முன்னுரை:
‘கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றிய மூத்தக் குடி’ எனப் புகழப்படும் தமிழினம் பண்டைய காலத்திலேயே அறிவாலும் ஆற்றலாலும் உயர்ந்து நின்றுள்ளது.இன்றைய தொழில்நுட்பத் திறனும் அறிவு சார்ந்த செயலும் அன்றைய நாளிலேயே பெற்றிருந்த வியத்தகு கூட்டம் இக்கூட்டமாகும்.இன்று அறிவியல் துறை என்பது கணிதவியல், இயற்பியல், வேதியியல், உயிரியல், வானியல் என்று தனித்தனியாகப் பிரிந்து செயல்பட்டு வருகின்றது.இத்துறைகள் யாவும் ஏதோ மேனாட்டார் மட்டுமே இவ்வுலகிற்கு வழங்கிய புதிய கொடை போன்றதொரு மாயத் தோற்றத்தினை ஏற்படுத்தியுள்ளனர்.ஆனால் இவையாவற்றினையும் தன்னகத்தே ஒருங்கே அடக்கி செயல்பட்டு வந்த,வருகின்ற அறிவுசார் இனமாகத் தமிழினம் இருந்து வந்துள்ளது.இவ்வினத்தில் பிறந்த நாம் இதனை உணர்ந்து மீண்டும் செம்மைப்படுத்தி உலகிற்குத் தர வேண்டிய கடமையை மறந்து செயல்பட்டு வருகின்றோம்.அதிலும் குறிப்பாக உலக அளவில் பதினாறாம் நூற்றாண்டுக்குப் பின் வளர்ந்துள்ள வானியல் அறிவினைத் தமிழன் பழங்காலத்திலேயே வெற்றுள்ளான் என்பதை உலகம் உணரச் செய்வது நம் கடமையாகும்.
தொடக்க கால மனிதன்:
பழைய மனிதன் தொடக்கத்தில் தன் உறுப்புகளைப் பயன்படுத்தி பசியைப் போக்கியிருக்கின்றான்.தேவைகள் அதிகரிக்க அதிகரிக்க,உணவுப் பொருள்களை எடுக்கவும் தோண்டவும் பறிக்கவும் கற்கருவி மற்றும் மரக் கருவி எனப் பல கருவிகளைப் பயன்படுத்தியுள்ளான்.பிறகு ‘சிக்கிமுக்கி’ கற்களைக் கொண்டு நெருப்பு உண்டாக்கக் கற்றுக் கொண்டான்.அதன்வழி வேட்டையாடிய பொருட்களை வேக வைத்துத் திண்ணத் தொடங்கியுள்ளான்.இதனை அடுத்து வில்,அம்பு எனப் பல கருவிகளைச் செய்துள்ளான்.வேட்டைச் சமூகத்திலிருந்து மெல்ல மெல்ல மாறி வேளாண்மைச் சமூகத்திற்குப் பயணிக்கத் தொடங்குகிறான்.இப்படிக் குன்றுகளிலும் குகைகளிலும் காடுகளிலும் வாழ்ந்தவன் பாதுகாப்பாக வாழ வீடுகளைக் கட்டத் தொடங்கினான்.ஒரு நிலயிலிருந்து மற்றொரு நிலைக்குப் படிப்படியாக மாறிய மனிதன் இயற்கையினைக் கண்டு அஞ்சியிருக்கலாம்;அதன் மீது புரியாத பார்வைகளை வீசியிருக்கலாம்.அப்படிப் பல காலங்கள் அதன் மீது வீசிய பார்வை,அச்சம்,ஆச்சர்யம் அவனை சிந்திக்கத் தூண்டியிருக்கும்.சிந்தனையிலும் செயல்பாட்டிலும் எப்பொழுதும் முன்னிற்கும் தமிழினம் எப்படிப்பட்ட தீர்வினை இவ்வுலகிற்குத் தந்துள்ளது என்பதை அறிவது தேவையானதாகும்.அதன்வழியாக வானிலே உலாவுகின்ற பலவகையான பொருட்கள் பற்றி தன் எழுத்துகளில் குறிப்பிட்டுள்ள சிறப்பினை இங்குக் கருதுவது ஏற்புடையதாகும்.