எங்கள் நாவலர், ” வசனநடை கைவந்த வல்லாளர் ஆறுமுகநாவலர் ” – என்று அறிந்திருக்கின்றோம். தமிழ்நாட்டில் கடலூரில் ஒரு காலத்தில் வள்ளலார் சுவாமிகளுக்கு எதிராக நீதிமன்றில் அவர் வழக்காடியதையும் அறிந்திருப்போம். ஆனால், அவர் தமது இளமைக்காலத்தில் கோபமும் மூர்க்க குணமும் கொண்டவர் என்பதை அறிந்திருப்போமா ? தமது உறவினர் மீது தமக்கு வந்த கோபத்தை வெளிப்படுத்துவதற்கு ஒரு கத்தியை எடுத்துக்கொண்டு அவர் துரத்திய கதை எத்தனைபேருக்குத் தெரியும் ? ஆறுமுகநாவலர் நூற்றாண்டு இலங்கையில் நாடுதழுவிய ரீதியில் கொண்டாடப்பட்டவேளையில் நடைபெற்ற விழாக்களில் உரைநிகழ்த்தியவர்தான் அந்த சுவாரஸ்யத்தை வெளிப்படுத்தினார். அவர்தான் தகைமைசார் பேராசிரியர் பொன். பூலோகசிங்கம். இவ்வாறு கூட்டங்களிலும் விழாக்கள் மற்றும் சந்திப்புகளிலும் பல சுவாரஸ்யங்களை அவிழ்த்து கலகலப்பூட்டும் பூலோகசிங்கம் அவர்கள் தற்பொழுது அவுஸ்திரேலியா, சிட்னியில் ஒரு முதியோர் பராமரிப்பு நிலையத்தில் கட்டிலில் சயனித்தவாறு கடந்த காலங்களை நனவிடை தோய்ந்துகொண்டிருக்கிறார். ஒவ்வொரு மனிதர் வாழ்விலும் முதுமை வரும். அந்த முதுமை மேலும் இரண்டு மைகளையும் அழைத்துக்கொண்டு அருகிலிருந்து உறவாடும். அவைதான் தனிமை – இயலாமை. அந்தத்தனிமையும் எழுதமுடியாதிருக்கும் இயலாமையும்தான் இன்று அவரை வாட்டிக்கொண்டிருக்கின்றன.
பூலோகசிங்கமும் அங்கதச்சுவையுடன் உரத்துச்சிரித்து மகிழ்வூட்டுபவர். ஆறுமுகநாவலரைப்பற்றி நாம் அறியாத பல பக்கங்களை, அவரது நூற்றாண்டு காலத்தில் தான் பேசிய மேடைகளில் சொன்னவர். ஒரு சமயம் கடும்கோபத்துடன் தமது உறவினர் ஒருவரை வெட்டுவதற்காக ஒரு வெட்டுக்கத்தியுடன் நாவலர் ஓடியிருக்கும் செய்தியைச்சொல்லி, தனது பேச்சுக்களினால் எங்களை சிலிர்க்கச்செய்த சிங்கம், தற்போது நான்கு சுவர்களுக்குள் அமர்ந்து, தான் கடந்தவந்த பொற்காலங்களை நினைத்துக்கொண்டிருக்கிறது. சிலவருடங்களுக்கு முன்னர் சிட்னியில் ஒரு நாள் வெளியே நடந்துசென்றபோது , எதிர்பாராதவிதமாக தடுக்கியோ மயங்கியோ விழுந்திருக்கிறார். அதனைத் தொடர்ந்து தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டு, படிப்படியாக தேறியிருந்தாலும், பவளவிழா நெருங்கியிருந்த காலப்பகுதியில் விதியானது தன்னை இப்படி முடங்கியிருக்கச்செய்துவிட்டதே என்ற கவலையையும் ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் கடந்துவிட்டார்.