திருகோணமலையிலிருந்து புறப்பட்டு, மட்டக்களப்பில் ஆறுமுகத்தான் குடியிருப்புக்கு சமீபமாக ஓரிடத்தில் இறங்கினேன். அந்தப்பிரதேசத்தில் எஹெட் என்ற வெளிநாட்டு தன்னார்வ தொண்டுநிறுவனம் சுனாமியால் பெரிதும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீடுகள் அமைத்துக்கொடுத்திருக்கிறது. அவ்வாறு பாதிக்கப்பட்ட ஒரு குடும்பம் பாண்டிருப்பிலிருந்து அங்கு வந்து குடியேறியிருந்தது. அந்தக்குடும்பத்தலைவனும் அந்தக்குடும்பத்தைச்சேர்ந்த மேலும் சில உறுப்பினர்களும் போர்க்காலத்தில் ஆயுதப்படைகளினால் காணாமலாக்கப்பட்டவர்கள். சோதனைமேல் சோதனை போதுமடா சாமி என்பார்கள். அந்தக்குடும்ப உறுப்பினர்கள் சிலர் குறிப்பாக குழுந்தைகள் உட்பட பத்துப்பேரளவில் சுனாமி கடற்கோளில் காணாமல் போய்விட்டார்கள். அந்தக்குடும்பத்தை சாமி காப்பாற்றியதாகத்தெரியவில்லை. அடுத்தடுத்து போரும், சுநாமியும் காவுகொண்ட பல குடும்பங்கள் இலங்கையில் இழப்புகளையும் கடும் துயர்களையும் கடந்து வந்துள்ளன. குறிப்பிட்ட பாண்டிருப்பு குடும்பத்தினரை சுநாமி காலத்திலும் சென்று பார்த்திருக்கின்றேன். அதில் ஒரு குடும்பத்துப்பிள்ளைகளுக்கு எமது இலங்கை மாணவர் கல்வி நிதியமும் உதவுகிறது.
பாண்டிருப்பில் வசித்தவரும் முன்னாள் அதிபரும் எனது பிரியத்திற்குரிய மூத்த கவிஞருமான சண்முகம் சிவலிங்கம் ஊடாகவே அந்தக்குடும்பத்தின் பிள்ளைகளுக்கு நிதியுதவியை ஆரம்பகட்டத்தில் வழங்கினோம். கவிஞர் மறைந்த பின்னர் கல்முனை பெரியநீலாவணை விஷ்ணு மகா வித்தியாலயத்தின் ஊடாக அந்தப்பிள்ளைகளை பராமரித்து வருகின்றோம். அந்தக்குடும்பத்தின் உறவினர்கள் சிலர் ஆறுமுகத்தான் குடியிருப்புக்கு சமீபமாக வசிப்பது அறிந்து அவர்களையும் பார்க்கச்சென்றேன். போர்க்காலத்தில் கொல்லப்பட்ட அந்த வீட்டின் குடும்பத்தலைவரினதும் அவரது மைத்துனரதும் உடல்கள் கண்டுபிடிக்கப்படவேயில்லை.
இவ்வாறு போரினாலும் சுநாமி கடற்கோள் இயற்கை அநர்த்தத்தினாலும் பாதிக்கப்பட்ட பல குடும்பங்களின் குடியிருப்புத்தேவையை வெளிநாட்டு தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் பூர்த்தி செய்யமுன்வரும் வேளைகளில், மற்றும் ஒரு மதம் சார்ந்த அமைப்பு, அம்மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கும் போர்வையில் தமது மதத்திற்கு மாற்றும் வேலைகளை கச்சிதமாகச்செய்துவருகின்றன.