[உரிய நேரத்தில் எமக்குக் கிடைக்காததால் இவ்வறிவித்தல் உரிய நேரத்தில் பிரசுரமாகத்தவறி விட்டது. ‘பதிவுகள்’ இணைய இதழுக்கு அறிவித்தல்களை அனுப்புவோர் குறைந்தது ஒரு வாரத்துக்கு முன்பாக அனுப்பும்படி கேட்டுக்கொள்கின்றோம் உரிய நேரத்தில் இதனைத்தவற விட்டமைக்காக வருந்துகின்றோம். ஒரு பதிவுக்காக இவ்வறிவித்தல் இங்கு பிரசுரமாகின்றது.- பதிவுகள்-]
வவுனியாவில் 23.01.2017 திங்கள்கிழமை அன்று காலை 8.00 மணியிலிருந்து சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டம்.
தமிழர் தாயகத்தில் கையளிக்கப்பட்டு கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடிக்கண்டறியும் குடும்பங்களின் சங்கத்தினர், நான்கு முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தி, சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தவுள்ளதாக இலங்கை ஜனாதிபதி, பிரதமர் மற்றும் எதிர்க்கட்சித்தலைவர் ஆகியோருக்கு கையொப்பமிட்டு அறிவுறுத்தல் கடிதம் ஒன்றை இன்று (20.01.2017 வெள்ளிக்கிழமை) அனுப்பி வைத்துள்ளனர். வவுனியாவில் மாவீரன் பண்டாரவன்னியன் உருவச்சிலைக்கு முன்பாக எதிர்வரும் 23.01.2017 திங்கள்கிழமை அன்று காலை 8.00 மணியிலிருந்து சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாக குறித்த சங்கத்தின் வவுனியா மாவட்டத்தலைவி திருமதி ஜெயவனிதா காசிப்பிள்ளை அறிவித்துள்ளார்.
குறித்த கடிதத்தின் முழுவிவரமும் வருமாறு:
21.01.2017
சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடவுள்ள எமது இறுதி முடிவை தங்களுக்கு அறியப்படுத்தல் தொடர்பாக,
தமிழர் தாயகத்தில் கையளிக்கப்பட்டு கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடிக்கண்டறியும் குடும்பங்களின் சங்கத்தினராகிய நாங்கள், சிறீலங்கா அரச படைகள் மற்றும் அரச துணை ஆயுதகுழுக்களால் எமது உறவுகள் கடத்திச்செல்லப்பட்டமையை கண்கண்ட சாட்சிகளாக உள்ளோம்.