நேர்காணல்: சுங்கை பட்டாணி க.பாக்கியம் அவர்களின் நேர்காணல்

சுங்கை பட்டாணி க.பாக்கியம்மலேசிய இலக்கியத்தின் இன்றியமையாத  சிறுகதை எழுத்தாளர், கவிஞர், கட்டுரையாளர், , முன்னாள் கெடா மாநில எழுத்தாளர் கழக தலைவர். கெடா மாநிலம் தந்த தமிழ்ச்சுடர் சுங்கைபட்டாணி க. பாக்கியம் விருதுகட்கு அப்பாற்பட்டவர்.பெண் எழுத்துக்களை மலேசிய வரலாற்றில் பதிவு செய்தே ஆகவேண்டும் என மூன்று தலைமுறை  எழுத்தாளினிப் பெண்களை தேடித் தேடிக் கண்டடைந்தவர். வள்லலார் மண்டபம் எழுப்பிய பெருமைமிகு பெண்மணி. பெண்ணிலக்கியவாதிகளுக்காக இவர் வெளியீடு செய்த ஆய்விலக்கிய நூல் வரலாற்றில் இவர் பெயர் சொல்லும்.  வள்லலார் மண்டபம் எழுப்பிய பெருமைமிகு பெண்மணி. நேர்காணல்: கமலாதேவி அரவிந்தன் (சிங்கப்பூர்) –

கேள்வி 1:மலேசிய பெண் படைப்பாளர்களில் முதன் முதலில் நூல் வெளீயீடு செய்தவர் என்ற பெருமையை பெற்றவர் நீங்கள். அந்த நெகிழ்ச்சியான தருணத்தை எங்களிடம் பகிர்ந்து கொள்ளலாமா?

மலேசியத் தமிழிலக்கியத் துறையில் தொடர்ச்சியான நூல் வெளியீடுகள் நடைபெற்ற காலகட்டம் 1970/1980பதுகள்  எனலாம். மலேசியத் தமிழிலக்கிய வரலாற்றில் இலக்கியத் தரம் உச்சத்திலிருந்த காலகட்டம் அது. தரமிக்க இலக்கியவாதிகள் வரிசை பிடித்திருந்த காலம். பத்திரிகைத் துறையிலும் இலக்கியப் பரிச்சயமிக்க பத்திரிகை ஆசிரியர்கள் சூழ இருந்தனர். இலக்கிய போட்டிகளை அன்றைய  தமிழ்ப் பத்திரிகைகள் முன்னெடுத்தன. சிங்கப்பூர் இலக்கிய களமும் தன் பங்குக்கு தரமிக்க இலக்கியத்தை அடையாளம் காட்ட முனைப்புடன் செயல்பட்டது.

மலேசிய சிங்கப்பூர் இலக்கியவாதிகளின் தரம் எவ்வித பாரபட்சமுமின்றி அடையாளம் காணப்பட்டு இலக்கிய வெளியில் பதிவு செய்யப்பட்டது. பத்திரிகைகள், இலக்கிய அமைப்புகள் என இலக்கியவாதிகளை உருவாக்கவும், அடையாளப் படுத்தவும் பெரிதும் முனைப்புக் கொண்டு செயல்பட்ட மிக உன்னதமிக்க அந்தக் காலகட்டத்தில் நூல் வெளியீடுகளும் ஆங்காங்கே பரபரப்பாக நிகழ்ந்து கொண்டிருந்தன. இலக்கியப் போட்டிகளில் வெற்றி கொள்ளும் முனைப்பும், தரத்தை உயர்த்திக் கொள்வதில் விளைந்த முயற்சிகளும் அக்காலகட்டம் மலேசிய இலக்கியவானில் உதயம் கொண்ட பொற்காலம்.

அக்காலகட்டத்தில் பெண்ணிலக்கியவாதிகளில் பலர் இலக்கிய உலகில் கோலோச்சிக் கொண்டிருந்தனர். ஆண் பெண் என்ற பேதமில்லாமல் தரத்தைப் பதிவு செய்வதில் உற்சாகத்தோடு செயல்பட்டிருந்தனர்.

அச்சூழலில், நூல் வெளியீடும் எண்ணம் என்னுள் துளிர் விடத் துவங்கியது. இலக்கியப் போட்டிகளில் வென்றதும் சிங்கப்பூர் இலக்கிய களத்தின் வழி அன்றைய பிரபல தமிழிலக்கியவாதிகளால் தேர்வு செய்யப்பட்டு பாராட்டுப் பெற்ற எனது சிறுகதைகள் என என்னுள் இலக்கியத் தாகம் ஊற்றெடுத்ததன் விளைவாக புத்தக வடிவில் பதிவு  செய்வதில் முனைப்புக் கொண்டேன்.

Continue Reading →

ஆய்வு: சங்கஇலக்கியத்தில் காதல் போர்ப்பண்பாடு (இயைபுகளும் முரண்பாடுகளும் )

 - மு.செல்லமுத்து, தமிழியல்துறை, முனைவர்ப் பட்ட ஆய்வாளர், மதுரைகாமராசர் பல்கலைக்கழகம், பல்கலைநகர் - மதுரை – 21 -வாழ்க்கையைக் காட்டும் கண்ணாடியாக இலக்கியம் விளங்குகிறது என்பர். இக்கூற்றிற்கு ஏற்ப, பழந்தமிழ் மக்களின் வாழ்க்கை முறைகளைப் பற்றி அறிந்து கொள்ள பழைய இலக்கியங்களே நமக்குத் துணைபுரிகின்றன. எனவே, இலக்கியம் என்பது மொழி வழி நின்று சமுதாய வாழ்க்கையை விளக்குகிறது எனலாம். தமிழர் தம் சமுதாய வாழ்க்கையின் வளர்ச்சி நிலைகளைப் பதிவு செய்து நிற்கும் தொன்மையான நூல்கள் தொல்காப்பியமும், சங்க இலக்கியமுமே ஆகும். தொல்காப்பியப் பொருளதிகாரமும், சங்கஇலக்கியமும் பழந்தமிழ் நாட்டின் சமூகநிலையினை அக்காலத்திற்கேற்ப பதிவுசெய்துள்ளது. உலக வாழ்வையும் வரலாற்றையும் ஏதேனும் இரு சொற்களில் சுருக்கிச் சொல்வதாயின், அவை காதலும், போரும்தான். மனிதவாழ்வின் இரு சக்கரங்களாகச் சுழலும் இவைதாம், வாழ்வின் விளக்கமான இலக்கியத்தின் அடிப்படைக்கூறுகளாகவும் அமைகின்றன. வாழ்வியல் இலக்கியத்திற்கும் இலக்கிய வாழ்விற்கும் முதன்முதலில் இலக்கணம் வகுத்த முத்தமிழ் நாகரிகம் இவ்விலக்கியப்பொருளை அகப்பொருளாகக் காதலையும், புறப்பொருளாகப் பெரும்பகுதி வீரத்தையும் குறிப்பிடுவது புதிய செய்தியன்று. தமிழிலக்கண இலக்கியத்திறனாய்வுக்கு முன்னோடியாக அல்லது பெருமளவில் தொல்காப்பியத்தைத் தொட்டே இன்றுவரை எழுந்துள்ள ஆய்வுப்போக்குகள் அமைந்துள்ளன. விளக்கமுறை, விதிப்புமுறை என்ற பாகுபாட்டில் அமைந்துள்ள இலக்கணநூல்களின் அடிப்படையை  ஆராயும்பொழுது, தொல்காப்பியம் என்பது ஒரு விளக்கமுறை இலக்கணம் என்பர். இது தமிழின் இயல்பான இலக்கண வழக்கை எடுத்துச்சொல்கின்றதே தவிர, இன்னென்ன மாதிரியில்தான் இருக்கவேண்டும் எனப் பெரும்பாலும் வரையறுத்துக் கூறவில்லை. இதுகூறும் சமுதாயம் என்பது அக்காலத்தில் எப்படியெப்படி இருந்ததோ அப்படியே பிரதிபலிப்பதாக அமைந்துள்ளது எனலாம். ஆதலின் தொல்காப்பியம் என்பது கற்பனை நிலையில் நின்று ஒரு சமுதாயத்தை உருவாக்கவில்லை. இலக்கணநூல் வழியாக ஒரு சமுதாயத்தைக் காட்டுவது என்பது அரியசெயலாகும் எனினும், இலக்கணம் பல இலக்கிய நூல்களின் சாரத்தை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டமையால், இலக்கண நூல்வழிக் காணும் சமுதாயம், கற்பனைச் சமுதாயமாக இல்லாது, உண்மையும், கருத்து வலிமையும் உடைய ஒன்றாகவே அமையும் எனலாம். அதனடிப்படையில் அணுகும்பொழுது தொல்காப்பியமும், அதனை விவரிக்கும் சங்கஇலக்கிய சமுதாயமும், காப்பியக் கதைநகர்வுகளும், தமிழில் தோன்றிய மற்ற இலக்கியங்களும் ஆண், பெண்ணை மையமிட்ட அகப்புறப் பாகுபாட்டையும் அவற்றில் தோன்றும் காதல், போர் இயைபுகளையும், முரண்பாடுகளையும் தமிழிலக்கண இலக்கியப் பதிவுகளில் எவ்வாறு கட்டமைக்கப்பட்டுள்ளது என்பதனைக் கண்டறிந்து தமிழிலக்கியத் திறனாய்வுக்கு ஏதேனும் ஒரு பரிமாணத்தில் உந்துசக்தியாக அமையும் என்ற நம்பிக்கையில் இக்கட்டுரை எழுதப்பட்டுள்ளது.

Continue Reading →

சிறுகதை: தெருச் சருகுகள்

- - எம். ரிஷான் ஷெரீப், இலங்கை -பிணத்தை மடியில் வைத்துக் கொண்டு, அதனைக் கொஞ்சுவதாகப் பாவனை பண்ணிக் கொண்டு எவ்வளவு நேரம்தான் உட்கார்ந்திருக்க முடியும்? புஷ்பமாலா தனது கால்கள் விறைத்திருப்பது போல உணர்ந்தாள். காலை நீட்டவும் முடியாது, வேறு விதமாக உட்காரவும் முடியாது என்பதால் மிகவும் அவஸ்தைப்பட்டுக் கொண்டிருந்தாள். உடுத்திருந்த அசுத்தமான சீத்தைத் துணி அவளை அக் குழந்தைக்குத் தாயாகக் காட்டியது. காலையில் வரும்போது குடித்த வெறும் தேனீருக்குப் பிறகு எதுவும் கிடையாது. மத்தியானப் பொழுதுக்கு வெயில் ஏறியிருந்தது. பசித்தது. ஏஜண்ட்காரன் எதையாவது சாப்பிடக் கொண்டுவருவான் என்ற மெல்லிய நம்பிக்கை மனதுக்குள் ஓடியது. ஆனால் நிச்சயமில்லை. விகாரையைத் தரிசிக்க வரும் யாராவது புண்ணியவான்கள் அவள் மேலோ அந்தக் குழந்தையின் மீதோ ஏதேனும் பரிதாபப்பட்டு உணவாக எதுவும் போட்டுவிட்டுப் போனால்தான் உண்டு. விரித்து வைத்திருந்த வெள்ளைத் துணியில் சில்லறைகள், பத்து, இருபது ரூபாய் நோட்டுக்கள் சேர்ந்திருக்கின்றனதான். அவற்றை எடுத்துக் கொண்டு போய் ஏதாவது வாங்கி வந்து உண்ணும் நப்பாசையும் உள்ளுக்குள் எழுந்தது. சாத்தியமில்லை. ஏஜண்ட்காரன் எங்கிருந்தாவது நோட்டம் விட்டுக் கொண்டே இருப்பான். அவனது பார்வையைத் தாண்டிப் போய் எதுவும் செய்ய முடியாது. அவ்வளவு தைரியமில்லை. போன வாரம் இப்படித்தான். பணம் ஏதாவது ஒளித்து வைத்திருக்கிறாளா என குமாரியின் ஆடையை அவிழ்த்துப் பார்த்தார்கள். அவளால் ஒன்றும் செய்யமுடியாமல் போய்விட்டது. என்ன செய்ய முடியும்? வீரு வீரென்று பிரம்பால் அடிவாங்குவதை விடவும் ‘பாருய்யா பாரு..எங்கேயும் எதுவும் மறைச்சு வைக்கல’ என்று கத்தி அவளே உடுப்பை அவிழ்த்துக் காண்பித்தாள். அன்று முழுக்க அவள் எதுவும் சாப்பிடவில்லை. அழுது கொண்டே இருந்தாள்.

பிணத்தின் மீது இலையான்கள் மொய்த்துக் கொண்டே இருந்தன. அது பிணம் என்பது இலையான்களுக்கு எப்படியோ தெரிந்துவிட்டிருக்கிறது. இலையான்களால் எப்படியும் ஒரு பிணத்தை அடையாளம் கண்டுகொள்ள முடியும். இலையான்களால் மட்டுமல்ல. பிண வாடையை மோப்பம் பிடித்துத் தேடி வரும் நாய், பூனைகள் கூட பிணத்தை அடையாளம் கண்டு இழுத்துப் போக முயற்சிக்கும். அதனால்தான் புஷ்பமாலா பிணத்தைத் தனது மடியை விட்டு இறக்கவும் இல்லை. அங்கு இங்கென நகரவும் இல்லை. காசு போட்டுச் செல்லும் எவராலும் கூட அது பிணம்தான் என இன்னும் அடையாளம் கண்டுகொள்ள முடியவில்லை. அவர்கள் சந்தேகப்படக் கூட இல்லை. வெறுமனே அசுத்தமான ஆடைகளைப் பார்த்துக் கொண்டு அசூசை பட்டுக்கொண்டு தூரத்திலிருந்து காசை விட்டெறிந்துவிட்டுச் செல்கிறார்கள். எவனாவது கண்டுபிடித்து விட்டால் அவளும் அவளது கூட்டமும் சிறையில் கம்பியெண்ண வேண்டியதுதான். அவள் இதற்கு முன்பும் சிறைக்குப் போயிருக்கிறாள். அப்பொழுது அவள் சிறுமி. கஞ்சா வைத்திருந்ததற்காக அவளது அப்பாவைக் கைது செய்து கொண்டு போயிருந்தார்கள். அம்மாவுடன் அவள் அப்பாவைப் பார்க்கப் போயிருக்கிறாள். பொலிஸார் அடித்து அப்பா செத்துப் போனதால் அப்பாவைப் பிணமாகத்தான் வீட்டுக்குக் கொண்டு வந்தார்கள். புஷ்பமாலாவுக்கு எல்லாம் நன்றாக நினைவிருக்கிறது. அவளுக்கு அதுதான் பிரச்சினை. எதுவும் மறந்து தொலைய மாட்டேனென்கிறது. சின்னச் சின்ன விஷயங்கள் கூட நினைவிருக்கிறது. அவளும் பல விஷயங்களை மறந்துவிட தீராது முயற்சிக்கிறாள். ஒருபோதும் முடியவேயில்லை. முக்கியமாக மாதந்தோறும் அவளது வீட்டில் கிடக்கும் பிணங்கள். பல நாட்கள் இரவுகளில் அவள் தூங்காமல் விழித்திருந்திருக்கிறாள். என்னதான் அவர்களின் வாயில் அலறிவிடாமல் இருக்க பழந்துணியைத் திணித்து அடைத்திருந்த போதிலும் அவர்கள் வாய்க்குள்ளேயே கதறும் சப்தம் அவளது கனவில் கூடக் கேட்டுக் கொண்டேயிருக்கிறது.

Continue Reading →