புரட்டாதி மாதம். சிட்னியில் குளிர் குறையத் தொடங்கிவிட்டது. மாலை நேரம். துவாரகன் தனது நண்பி லோறாவுடன் நியூமன் என்ற நோயாளியை சந்திக்கப் போயிருந்தான்.
துவாரகனும் லோறாவும் மருத்துவபீட இறுதிவருட மாணவர்கள். பேராசிரியர் நெயில் றொபின்ஷன் பாடமொன்றின்—long integrated population medicine (IPM)— ஒப்படைக்காக மாணவர்களைப் பல குளுக்களாகப் பிரித்திருந்தார். . Choronic diseases – asthma, cancer, diabetes, heart diseases – சம்பந்தமான நோயாளர்களை, வருடத்திற்கு குறைந்தபட்சம் பன்னிரண்டு தடவைகள் நேரில் சந்திக்க வேண்டும். நோயாளியுடன் கலந்துரையாடி குறிப்புகள் எடுக்க வேண்டும்.
இவர்கள் குழுவில் ஜொனதான், அன்டி நூஜ்ஜின், கான், ஜெசிக்கா, லோறா, ஜுவான் என மொத்தம் ஏழு பேர்கள் இருந்தார்கள். விரிவுரைகள் இல்லாத மாலை நேரங்களில் துவாரகனும் லோறாவும் நியூமனை சந்திப்பது வழக்கம்.
பெரியதொரு வளவிற்குள் அந்த வீடு தனிமையில் இருந்தது. காரை கேற்றுக்குச் சமீபமாக நிறுத்திவிட்டு கொழுவியிருக்கும் கேற்றைத் திறந்து கொண்டு உள்ளே போனால், முற்றத்திலே சாய்வணைக் கதிரையில் சரிந்தபடி ஆகாயத்தைப் பார்த்துக் கொண்டு நியூமன் இருப்பார். அவருக்கு ஒரு எழுபது வயது இருக்கலாம். அந்த முதியவரின் ஒத்துழைப்பு இவர்களுக்கு வியப்பைத் தந்தது. எல்லா நோயாளிகளும் இந்தத் திட்டத்திற்கு உதவிபுரிய முன்வருவதில்லை. நோயின் உக்கிரத்துடன் போராடிக்கொண்டிருக்கும் அவர்கள் தம் எதிர்கால சந்ததியினர் வளமாக வாழ செய்யும் ஒரு சேவை இது. கேற்றிலிருந்து வீட்டின் வாசல்வரை செல்லும் பாதையின் இருமருங்கிலும் அழகாக புல் வெட்டப்பட்டிருக்கும். வேலிக்கரையோரமாக அப்பிள், பீச்சஸ் எலுமிச்சை மரங்கள். சாய்வணைக்கதிரைக்குப் பக்கத்தில் ஒரு குட்டி மேசையும், இவர்களுக்கான கதிரைகளும் இருக்கும். மேசைக்குக்கீழே விரிக்கப்பட்டிருக்கும் பொலித்தீன் கடதாசி மீது சில தட்டுமுட்டுச் சாமான்களுடன் நாலைந்து புத்தகங்களும், அன்றைய புதினப்பத்திரிகையும் இருக்கும்.
இன்று நியூமனைக் காணவில்லை. மூன்று கதிரைகள் போடப்பட்டிருந்தன. இவர்கள் தயங்கியபடியே மேசைக்குக் கிட்டப் போய் நின்று, சுற்றுமுற்றும் பார்த்தார்கள். மேசையில் நிறையப் புத்தகங்கள் இருந்தன. கதவு திறந்து கொண்டது.
நியூமன் வெளியே வந்தார். கம்பீரமான ஆடையுடன் ஒரு கனவான் போலக் காட்சி தந்தார். இவர்களுக்காகவே ஜன்னலிற்குள்லால் பார்த்துக் கொண்டு நின்றிருப்பார் போலும்.
Continue Reading →