அவுஸ்திரேலியாவில் இயங்கும் எமது இலங்கை மாணவர் கல்வி நிதியம், இலங்கையில் நீடித்த போரினால் பெற்றவர்ளை, குடும்பத்தின் மூல உழைப்பாளியான தனயனை இழந்த ஏழைத்தமிழ் மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்காக 1988 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. அன்றிலிருந்து தங்கு தடையின்றி இயங்கும் இந்தத்தன்னார்வத்தொண்டு நிறுவனம், இலங்கையில் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இதுவரையில் ஆயிரக்கணக்கான மாணவர்களுக்கு உதவி, அவர்களில் நூற்றுக்கணக்கான மாணவர்களை பல்கலைக்கழகம் வரையில் அனுப்பியிருப்பதுடன் தொடர்ந்தும் செயலூக்கமுடன் பணியாற்றிவருகிறது. அனைத்து மாணவர்களுக்கும் பல்கலைக்கழக அனுமதி கிடைப்பதில்லை. அவ்வாறு அங்கு செல்லமுடியாத மாணவர்கள் தொழில் நுட்பக்கல்லூரிகளில் இணையும் வரையிலும் இந்நிதியம் உதவி வருகிறது. கடந்த காலங்களில் திருகோணமலை மாவட்டத்தில் பல கிராமங்களைச்சேர்ந்த மாணவர்கள் இந்நிதியத்தினால் பயனடைந்தனர்.
1988 முதல் எமது நிதியத்தின் திருகோணமலை மாவட்ட கண்காணிப்பாளராக இயங்கியவர் பல் மருத்துவர் ‘ஞானி’ ஞானசேகரன். அர்ப்பணிப்புள்ள தொண்டரான இவர் எளிமையாக வாழ்ந்து அந்தப்பிரதேசத்தில் போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மகத்தான சேவையாற்றியவர். அங்கிருந்த நெருக்கடிகளிலிருந்து தப்பிவருமாறு வெளிநாடுகளிலிருந்த அவருடைய நண்பர்கள் அழைத்தபோதும் அவர் அந்தப்பிரதேச மக்களை விட்டு விலகி வரவில்லை. வீரகேசரியில் நான் பணியாற்றிய காலத்தில் திருகோணமலை மாவட்ட செய்திகளை அவர் அடிக்கடி தந்தமையால் எனக்கும் நெருங்கிய நண்பரானார். திருகோணமலையில் போர் மேகங்கள் சூழ்ந்தவேளைகளில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வெளிநாட்டு தூதரகங்களின் ஆதரவையும் பெற்றுக்கொடுத்தவர்.
ஒரு சமயம் அங்கு நிகழ்ந்த குண்டுத்தாக்குதலில் படுகாயமடைந்த ஒரு தமிழ்ச்சிறுமியை ஞானியே கொழும்புக்கு அம்புலன்ஸில் அழைத்துவந்து சிகிச்சைக்கு ஏற்பாடு செய்ததுடன், வீரகேசரி நிறுவனத்தின் அதிபர்களின் ஆதரவுடன் நிதிசேகரித்து மருத்துவச்செலவுகளுக்கும் வழங்கியதுடன், அச்செய்தியின் மூலம் வெளிநாட்டு தூதரகங்களினதும் பார்வை திருகோணமலை மீது படருவதற்கு வழிகோலியவர். அவர் செயலூக்கமுள்ள (Activist) தொண்டர். சப்பாத்தும் அணியமாட்டார். காலில் இறப்பர் சிலிப்பருடன் திருகோணமலையில் அனைத்து குக்கிராமங்களுக்கும் சென்று மக்களின் தேவைகளை கவனித்தவர். கொழும்புக்கு வரும்பொழுதும் அவர் காலில் தேய்ந்துபோன சிலிப்பர்களைத்தான் பார்த்திருக்கின்றேன். அவ்வளவு எளிமையான மனிதப்பிறவிதான் பல்மருத்துவர் ஞானி. 1988 இல் அவுஸ்திரேலியாவில் இலங்கை மாணவர் கல்வி நிதியத்தை தொடக்கியபோது எமக்கு உதவுவதற்கு முன்வந்த ஞானி, திருகோணமலை மாவட்ட மாணவர் கண்காணிப்பாளராக இயங்கினார். அக்காலப்பகுதியில் இம்மாவட்டத்தில் மூதூர், சம்பூர், தம்பலகாமம், கிண்ணியா, பச்சநூர், கட்டைப்பறிச்சான், சேனையூர், கூனித்தீவு முதலான கிராமங்களில் போரினால் பாதிக்கப்பட்ட ஏழைத்தமிழ் மாணவர்களுக்கு நிதியம் உதவியது.
Continue Reading →