இன்றைய அறிவியல் உலகில் அண்டவெளி பிரபஞ்சத்தை பற்றி (Universal) நொடியொரு பொழுதும் ஆராய்ந்து கொண்டே வருகின்றனர். நீண்ட மனித வாழ்வின் அறிவியல் தேடலும், நவீன அறிவியல் கருவிகளின் வரவுமே இவ்வுலகை இன்று ‘அறிவியல் யுகமாய்’ மாற்றியிருக்கின்றது. ஆனால் பண்டைய காலம் அப்படி இல்லை. ஊழி காலத்துள் (பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு) வாழ்வதற்கான போராட்டம் மிகப்பெரும் சவாலாக விளங்கியது. பின்னர் தேவைகள் ஒருபுறம் பூர்த்தியாக மற்றொரு புறம் இயற்கையைப் பற்றி ஆய்வினில் இறங்கினர். அதனால் இயற்கைக்கு உட்பட்ட இயல்பான வாழ்வினை அதனோடு இயற்கைப் புறவெளியையும் ஆய்ந்தனர். அறிவியலுள் ‘வானியல் அறிவும் பண்டைத் தமிழகத்துள் மிகுந்திருந்தது. வான்வெளியில் நிகழும் மாற்றங்கள், கோள்களின் இயக்கப் போக்குகள் அதனால் புவியில் ஏற்படும் மாற்றங்கள், பருவ மாற்றங்கள் என பலவற்றையும் ஆராய்ந்து அதற்கேற்ப தங்கள் வாழ்க்கையை அமைத்தனர்.
பண்டைய இந்தியாவிலும், ‘வானியல் அறிவு’ சிறப்பாக இருந்தது என்பர். “ரிக் வேதத்தின் மூலம் வேதகாலத்து இந்தியர்கள் வானியல் சிந்தனைகள், சூரியனின் பாதை சந்திரனின் பருவங்கள், கோள்களின் இயக்கம் போன்றவற்றைப் பற்றிய தேவையான அறிவைப் பெற்றிருந்தனர் என்று பொதுவாகக் கருதப்படுகிறது. சந்திரனை அடிப்படையாக வைத்து மாதங்கள் நிர்ணயம் செய்யப்பட்டன. சந்திரனுக்கு ‘மாச கிருத்தா அல்லது மாதத்தை உருவாக்குபவர்’ என்ற பெயரும் உண்டு. சந்திர மாதங்களின் பெயர்கள் எந்தெந்த நட்சத்திரங்களில் பௌர்ணமி ஏற்படுகிறதோ அந்தந்த நட்சத்திரங்களின் பெயர்கள் சூட்டப்பட்டன. ‘சந்திரனின் வீடுகள்’ (Iunarmansions) என்றழைக்கப்படும் நட்சத்திர இராசி முறை இந்தியாவிற்கே உரித்தான ஒன்றாகும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
(பக். 67 கு.வி. கிருட்டிணமூர்த்தி, அறிவியலின் வரலாறு)
தமிழ் மாநிலத்துள் ஐநில மக்களின் வாழ்வும் இயற்கைச் சூழலுக்கேற்ப அமைந்திருந்தது. கார், கூதிர், முன்பனி, பின்பனி, இளவேனில், முதுவேனில் ஆகிய 6 – வகை பருவங்களை வகுத்து, அப்பருவங்களுக்கு ஏற்ப வாழ்வு அமைத்து இயற்கை வாழ்வு வாழ்ந்தனர். ஞாயிறு, திங்கள் பிற கோள்கள், நட்சத்திரங்களின் இயல்புகள் சிலவற்றை கண்டறிந்தனர். அதன் அடிப்படையில் கால கணிதம் தோற்றுவித்தே ஒவ்வொரு நிகழ்வினையும் செய்தனர். பிறப்பு முதல் இறப்பு வரையிலான சடங்குகள் வரையும் வானின் செயல்களை வைத்தே நிகழ்வினை செய்தனர்.
Continue Reading →