எந்த வகை இலக்கியமாயினும் முற்போக்கு சிந்தனையோடு படைக்கும் போது தான் நிலை பெறுகின்றது. முக்காலத்திய ஆய்வில் கடந்த கால உண்மைகளை வெளிக் கொணர்வதும், நிகழ்கால பார்வையோடு சுட்டி உரைப்பதும், அவை எதிர்காலத்திய தேவை மற்றும் புரிதலுக்கானதாகவும் அமையும் போது அஃது முற்போக்கு இலக்கியமாய் வலம் வரும். அவ்வகை தன்மையில் ‘இன்குலாப்பின் ஒளவை’ 20 -ஆம் நூற்றாண்டின் சிறந்த கலைப்படைப்புகளுள் ஒன்றாகக் கொள்ள முடியும்.
இதற்குரிய அடிப்படை காரணம் என்னவெனில், அவர் பண்டைய கால தமிழகச் சூழலை பார்க்கும் கோணமே முதன்மைச் சிறப்பு. சமூகத்துள் நிகழ்ந்த பெண்ணுடிமைத் தனத்திற்கு எதிரான அவரின் குரல், மக்களின் பார்வையும், மறைக்கப்பட்ட வரலாற்றை மீட்டெடுப்பதற்கான கூர்மைச் சிந்தனையும் முதன்மை அம்சம் பெற்று ‘ஒளவை நாடகம்’ திகழ்கின்றது. கேள்விகளை முன் வைப்பதோடு காரணங்களையும் முன் வைத்து விமர்சன ரீதியாக பண்டைத் தமிழகத்தை ஆய்ந்தே இந்நூல் ஆக்கப்பட்டுள்ளது.
இலக்கியம் மக்களுக்கானதாக இருக்கும் பட்சத்திலேயே அவை சிறந்த கலைப் படைப்பாக அமைய முடியும் என்பதை நோக்காகக் கொண்டுள்ளார். அவ்வகையில் அவர் சமூகத்திற்கு பல கருத்துக்களை முன் வைத்துள்ளார். அவற்றை பின்வருமாறு வகைப்படுத்தலாம்.
1. பண்டைய இனக்குழு சமூகத்தின் மிச்ச சொச்சமும் மன்னர் உடைமை சமூகத்தின் அதிகார மையமும்.
2. பாணர்களின் நிலையும், ஐந்நில மக்களின் வாழ்வும்.
3. ஒளவையின் கருத்தியலும், ஒளவைப் பற்றிய பார்வையின் சிக்கலும்.
4. பெண்ணடிமைத் தனமும் விடுதலைக்கான முன்னேற்பாடும்.
என 4 வகையில் அடிப்படையாக இந்நூலை வகைப்படுத்த முடிகின்றது.