந்தக் கதவையும் மூடுவதே இல்லை. எந்த எந்தக் கதவுகளின் மூலம் அந்தச் செல்வரின் இல்லத்துக்குள்ளும், காம்பௌன்டுக்குள்ளும் அந்நியர் வர இயலுமோ, அந்தக் கதவு வாயிற்படிகளை எல்லாம் நாலு நாலு நாய்கள் காவல் புரியும். இரவு 7 மணிக்குத் தம் காவல் நாய்களைச் செல்வர் தடவிக் கொடுப்பார். பிறகே உறங்கச் செல்வார். செல்வர் தடவிக் கொடுத்த பிறகு, நாய் வளர்ப்பு வேலைக்காரனுங்கூட எந்த வழியாகவும் உள்ளே புக முடியாது.