எழுத்தாளர் எஸ்.எல்.எம்.ஹனீபா கிழக்கில் முஸ்லீம் / தமிழ் மக்களுக்கிடையில் இனிரீதியான கலவரச்சூழல் நிலவிய காலகட்டத்தில் நிகழ்ந்த ஒரு சம்பவம் பற்றி முகநூற் பதிவொன்றினை இட்டிருந்தார். அண்மையில் நான் வாசித்த , என்னைப் பாதித்த பதிவிது. வைத்தியர் குகதாசனை அவர் வீட்டின் முன் நின்ற வெறிபிடித்த கும்பலொன்றிலிருந்து எவ்விதம் காப்பாற்றினார் என்பதை அப்பதிவில் அவர் பதிவு செய்திருக்கின்றார். ஆவணப்படுத்தப்பட வேண்டிய பதிவிது. எழுத்தாளர் ஹனீபா அவர்களைச் சிரம் தாழ்த்தி வணங்குகின்றேன். அவரைப்பற்றி நான் என் முகநூற் பக்கத்தில் இட்டிருந்த இக்குறிப்புக் கிடைத்த எதிர்வினைகள் சிலவற்றையும் இங்கு பதிவு செய்கின்றேன்.
எழுத்தாளர் எஸ்.எல்.எம்.ஹனீபா அவர்களின் பதிவு கீழே:
“நேற்றுப் போலிருக்கிறது. கிழக்கில் தமிழ் முஸ்லிம் இனச்சங்காரம் நிகழ்ந்து 32 வருடங்கள். அந்த சித்திரை மாதம், எனக்குள் பெரும் வேதனையையும் வலியையும் விளைவித்தது. அந்த வலி இன்னும் தொடர்வதுதான் மிகப் பெரும் கொடுமை. அந்த ஏப்ரல் மாதத்தில் ஒரு நாள், வாழைச்சேனையில் டாக்டர் குகதாசன் MBBS ஐயா அவர்களின் வீட்டின் முன்னால் பெரும் கும்பலொன்று திரண்டு நிற்பதாக செய்தி கிடைத்தது. ஊரில் அப்பொழுது நான் பெயர் பெற்ற LTTE ஆதரவாளன்.
அந்த இடத்திற்கு உடனே விரைந்தேன். அங்கே, குகதாசன் ஐயா முன் விறாந்தையின் நிலைப்படியில் தவித்துக் கொண்டிருந்தார். பெண்கள், பிள்ளைகள் என்று அவரைச் சுற்றி பதட்டத்தோடு நின்றார்கள். அந்தக் காட்சியை விபரிப்பதற்கு வார்த்தைகள் இன்றி முட்டுப்படுகிறேன். என்னைக் கண்டதும் இளைஞர்களில் சிலர் பின்வாங்கினார்கள். இன்னும் சிலர் என் முன்னாலேயே கண்களில் தீப்பிழம்பாக காட்சி தந்தார்கள். அவர்களை நோக்கி, நான் இவ்வாறு சொன்னேன்:
“தம்பிமாரே! நீங்கள் ஒவ்வொரு பிள்ளையும் உங்கள் தாயின் வயிற்றில் இருந்த பொழுது, இந்த டாக்டர் ஐயாதான் அந்த வயிற்றைத் தடவி உங்களையும் தடவி நீங்கள் சௌக்கியமாக இருப்பதாக உங்கள் தாயிடம் சொல்லி தைரியமூட்டியவர். என்ன நியாயம் நீங்கள் இன்று இந்த மனிதருக்கு முன்னால் இந்தக் கோலத்தில் நிற்பது? உடனடியாக இந்த இடத்தை விட்டு நீங்கள் விலகிச் செல்ல வேண்டும். இல்லாவிட்டால் நடப்பது வேற விடயம்” என்றேன்.
தெருச் சண்டியர்களுக்கு ஒரே பதில். நாமும் ஒரு தெருச் சண்டியராக மாறுவதுதான். வந்தவர்கள் ஒவ்வொருவராக திரும்பிப் போனார்கள். நான் உள்ளே போய் அமர்ந்து ஆறுதல் சொல்லி விட்டு வந்தேன்.
Continue Reading →