உலகமொழிகள் எல்லாம், வார்த்தைகளுக்கு தடுமாறிக் கொண்டிருந்த பொழுது நம் தமிழ் மொழியானது இலக்கண இலக்கியங்களை தன்னகத்தே உருவாக்கி செழிப்புற்றிருந்தது. அதில், குறிப்பாக உலகப்பொதுமறை எனப்போற்றப்படும் திருக்குறள் எல்லா துறைகள் பற்றிய உள்ளடக்கத்தையும் கொண்டிருந்தது. அண்மைக்காலத்தில் உலகநாடுகளில் அரசு மற்றும் தனியார் துறைகளில் வெற்றிக்குரிய தொழிலாக போற்றப்படும் வணிகம், வர்த்தகம், நிர்வாகம், நிதிமேலாண்மை போன்றவற்றின் அடிப்படைக்கொள்கைகள் நூற்றுக்கும் மேற்பட்ட உலகமொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட திருக்குறளில் இடம்பெற்றுள்ள கருத்துகளை ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.
வணிகம் அல்லது தொழில் தொடங்கும் முறை
எந்த ஒரு செயலையும் திட்டமிடாமல் தொடங்குவது பயனற்றதாகும். அதிலும் வர்த்தகம் செய்ய விரும்பினால் மிகுந்த கவனத்தோடு கள ஆய்வுப்பணி செய்து தான் தொடங்க வேண்டும். ஏனெனில், நாம் எதை வணிகம் செய்யப் போகிறோம், எப்படிச் செய்யப் போகிறோம், எவ்வளவு முதலீடு செய்யப் போகிறோம், வரவு செலவு எவ்வாறு அமையும் என்பது பற்றிய தீர்மானத்திற்குப் பிறகு தான் வணிகம் செய்ய தொடங்க வேண்டும் என்கிறார் வள்ளுவர். இதனையே,
“அழிவதுவும் ஆவதுவும் ஆகி வழிபயக்கும்
ஊழியமும் சூழ்ந்து செயல்” ( குறள் : 461 )
என்ற குறட்பாவில் எடுத்துரைக்கிறார். மேலும், எந்தத் தொழிலையும் செய்யத் தொடங்கும் பொழுது அதற்கு முதலில் ஏற்படும் செலவையும், செலவுக்குப் பின் உண்டாகும் வரவையும், எதிர்காலத்தில் அத்தொழில் கொடுக்கும் இலாபத்தையும் ஒப்பிட்டுப் பார்த்து ஆராய்ந்து ஏற்புடையதாக இருந்தால் அத்தொழிலைச் செய்ய வேண்டும் என்ற நிதி மேலாண்மையின் கொள்கையின் முக்கியத்துவத்தை வலியுறுத்துவது இக்குறளின் கருத்தாகும்.