காப்பியம் என்பது காப்புடையது. பொருள் தொடர் நிலையில் அமைவது. அதாவது ஒரு மொழியை சிதைக்காமல் காப்பது காப்பியம். இதையே இலக்கண மரபு, மரபின் இயல்பு வழுவாமல் காத்தல் என்று கூறுகிறது.
காப்பு – என்னும் சொற்பொருள்
பொதுவாக தமிழில் தக்க கருத்தியல்களைத் தரும் இலக்கியங்களாகத் திகழ்வன இதிகாசங்கள் என்று சொல்லத்தகும் மகாபாரதமும், இராமாயணமும்; காப்பியங்கள் என்று அழைக்கப்படும் பெருங்காப்பியப் பண்புகளுக்குட்பட்ட காப்பியங்களும்; சங்க இலக்கியங்கள் என்று அழைக்கப்படும் எட்டுத்தொகை பத்துப்பாட்டு நூல்களும் அதன் அமைப்பியலை ஒத்த சிற்றிலக்கிய நூல்களும் தான். இவற்றில் கூட முதலாவதாகச் சொல்லப்பட்ட இதிகாசங்கள் தான் நமக்கான எல்லா கருத்தியல்களையும் சொல்லுகின்றன.
இதிகாசங்களால் சொல்லப்பட்ட நமக்கான பண்பாட்டு – கலாச்சார – பழக்கவழக்கங்கள் யாவும், புனைகதைகளாகவும் (கட்டுக் கதைகளாகவும்), தொல்புராண கதைகளாகவுமே சொல்லப்பட்டுருப்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு தொல்புராண இதிகாசங்களில் சொல்லப்பட்ட கருத்தியல்கள் தான் பின்னால் வந்த காப்பியங்கள் மூலம் காட்சிகளாக – நாடகப்பாங்கில் காட்டப்பட்டுள்ளன அல்லது விளக்கப்பட்டுள்ளன. இப்படி காப்பியங்களால் விளக்கப்பட்ட காட்சியுருக்களே சங்க இலக்கியங்கள் மூலமாகவும் அதைத் தொடர்ந்து வந்த பிற இலக்கியங்கள் மூலமாகவும், ஒருவித விமரிசன நோக்கில் பிரித்தறியப்பட்டது. இப்பிரிவுகள் அனைத்தும் அதன் தன்மையை அல்லது உட்பொருளை விளங்கிக்கொள்ள வந்தவையாகும். எனவே தான் சங்க இலக்கியங்கள் பெரும்பாலும் தனது எல்லா கருத்துரைகளையும் அகம் – புறம்; காதல் – வீரம்; களவு – கற்பு; தலைவன் – தலைவி என இரண்டு வகைமைக்குள் அடக்கி இருக்கக்காண்கிறோம். இவையல்லாமல் எழுந்த மற்ற இலக்கியங்கள் யாவும் புதிதாக எதையும் சொல்வதாக இல்லை. மாறாக ஏற்கனவே தொன்றியுள்ள இதிகாசங்கள், காப்பியங்கள், இலக்கியங்கள் என்ற மூன்று வகைமைக்குள் இருக்கும் உண்மைகளைத் தேடுவதாகவோ அல்லது மறுப்பதாகவோ இருப்பது கவனிக்கத்தக்கது. இதன் அடிப்படையில் தான் தமிழ் நூல்கள் அனைத்தும் இலக்கியங்கள், காப்பியங்கள் என்ற இரண்டே வகைமைக்குள் அடக்கப்பட்டுள்ளன.