அவனை பற்றி நிறைய சொல்லலாம் ஆனால் இப்போது சொல்லாகப் போகும் அவனை பற்றி பேசுவதில் என்னவாகி விடப்போகிறது என்கிறார்கள் அவனுடைய உறவினர்கள் .சிலரோ அவனுடைய வாழ்க்கையின் கடந்தகால புத்தகத்தில் சில பக்கங்களுக்கு உரிமையாளர்கள் போல மனதின் ஆழத்தில் கிடப்பவையை ஒரு கோர்வையாக மாற்றி ஒலியாக கொட்ட முயல்கின்றனர் . இதற்கிடையில் அவனுடைய நினைவுகளில், வார்த்தைகளில் சிக்கிக்கொண்டவனாக மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவிற்கு வெளியே நின்று கொண்டிருந்தேன்.தன்னாலே என் உடல் நினைவில் இருந்து குறிப்பெடுக்க ஆரம்பித்திருந்தது. அப்போது என் நினைவில் அவன் சொன்ன மர்மமான வார்த்தைகள் வேப்பமர இலைகளாக உதிர தொடங்கியிருந்தன. “எல்லோருக்கும் சுவாசிக்கும் வியாதி. எனக்கு இந்த வியாதியின் உச்சக்கட்டம்.எப்போது வேண்டுமானாலும் இந்த வியாதி குணமாகலாம் .இதற்காக பல நினைவுகளை மருந்தாக சாப்பிட்டுகொண்டு இருக்கிறேன்” என பெரம்பலூரின் மர்மமான மலைகளின் மேல் ஏறிக்கொண்டிருக்கும் போது காரணமே இல்லாமல் சொன்னது நினைவுக்கு வந்தது.
அடிக்கடி என்னிடம் அவன் ஏதோ வித்தியாசமான கனவுகள் வருவதாக சொல்வான்.தன்னுடைய ஒவ்வொரு கனவின் முடிவிலும் தான் இறந்து போவதாக சொல்வான்.எனக்கு அவன் பொய் சொல்கிறான் என்றே எண்ண தோன்றியது.ஏனெனில் அவனுடைய கனவில் நடக்கும் சம்பவங்கள் இங்கு நடக்கக்கூட துளியளவு கூட வாய்ப்பில்லை.
இது அவனை பற்றிய கதை தான்.என்னுடைய அறையில் சக நண்பர்களை போல இருந்தவன் அவன் . ஆனால் செயல்களிலும் பேச்சிலும் அவன் சாதாரண மனிதர்களை போல அல்ல. ஆனால் அவன் மனிதன் தான். லத்தின் அமெரிக்க மாய யதார்த்த கதைகளில் வருவதை போல பல கண்களும், பல கால்களும் அவனுக்கு இல்லை.இந்த லத்தின் அமெரிக்க இலக்கியங்களை பற்றி கூட அவன் வழியாகவே அறிந்துகொண்டேன் . அவன் தன்னை வித்தியாசமானவன் என்று சொல்லிக்கொள்வதில் பெருமைபட்டுக்கொள்வான்.
மார்க்வெஸ் எனக்கு பிடித்த படைப்பாளி ஆனது அவனால் தான்.அவனுடன் ஒரே அறையில் பல அனுபவங்களை பேசி வாழ்ந்த தருணங்களை நினைத்து பார்க்கையில் இன்னும் அந்த விசித்திரமான நிகழ்வுகள் கண் முன்னே நிகழ்ந்தவாறு தோன்றும்.அவனுக்கு தனக்கு வைக்கப்பட்ட பெயர் கூட பிடிக்காது என்று தான் தோன்றும். ஏனெனில் எப்போதும் ஒரு நாளுக்கு ஒரு முறை ஐ அம் சிசிபஸ், ஐ அம் போர்ஹே, ஐ அம் காம்யூ என்று பெரிய பெரிய ஆளுமைகளின் பெயரை சொல்லிக்கொண்டு சுற்றுவான்.