நம் பண்டைத் தமிழர்கள் தம் கலை, கலாசாரம், பண்பாடு ஆகியவற்றில் மிக்க ஆர்வங்கொண்டு தாமனைவரும் ஆடிப் பாடிக் களிப்புற்றிருக்கக் கூத்துக்களை அமைத்துக் கூத்தும் ஆடிக் குலாவி மகிழ்ந்திருந்தனர். அன்று துணங்கைக் கூத்தும், குரவைக் கூத்தும் அவர்கள் மத்தியில் நிலவியிருந்தன. இவற்றில் துணங்கைக் கூத்து முன்னிலையில் சிறப்புற்றிருந்தது. துணங்கைக் கூத்து:- மகளிர் பலர் ஒன்று சேர்ந்து இரு கைகளையும் மடக்கி விலாவிடத்து அடித்துக் கொண்டு ஆடுவர். இவர்களுக்குத் தலைக்கை கொடுத்துத் தொடங்கி வைப்பர் ஆடவர். இதனைப் பேய்க் கூத்தென்றும், சிங்கிக் கூத்தென்றும் கூறுவர். ‘நிணந்தின் வாயள் துணங்கை தூங்க.’ (திருமுருகு. 56) என்னும் அடிக்கு ‘பழுப்புடையிருகை முடக்கியடிக்க, துடக்கிய நடையது துணங்கையாகும்’ என நச்சினார்க்கினியர் கூறியுள்ளார். இதுதான் துணங்கையின் இலக்கணமாகும். குரவைக் கூத்து:- துன்பம் வந்தவிடத்தும், இன்பம் பெருகிய பொழுதும், பக்தி மேலிட்டாலும் ஆயர்கள், வேடர்கள், குறவர்கள் முதலானோர் குரவைக் கூத்தாடுவது வழக்கம். மகளிர் பலர் சேர்ந்து கைகோத்து ஆடும் கூத்தைக் குரவைக் கூத்தென்பர். புதுமலர் மாலை சூடிய ஆடவர் வளையல் அணிந்த மகளிர்க்கு முதற்கை கொடுத்துக் குரவைக் கூத்தைத் தொடக்கி வைப்பர்.
இனி, தமிழ் இலக்கியங்களில் துணங்கை, குரவை ஆகிய இருவகைக் கூத்துக்களும் எவ்வாறு பேசப்படுகின்றன என்பது பற்றி ஆராய்வாம். புறநானூறு கடைச்சங்க காலத்தில் எழுந்த எட்டுத்தொகை நூல்களில் ஒன்றான புறநானூறு எனும் நூலில், வெம்மையான மதுவை விரும்பி உண்ட ஆடவர் புன்னைமரப் புதுமாலை அணிந்து, வளையல் அணிந்த மகளிர்க்கு முதற்கை கொடுத்துக் குரவைக் கூத்தும் ஆடுவர் என இப்பாடலை யாத்த மாங்குடி மருதனார் (இவரை மதுரைக் காஞ்சிப் புலவர் எனவும், மாங்குடி கிழார் எனவும் உரைப்பர்) என்ற புலவர் கூறியுள்ளார்.
‘வெப் புடைய மட் டுண்டு,
தண் குரவைச் சீர்தூங் குந்து;
தூவற் கலித்த தேம்பாய் புன்னை
மெல்லிணர்க் கண்ணி மிலைந்த மைந்தர்
எல்வளை மகளிர்த் தலைக்கை தரூஉந்து;’ – (பாடல் 24-5-9)