வாசிப்பும், யோசிப்பும் 264 : விமல் குழந்தைவேலின் வெள்ளாவி பற்றி….

விமல் குழந்தைவேலின் 'வெள்ளாவி'எழுத்தாளர்  விமல் குழந்தைவேல்விமல் குழந்தைவேலுவின் ‘வெள்ளாவி’ புகலிடத்தமிழர்கள் மத்தியிலிருந்து வெளிவந்த நாவல்களில்முக்கியமான நாவல். அம்பாறை மாவட்டத்திலுள்ள கோளாவில் பகுதி வட்டாரத் தமிழில் நாவல் எழுதப்பட்டிருக்கின்றது. ஈழத்தில் வெளிவந்த வட்டாரத்தமிழில் வெளிவந்த நாவல்களில் இந்நாவலை முதலிடத்தில் வைக்கலாம். ஆடை துவைக்கும் சமூகத்தைச்சேர்ந்த பரஞ்சோதி என்னும் பெண் பாத்திரத்தை மையமாக வைத்துப் பின்னப்பட்டுள்ள நாவல் பல பிரச்சினைகளைத் தொட்டுச் செல்கின்றது. சமூக, பொருளியல் மற்றும் அரசியற் பிரச்சினைகளை நாவல் வெளிப்படுத்துகின்றது. ஆணாதிக்கச் சமூகத்தில். அதுவும் தாழ்த்தப்பட்ட சமூகமொன்றில் பிறக்கும் சமூகமொன்றில் பிறக்கும் பெண்ணொருத்தி எத்தனை விதமான உளவியற் துன்பங்களை அடைய வேண்டியிருக்கின்றது என்பதை பரஞ்சோதி,, அவளது தாய் மாதவி ஆகியோர் தம் வாழ்வில் அடையும் அனுபவங்கள்: வெளிப்படுத்துகின்றன. பெண்ணைப்போகப்பொருளாகப் பயன்படுத்தும் போடியார் எவ்வளவு இயல்பாக மாதவியின் மகளை ஓரிரவில் பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கிச் செல்கின்றார். இந்த உண்மையை அறியாத பரஞ்சோதி , தன் வயிற்றில் வளரும் குழந்தைக்குத் தந்தை தன்னை விரும்பிய வரதனாக இருக்குமோ என்று சந்தேகம் அடைகின்றாள். இச்சமயம் நடந்த உண்மையை அறிந்த தாயார் மாதவி போடியாரிடம் சென்று சண்டை போட்டு விட்டு வந்தவள் அந்தத் துயர் காரணமாகவே இறந்து விடுகின்றாள். வயிற்றில் குழந்தையுடன் தனித்து அநாதரவாக விடப்பட்ட பரஞ்சோதியை அரவணைத்துத் அவளது பிறக்கப்போகும் குழந்தையுடன் தன் வாழ்க்கைத்துணையாக ஏற்றுக்கொள்கின்றான் நாகமணி. பிறக்கும் குழந்தை அரவிந்தன் வளர்ந்து பெரியவனாகி இயக்கத்தில் இணைந்து போராடப்போவதுடன் நாவல் நிறைவு பெறுகிறது. நாவலின் பிரதான விடயங்கள் இவையே.

இந்நாவலின் முக்கியமான சிறப்புகளாக நான் கருதுவது:

1. வட்டாரத் தமிழைப் பதிவு செய்தது.
2. கோளாவில் பகுதியில் நிலவிய சமுதாய அமைப்பு, அவ்வமைப்பில் நிலவிய சீர்கேடுகள், பெண்கள் குறிப்பாகத் தாழ்த்தப்பட்ட சமூகமொன்றினைச் சேர்ந்த பெண்கள் போடியார் போன்றவர்களிடமிருந்து எதிர்கொள்ளூம் பாலியல் ரீதியிலான வன்முறைகள், நிர்ப்பந்தங்கள் ஆகியவற்றை வெளிப்படுத்தியிருப்பது. பதிவு செய்திருப்பது.
3. தமிழர்களின் ஆயுதப்போராட்டத்தில் போராட்டத்தின் பெயரில் நடைபெற்ற மனித உரிமை மீறல்கள் , உதாரணமாக உளநலம் குன்றிய பெண்ணொருத்தி இராணுவ உளவாளியென்று கருதப்பட்டுத் தண்டிக்கப்படுவது போன்ற , விடயங்களைப் பதிவு செய்திருப்பது. நாவல் மட்டக்களப்புச் சிறை உடைப்பு பற்றியும் நினைவு கூருகின்றது.

Continue Reading →