ஈழத்தின் அதிமூத்த எழுத்தாளரும் ஓய்வு பெற்ற ஆசிரியருமான குறமகள் என அழைக்கப்படும் வள்ளிநாயகி இராமலிங்கம் அவர்கள் நேற்று செப்டம்பர் 15 ஆம் திகதி ரொறன்ரோவில் காலமானார். புனைகதை…
எழுத்தாளர் குறமகள் (வள்ளிநாயகி இராமலிங்கம்) அவர்களின் மறைவு பற்றிய செய்தியினை முகநூல் வாயிலாக அறிந்தேன். ஈழத்தமிழ் இலக்கியத்தில் முக்கியமான எழுத்தாளரிவர். குறிப்பாக ஈழத்தமிழ் இலக்கியத்திற்கு வளமை சேர்ந்த ஆரம்பகாலப்பெண் படைப்பாளிகளில் முக்கியமானவர்களிலொருவர் இவர்.இறுதிவரை சளைக்காது இலக்கியப்பங்களிப்பு செய்து வந்தவர்.
இத்தருணத்தில் இளவாலை ஜெகதீசனை ஆசிரியராகக்கொண்டு வெளிவந்த பொதிகை (கனடா) சஞ்சிகைக்காக இவருடனான நேர்காணலுக்காக இவரைச்சந்தித்திருந்ததை நினைவுகூர்கின்றேன்.
எழுத்தாளர் எஸ்.பொ. கனடா வந்திருந்தபோது அவருடனான உரையாடலின்போது அவர் இவரைப்பற்றிப்பெருமையாகக் கூறிய பல விடயங்கள் நினைவுக்கு வருகின்றன. இவருடன் இணைந்து மேலும் மூவருடன் சேர்ந்து ‘மத்தாப்பு’ என்னுமொரு குறுநாவலை வீரகேசரியில் எழுதியதை அவர் அப்பொழுது நினைவு கூர்ந்திருந்தார்.
மேலுமவர் கூறிய இன்னுமொரு விடயமும் நினைவிலுள்ளது. அக்காலத்தில் பெண்கள் இலக்கியம், இலக்கியக்கூட்டங்களுக்கெல்லாம் செல்வது மிகவும் அரிதாகவிருந்த காலகட்டம். அக்காலகட்டத்தில் குறமகள் அவர்கள் மிகவும் ஆர்வத்துடன் அவ்விதமான இலக்கியக்கூட்டங்களிலெல்லாம் கலந்து கொண்டிருந்தார் என்பதையும், அவ்விதமான சமயங்களில் கூட்டம் முடிந்ததும் தாங்கள் அவருக்குத்துணையாகச் சென்று பஸ்ஸில் ஏற்றிவிட்டு வருவது வழக்கமென்றும் குறிப்பிட்டதைத்தான் கூறுகின்றேன்.
இவரது இழப்பு தமிழ் இலக்கியத்துக்கு, முக்கியமாக ஈழத்தமிழ் இலக்கியத்துக்கு பேரிழப்பே. இவரது இழப்பால் வாடும் அனைவர்தம் துயரிலும் பங்குகொள்கின்றேன்.