பயணியின் பார்வையில் – அங்கம் 20: அச்சில் வெளிவராத காசி. ஆனந்தனின் வெண்பாக்களை பதிவேற்றிய செங்கதிரோன் கோபாலகிருஷ்ணனுடன் சந்திப்பு

செங்கதிரோன் கவிஞர் காசி ஆனந்தன்திருகோணமலையிலிருந்து புறப்பட்டு, மட்டக்களப்பில் ஆறுமுகத்தான் குடியிருப்புக்கு சமீபமாக ஓரிடத்தில் இறங்கினேன். அந்தப்பிரதேசத்தில் எஹெட் என்ற வெளிநாட்டு தன்னார்வ தொண்டுநிறுவனம் சுனாமியால் பெரிதும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீடுகள் அமைத்துக்கொடுத்திருக்கிறது. அவ்வாறு பாதிக்கப்பட்ட ஒரு குடும்பம் பாண்டிருப்பிலிருந்து அங்கு வந்து குடியேறியிருந்தது. அந்தக்குடும்பத்தலைவனும் அந்தக்குடும்பத்தைச்சேர்ந்த மேலும் சில உறுப்பினர்களும் போர்க்காலத்தில் ஆயுதப்படைகளினால் காணாமலாக்கப்பட்டவர்கள். சோதனைமேல் சோதனை போதுமடா சாமி என்பார்கள். அந்தக்குடும்ப உறுப்பினர்கள் சிலர் குறிப்பாக குழுந்தைகள் உட்பட பத்துப்பேரளவில் சுனாமி கடற்கோளில் காணாமல் போய்விட்டார்கள். அந்தக்குடும்பத்தை சாமி காப்பாற்றியதாகத்தெரியவில்லை. அடுத்தடுத்து போரும், சுநாமியும் காவுகொண்ட பல குடும்பங்கள் இலங்கையில் இழப்புகளையும் கடும் துயர்களையும் கடந்து வந்துள்ளன. குறிப்பிட்ட பாண்டிருப்பு குடும்பத்தினரை சுநாமி காலத்திலும் சென்று பார்த்திருக்கின்றேன். அதில் ஒரு குடும்பத்துப்பிள்ளைகளுக்கு எமது இலங்கை மாணவர் கல்வி நிதியமும் உதவுகிறது.

பாண்டிருப்பில் வசித்தவரும் முன்னாள் அதிபரும் எனது பிரியத்திற்குரிய மூத்த கவிஞருமான சண்முகம் சிவலிங்கம் ஊடாகவே அந்தக்குடும்பத்தின் பிள்ளைகளுக்கு நிதியுதவியை ஆரம்பகட்டத்தில் வழங்கினோம். கவிஞர் மறைந்த பின்னர் கல்முனை பெரியநீலாவணை விஷ்ணு மகா வித்தியாலயத்தின் ஊடாக அந்தப்பிள்ளைகளை பராமரித்து வருகின்றோம். அந்தக்குடும்பத்தின் உறவினர்கள் சிலர் ஆறுமுகத்தான் குடியிருப்புக்கு சமீபமாக வசிப்பது அறிந்து அவர்களையும் பார்க்கச்சென்றேன். போர்க்காலத்தில் கொல்லப்பட்ட அந்த வீட்டின் குடும்பத்தலைவரினதும் அவரது மைத்துனரதும் உடல்கள் கண்டுபிடிக்கப்படவேயில்லை.

இவ்வாறு போரினாலும் சுநாமி கடற்கோள் இயற்கை அநர்த்தத்தினாலும் பாதிக்கப்பட்ட பல குடும்பங்களின் குடியிருப்புத்தேவையை வெளிநாட்டு தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் பூர்த்தி செய்யமுன்வரும் வேளைகளில், மற்றும் ஒரு மதம் சார்ந்த அமைப்பு, அம்மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கும் போர்வையில் தமது மதத்திற்கு மாற்றும் வேலைகளை கச்சிதமாகச்செய்துவருகின்றன.

Continue Reading →

சிறுகதை: விதி சதி செய்து விட்டது மச்சான்!

சிறுகதை வாசிப்போமா?மழை தூறிக் கொண்டிருந்தது. காரில்,வானில் வந்த சகோதரங்களும்,சப்வேய்யில் ஏறி ,விரைவு பேருந்து எடுத்த வதனாவின் சினேகிதி சந்திரா, அவர் கணவர் தில்லையும்…என ‘பியரன் சர்வ தேச விமான நிலைய’த்திற்கு வந்தவர்கள், நேரத்தைப் போக்காட்ட‌ …. கதைத்துக் கொண்டு கொண்டிருந்தார்கள். லண்டனிலிருந்து வதனாக் குடும்பம் கோடை விடுமுறையைக் கழிக்க கல்கறி நகரத்திற்கு பறக்கிறது.அந்த விமானம் கல்கறிக்கு நேரடியாகப் போகவில்லை. அவர்களை பியர்சனில் இறக்கி ,வேற விமானத்தில் மாற‌ விட்டுப் போகிறது.

விமானம் ஏற்கனவே இறங்கி விட்டதை மேலே தெரிகிற ‘கணனி’த் திரை காண்பிக்கிறது.

பொதிகளை இறக்கிற போதான சுங்க சோதிப்பு போதுமானது தான்,ஆனால் திரும்ப ஏற்றுறதிற்கும் நடைபெறுகிறது.உள்ளே இருக்கிற போது முகநூலில் தொடர்பு கொள்ள முடியாது…போல… பிரச்சனைகள் இருக்க வேண்டும். அலை பேசி,மடிக்கணனிகளை ‘டேர்ன் ஓவ்’ பண்ண வைத்திருப்பார்களோ? பிறகு, 5 மணி நேரத்திலே அடுத்த விமானம் எடுக்க இருக்கிறார்கள். அடுத்த விமானம் எடுக்க‌ இரண்டு மணி நேரத்திற்கு முதலும் உள்ளே சென்று விட வேண்டும் அந்த இடைப்பட்ட நேரத்திலேயே சந்திக்கவே ஆவலுடன் வருகிறார்கள். ..அந்த நேரமும் சுருங்கிறது என்ற கவலை.

ஒரு மணி நேரமும் பறந்து விட்டது. இன்னுமா…விடவில்லை? என கிருபா சலிக்கிறார்.பொறுமை இழப்பு சிறிது எட்டிப் பார்க்கிறது.

“இப்ப, இவர்களிற்கு இருக்கிற பயத்தாலே 2 மணி நேரம் எடுத்து தான் விடுகிறார்கள்” என தில்லை அனுபவத்தில் முணுமுணுக்கிறார்.

அவர்கள் வாகன தரிப்பு நிலையத்தில் நிறுத்தி விட்டு பயணிகள் விமானம் ஏறுகின்ற பகுதியியாலேயே வந்த போது, நிறைய இடத்தை கயிறுகள் கட்டிய ‘லைன்’கள் பிடித்துக் கொண்டிருந்தன. பயங்கரவாதிகளின் கை ஓங்கி விட்டது போல ….பாதுகாப்புச் சோதனைகள். ‘இது ஒரு சர்வ தேச விமான நிலையமா?என நொடிச் சந்தேகம் கூட வருகிறது. தீமையிலும் ஒரு… நன்மை, அதனால் பொதிகளின் நிறைகள் குறைந்தது ‌விமானத்திற்கு நல்லம் தான். உள்ளே , முந்திய மாதிரி அன்பளிப்புக் கடைகள் இல்லாதையும், உணவகங்கள் பல காணாமல் போனதையும், ஒரே ஒரு ‘ரிம் ஹோற்றன்’ கோப்பிக் கடை மட்டும் பாம்புக் கீயூவோடு இருப்பதையும் பார்த்து வந்தார்கள்.

Continue Reading →