இந்திய நாகரிகத்தின் பண்பாட்டுக்கூறுகளாகக் காலங்காலமாக திகழ்ந்து வருபவை கடந்தகால மக்கள் விட்டுச்சென்ற வரலாற்றுச் சான்றுகளே. குறிப்பாக தமிழகத்தில் நம் முன்னோர்கள் விட்டுச் சென்றவை கோயில்கள். இக்கோயில்கள் சமய வரலாற்றை மட்டும் எடுத்தியம்புவனாக காணப்பெறவில்லை. அதையும் தாண்டி கலை, பண்பாடு, நாகரீகம், பொருளாதாரம் என பல விடயங்களையும் கோயில்கள் பதிவுசெய்கின்றன. இக்கோயில்கள் வழிபாடுகளை முதன்மையாகக் கொண்டு திகழ்கின்றன. வழிபாடுகள் இனக்குழு வாழ்விலிருந்தே தொடங்கப் பெற்றவை. இயற்கையைப் போல் வாழ தலைப்பட்ட அச்சமூக மனிதர்கள் இயற்கையிலிருந்தே தமக்கான அடிப்படைக்கூறுகளை மெய்யக்கற்றுக்கொண்டனர். விலங்குகளை வேட்டையாடக்கூடிய வேட்டைச்சமூகம் அதனைப் பயன்படுத்த கற்றுக்கொண்டதன் பின்புலத்தின்தான் வேளாண் சமூகமாக கால்கொள்கிறது. வேளாண்சமூகம் உற்பத்தி சமூகமாக பரிணமத்தின் தொடக்க நிலையில்தான் சடங்குகளும், வழிபாடுகளும், உரிமைகளும், உடமைகளும் தனிமனிதர்களின் கைகளில் தஞ்சம் அடைந்தன.
அச்சூழலியல் நோக்கில் வழிபாட்டையும் அதனோடு இணைத்துப் பேச வேண்டிய கால்நடைசமூக வாழ்வியலும் ஒன்றுக்கொன்று தக்க முரணில்லாமல் பின்னிப் பிணைந்தே செயலாற்றியுள்ளன. இவற்றில் தெய்வ உருவாக்கங்கள் முதன்மையளிக்கின்றன.பொதுவாக தெய்வப் பரவுதல் உற்பத்திச்சமூகத்திற்கும் கால்நடைச் சமூகத்திற்கும் சில காரணிகளை தொகுத்தளித்துள்ளது.
ஆதி மனிதன் இயற்கையின் ஊடாட்டத்தால் பிணையப்பட்டவன். புரிதலற்ற வாழ்வியல்கூறுகள் சமநிலையற்றதன்மையும், ஒழுங்குமுறையற்ற வாழ்க்கைச்சூழலும் அச்சமூக மனிதர்களில் வாழ்நிலையில் ஆழ்ந்த தாக்கங்களை உருவாக்கின. கண்களால் கண்ட இயற்கையும் புலன்களில் மட்டுமே உணரக்கூடிய ஒலிக்கூறுகளும் அவர்களின் வாழ்வியலில் மிக நுட்பமான அடையாளங்களை உருவாக்கின. குறுகிய தன்மைமையுடைய அவர்களின் இருப்புக்குள் இனக்குழுவுக்குள் பயம் கலந்த கால நகர்வை கடத்தவே பற்றுக்கோடாக சடங்குகள் தோன்றின. இத்தன்மையிலிருந்தே வழிபாடுகள் இனக்குழு வாழ்வில் தொடங்கப்பெற்றன. சடங்குளின் நுட்பமான தன்மையிலிருந்து தொடக்கம் பெற்ற தெய்வ உருவாக்கங்கள் படிநிலை வளர்ச்சியில் எடுத்துக்கொண்ட கால இடைவெளியில் சமூக மனங்களின் ஏற்பட்ட மாற்றங்களையும் உள்ளடக்கியே பிணைப்பட்டுள்ளன.