‘‘போரில் நீ வென்றால், அதை நீ விபரிக்க வேண்டியதில்லை; தோற்றால், அதை விபரிக்க நீ அங்கிருக்கக்கூடாது!’ இரண்டாம் உலகப் போருக்குத் தீ மூட்டியவரும், ஜேர்மன் சர்வாதிகாரியுமான அடொல்ஃப் ஹிற்லர்தான் இதைச் சொன்னவர். ‘2009 மே 18இல் முடிவுக்கு வந்த தமிழீழப் போரில் விடுதலைப் புலிகள் எப்படித் தோற்றுப் போயினர்?’ என்ற வினாவுக்கு விடையளிக்கக்கூடாது என்பதற்காகவே அவ்வமைப்பின் மூலவர்கள் பலரும் கூட்டாக உயிரிழந்தார்களோ என இக்கூற்று எண்ணத் தூண்டுகின்றதல்லவா? இதேவேளை, விடுதலைப் புலிகளின் தோல்வி குறித்து, போரியல் வல்லுனர்களும் அரசியல் ஆய்வாளர்களும் புதிய புதிய எடுகோள்களையும் அனுமானங்களையும் ஊகங்களையும் முன்வைப்பதில் ஆளுக்காள் இதுவரைக்கும் சளைக்கவுமில்லை; இன்னமும் களைக்கவுமில்லை. எது எவ்வாறாயினும், நந்திக்கடலில் நடந்துமுடிந்த அவலத்தின் காரணங்களை ஒரு சாமானியனின் நோக்கில், நறுக்கென்று சொல்லிவிடும் சாமர்த்தியம், நான்கே நான்கெழுத்து வார்த்தை ஒன்றிடம் உண்டு. அதுதான் ‘துரோகம்!’
துரோகத்தின் ஒட்டுமொத்த விளைச்சலான முள்ளிவாய்க்காலில் முற்றுப்பெற்ற ஈழப்போரினால், ஈழத்தில் வாழ்ந்துவரும் தமிழ்பேசும் மக்களுக்கு இன்னல்களைத் தவிர இலாபமேதும் கிட்டியதில்லை. ஆயினும் இப்போரின் மூலமாக ஒருசில நல்ல இலக்கியங்களாவது வந்து கிடைத்திருக்கின்றனவே என எண்ணி ஓரளவு மனதைச் சமாதானப் படுத்திக்கொள்ள முடிகிறது. குறிப்பிட்ட காலம்வரை இருபக்கச் சமச்சீர்க் கொடுக்குப் பிடிகளுக்கிடையிலிருந்து இலக்கியம் படைக்கவேண்டிய இக்கட்டான சூழ்நிலை ஈழத்தமிழ்ப் படைப்பாளிகள் பலருக்கும் இருந்து வந்தது. ஒருபக்கக் கெடுபிடிகள் ஓய்ந்து தளர்ந்துள்ள போதிலும், மறுபக்க அச்சுறுத்தல்கள் முற்றாக மறைந்தமைக்கான அறிகுறிகள் ஏதுமில்லை. இவ்வாறான நெருக்கடிகளுக்கு மத்தியில்தான், தமிழிலக்கிய வரலாற்றில் மிக நீண்ட காலத்தின் பின்னர், போரிலக்கியத்திற்குப் புதியதொரு பரிமாணம் ஈழப்போரினால் கொண்டுவந்து சேர்க்கப்பட்டிருக்கின்றது என்ற உண்மையைத் தமிழிலக்கியத் துறைசார் விற்பன்னர்கள், விமர்சகர்கள் பலரும் ஒப்புக்கொள்ளத் துவங்கியுள்ளனர்.