முனைவர் ர.தாரணியின் கவித்துளிகள் (2)!

- ஆர். தாரணி -

1. “உங்கள் தேவை! எங்கள் சேவை!”

தங்களின் நாடு உடனடியாக பிழைக்க
நடிகர்களை அழைக்க
எண் ஒன்றை அழுத்தவும்.

தற்போது நடைபெறும் ஊடகக்காட்சிகள்,
அடிதுடிகள்அப்படியே தொடர
எண் இரண்டை அழுத்தவும்.

சாப்பாடு ஒழுங்காக கிடைக்க
மனைவியின் விருப்ப நாடகங்கள் மட்டுமே பார்க்க
எண் மூன்றை அழுத்தவும்.

Continue Reading →

கவிதை: பகையற்ற மதமும் கொலையற்ற படையும்.

- தம்பா (நோர்வே) -வானம்  கொழித்து  
வனமும் செழித்த மண்ணில்
நல்லிணக்கம் விளைந்ததில்லை.

பஞ்சம் பிளைக்க வந்தவரை
தஞ்சம் களைத்து
வஞ்சகம் பிளைக்க வைக்கிறது.

மத்தியகிழக்கில் தெறித்து விழுந்த பொறி
தென்கிழக்கால் காட்டுத் தீயானது எப்படி?

தரைபட்ட உயிரை காக்க
ஒரடி குழந்தை அரையடி சேற்றில்
பல மைல்களை உழுது வருகிறது.
கைக்குழந்தைக்கு கழுத்திலும் மார்பிலும்
சேற்றுப்புண் பார்த்திடும் மாயமென்ன?

தாகம் தாளாது
சேற்றுமண்ணை குவித்து
தண்ணீர் கட்டி குடிக்க விளைய
அதனுள் சிறுநீர்கழித்து
களிப்புறும் காவல்படையும்
ஏளனம் செய்து மகிழும் துறவியும்  
உடைகளில் பிரிந்து நின்றனர். 

Continue Reading →

எழுத்தாளர் எஸ்.எல்.எம்.ஹனீபாவின் மானுட நேயம்!

எழுத்தாளர் எஸ்.எல்.எம்.ஹனீபாவின் மானுட நேயம்!எழுத்தாளர் எஸ்.எல்.எம்.ஹனீபா கிழக்கில் முஸ்லீம் / தமிழ் மக்களுக்கிடையில் இனிரீதியான கலவரச்சூழல் நிலவிய காலகட்டத்தில் நிகழ்ந்த ஒரு சம்பவம் பற்றி முகநூற் பதிவொன்றினை இட்டிருந்தார். அண்மையில் நான் வாசித்த , என்னைப் பாதித்த பதிவிது. வைத்தியர் குகதாசனை அவர் வீட்டின் முன் நின்ற வெறிபிடித்த கும்பலொன்றிலிருந்து எவ்விதம் காப்பாற்றினார் என்பதை அப்பதிவில் அவர் பதிவு செய்திருக்கின்றார். ஆவணப்படுத்தப்பட வேண்டிய பதிவிது. எழுத்தாளர் ஹனீபா அவர்களைச் சிரம் தாழ்த்தி வணங்குகின்றேன். அவரைப்பற்றி நான் என் முகநூற் பக்கத்தில் இட்டிருந்த இக்குறிப்புக் கிடைத்த எதிர்வினைகள் சிலவற்றையும் இங்கு பதிவு செய்கின்றேன்.

எழுத்தாளர் எஸ்.எல்.எம்.ஹனீபா அவர்களின் பதிவு கீழே:

“நேற்றுப் போலிருக்கிறது. கிழக்கில் தமிழ் முஸ்லிம் இனச்சங்காரம் நிகழ்ந்து 32 வருடங்கள். அந்த சித்திரை மாதம், எனக்குள் பெரும் வேதனையையும் வலியையும் விளைவித்தது. அந்த வலி இன்னும் தொடர்வதுதான் மிகப் பெரும் கொடுமை. அந்த ஏப்ரல் மாதத்தில் ஒரு நாள், வாழைச்சேனையில் டாக்டர் குகதாசன் MBBS ஐயா அவர்களின் வீட்டின் முன்னால் பெரும் கும்பலொன்று திரண்டு நிற்பதாக செய்தி கிடைத்தது. ஊரில் அப்பொழுது நான் பெயர் பெற்ற LTTE ஆதரவாளன்.

அந்த இடத்திற்கு உடனே விரைந்தேன். அங்கே, குகதாசன் ஐயா முன் விறாந்தையின் நிலைப்படியில் தவித்துக் கொண்டிருந்தார். பெண்கள், பிள்ளைகள் என்று அவரைச் சுற்றி பதட்டத்தோடு நின்றார்கள். அந்தக் காட்சியை விபரிப்பதற்கு வார்த்தைகள் இன்றி முட்டுப்படுகிறேன். என்னைக் கண்டதும் இளைஞர்களில் சிலர் பின்வாங்கினார்கள். இன்னும் சிலர் என் முன்னாலேயே கண்களில் தீப்பிழம்பாக காட்சி தந்தார்கள். அவர்களை நோக்கி, நான் இவ்வாறு சொன்னேன்:

“தம்பிமாரே! நீங்கள் ஒவ்வொரு பிள்ளையும் உங்கள் தாயின் வயிற்றில் இருந்த பொழுது, இந்த டாக்டர் ஐயாதான் அந்த வயிற்றைத் தடவி உங்களையும் தடவி நீங்கள் சௌக்கியமாக இருப்பதாக உங்கள் தாயிடம் சொல்லி தைரியமூட்டியவர். என்ன நியாயம் நீங்கள் இன்று இந்த மனிதருக்கு முன்னால் இந்தக் கோலத்தில் நிற்பது? உடனடியாக இந்த இடத்தை விட்டு நீங்கள் விலகிச் செல்ல வேண்டும். இல்லாவிட்டால் நடப்பது வேற விடயம்” என்றேன்.

தெருச் சண்டியர்களுக்கு ஒரே பதில். நாமும் ஒரு தெருச் சண்டியராக மாறுவதுதான். வந்தவர்கள் ஒவ்வொருவராக திரும்பிப் போனார்கள். நான் உள்ளே போய் அமர்ந்து ஆறுதல் சொல்லி விட்டு வந்தேன்.

Continue Reading →

பிரதிலிபியின் அடுத்த போட்டி – கவிதைத் திருவிழா

பிரதிலிபியின் அடுத்த போட்டி - கவிதைத் திருவிழா

வணக்கம்,  தமிழ்ச் சமூகத்தில் கவிஞர்களுக்கும் கவிதைகளுக்கும் என்றுமே பஞ்சம் இருந்ததில்லை. வாழ்வில் ஒருமுறையாவது கவிதை எழுதாதவர்களை இங்கே பார்ப்பது அரிது. தரத்தையும் தாண்டி அப்படி எழுதத்தூண்டுவது நம் சமூகத்தின் சிறப்புகளில் ஒன்று. அப்படி எழுதும் பல கவிஞர்களை ஊக்குவிக்கும் பொருட்டே இந்த போட்டி. பிரதிலிபியின் மாபெரும் கவிதைப்போட்டி.

கவிதைகள் எந்தத் தலைப்பில் வேண்டுமானாலும் எழுதப்படலாம். ஒருவர் அதிகபட்சம் 5 கவிதைகள் வரை அனுப்பலாம். கவிதைகள் 30 வார்த்தைகளுக்கு மேல் இருந்தால் நலம். போட்டிக்கு கவிதைகள் மட்டுமே அனுப்பவேண்டும். மொத்தம் மூன்று படைப்புகளுக்கு பரிசுகள் வழங்கப்படும். மூன்றும் எங்களது நடுவர் குழுவால் தேர்ந்தெடுக்கப்படுவது. அனைத்திற்கும் தலா 1000 ரூபாய் பரிசு வழங்கப்படும்.

படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி – tamil@pratilipi.com

Continue Reading →

தொடர் நாவல்: எத்தனை கோடி இன்பம்! (1) – வ.ந.கிரிதரன் –

அத்தியாயம் ஒன்று: முதற்காதல்!

தொடர் நாவல்: எத்தனைகோடி இன்பம்!வ.ந.கிரிதரன்மாயவன் வசிக்கும் தொடர்மாடிக் கொண்டோக் கட்டடத்திலிருந்து எதிரே நோக்கினால் அருகில் விரிந்திருக்கும் பூங்காவின் வனப்பும், தொலைவில் ‘டொராண்டோ’ மாநகரின் மோனத்தில் தவமியற்றும் உயர்மாடிக் கட்டடங்களும், அவற்றுக்கிடையில் உயர்ந்த கோபுரமான சி.என். கோபுரமும் தெரியும். அந்திப்பொழுதுகளில் அல்லது மெல்லிருள் கவிந்திருக்கும் இரவுகளில் அங்கிருந்து சுற்றுச்சூழலை, நட்சத்திரங்கள் கொட்டிக் கிடக்கும் இரவு வானைப்பார்ப்பதைப்போல் இன்பம் வேறுண்டோ? அவனுக்கு மிகவும் பிடித்த பொழுதுபோக்குகளில் இவ்விதமாகப் பொழுதைக் கழிப்பது மிகவும் விருப்பத்துக்குரியதொன்று. அவனது அபிமானக் கவி பாரதியின் பாடலொன்று நினைவில் சிறகடிக்கின்றது சிட்டுக்குருவியென.

எத்தனை கோடி இன்பம் வைத்தாய்
எங்கள் இறைவா இறைவா இறைவா!

சித்தினை அசித்துடன் இணைத்தாய் – அங்கு
சேரும் ஐம்பூதத்து வியனுலகம் அமைத்தாய்
அத்தனை உலகமும் வர்ணக் களஞ்சியமாகப்
பல பல நல்லழகுகள் சமைத்தாய்

முக்தியென்றொரு நிலை சமைத்தாய் – அங்கு
முழுதினையும் உணரும் உணர்வமைத்தாய்
பக்தியென்றொரு நிலை வகுத்தாய் – எங்கள்
பரமா பரமா பரமா

‘எத்தனை கோடி இன்பம் வைத்தாய்’ மாயவனின் சிந்தனை அவ்வரிகளின் மீதே சுற்றிச்சுற்றிப்படருகின்றது. இப்பிரபஞ்சம்தான் எத்தனை எத்தனை கோடி இன்பத்தை இங்கு புதைத்து வைத்திருக்கின்றது. இயற்கையின் ஒவ்வொரு துளியிலும் படைப்பின் பேரதிசயம் உள்ளடங்கியல்லவா இருக்கிறது.

“சித்தினை அசித்துடன் இணைத்தாய் – அங்கு
சேரும் ஐம்பூதத்து வியனுலகம் அமைத்தாய்
அத்தனை உலகமும் வர்ணக் களஞ்சியமாகப்
பல பல நல்லழகுகள் சமைத்தாய்”

யார் இவ்விதம் இவ்வுலகை இவ்விதம்  அமைத்தது? யார்? மாயவனின் சிந்தனை மேலும் மேலும் சிறகடித்துப்பறக்கின்றது.

Continue Reading →

அஞ்சலிக்குறிப்பு: மரணத்துள் வாழ்ந்து மறைந்த மருத்துவர் பொன். சத்தியநாதன் நினைவுகள்! –

மருத்துவர் பொன். சத்தியநாதன் தமிழே மூச்சாக வாழ்ந்தவரின் இறுதி மூச்சு அடங்குவதற்கு சில மணிநேரங்களுக்கு முன்னர் அவர் அனுமதிக்கப்பட்டிருந்த பராமரிப்பு நிலையத்தில் அவரைப்பார்த்தபோது, அவரது பார்வை நிலைகுத்தியிருந்தது. அருகிலிருந்த அவரது அன்புத்துணைவியார் மருத்துவ கலாநிதி நளாயினி, ” அப்பா… யார் வந்திருக்கிறார்கள் தெரிகிறதா..?” எனக்கேட்கிறார். அவரது நீண்ட கால நண்பர் சட்டத்தரணி செல்வத்துரை ரவீந்திரனும், படைப்பாளியும் ஊடகவியலாளருமான தெய்வீகனும், விக்ரோரியா ஈழத்தமிழ்ச்சங்கத்தலைவர் பரமநாதனும் –  நானும் அவரை பார்த்துக்கொண்டிருக்கின்றோம். ஆனால், தம்மை பார்க்க வந்திருப்பது யார் என்பது அவருக்குத் தெரியுமா…? தெரியாதா…? என்பதும் எமக்குத்தெரியாது. அவர் கடந்த சில வருடங்களாகவே மரணத்துள் வாழ்ந்துகொண்டிருந்தவர் என்பது மாத்திரமே எமக்குத்தெரியும். எமது நினைவுகளில் என்றும் வாழ்ந்துகொண்டிருக்கும் தமிழ்ப்பற்றாளர், மருத்துவர் பொன். சத்தியநாதன் கடந்த சில வருடங்களாகவே நினைவு மறதி உபாதையினால் பாதிக்கப்பட்டு, மரணத்துள் வாழ்ந்து – பராமரிப்பிலிருந்து கடந்த 15 ஆம் திகதி வெள்ளியிரவு மரணவாழ்வுக்கும் விடைகொடுத்து மறைந்துவிட்டார். இலங்கையில வடபுலத்தில் கரவெட்டியில் 1948 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 17 ஆம் திகதி பிறந்திருக்கும் இவர்,  தமது இளம் பராயத்திலேயே பகுத்தறிவுச் சிந்தனை வயப்பட்டவராக தமது ஆசான்களுடனும் மதபீடத்தினருடனும் வாதம் செய்திருக்கும் முற்போக்காளர். மார்க்சீயப்  பற்றேதுமின்றியும்  பெரியாரிஸம்  பேசாமலும் கடவுள் மறுப்புக்கொள்கையுடன் வாழ்ந்தவர். அவர் பற்றுக்கொண்டிருந்தது தமிழில்தான். தமிழுக்காக  எதனையும் செய்யும் இயல்பும் அவரிடமிருந்தமையால், அவர் இழந்ததும் அதிகம். தியாகம் செய்ததும் அதிகம்.

Continue Reading →

கவிதை: இலக்கிலாது சஞ்சரித்தேன் நான் I wandered Lonely as a cloud – William Wordsworth)

கவிதை: இலக்கிலாது சஞ்சரித்தேன் நான் I wandered Lonely as a cloud – William Wordsworth)

இலக்கிலாது சஞ்சரித்தேன் நான்
பள்ளத்தாக்கின் மீதும், மலை மீதும், உயர மிதக்கும்
ஒரு வான்முகில் போல்,
கண்டேன் நான் அவ்வமயம்
ஒருமருங்கே அனைத்தையும்
ஒரு பெருந்திரள் கூட்டமாய் பொன் வண்ண எழிலில் டாப்போடில்ஸ் மலர்கள்
ஏரியின் அருகாமையில், மரங்களின் கீழ்நிழலில்
மென்காற்று அலையில்
சிலிர்த்துப் படபடத்துக்கொண்டும், நர்த்தனமாடிக்கொண்டும் அவைகள்.

Continue Reading →

ஆய்வு: பாரதிதாசன் ஆத்திசூடி உணர்த்தும் அறநெறிகள்

முன்னுரை
- சு.ஜெனிபர்,  முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழியல் துறை, பாரதிதாசன் பல்கலைக் கழகம்,  திருச்சி -24 -29.4.1891 இல் பாரதிதாசன் பாண்டிச்சேரியில் பிறந்தார்.இவரின் இயற்பெயர் கனக சுப்புரத்தினம். தமிழாசிரியராகப் பணிப்புரிந்தவர்.பாரதி மேல் கொண்ட பற்றின் காரணமாகத் தம் பெயரைப் பாரதிதாசன் என்று மாற்றிக்கொண்டார்.இவர் ஆத்திசூடி என்ற நூலை இயற்றியுள்ளார்.இந்நூல் 84  ஓரடி பாடல் அடிகளைக் கொண்டுள்ளது.இந்நூலில் பாரதிதாசன் எந்த ஒரு தெய்வத்தையும் நம்பாத நாத்திகர் ஆதலின் கடவுள் வாழ்த்து பாடவில்லை.ஒரு பாயிரம் பாட நூலைத் தொடங்குகிறார்.இந்த பாயிரம் பத்து அடிகளில் அமைந்துள்ளது.இனப்பற்றும்,நாட்டுப் பற்றும் உலகப் பற்றை வளர்க்கும் அடிப்படையில் அமைய வேண்டும்.பகை உணர்ச்சிக்கு அடிப்படையாக அமையக் கூடாது என்றும்  அமைதி நிலவ இந்தக் குறிக்கோள் வேண்டும் என்றும் உலகில் பொது ஆட்சி நிலவத் தன்னுடைய  நூல் பயன்பட வேண்டும் என்றும் ஒர் உயர்ந்த நோக்கத்தைப் பாயிரமாகக் கூறி பாரதிதாசன் ஆத்திசூடியை பாடத் தொடங்குகிறார். அவ்வையாரின் ஆத்திசூடியைப் போலவே அமைந்துள்ளதால் தம் நூலுக்கும் ஆத்திசூடி என்றே பெயர் வைத்ததாகச் சொல்கிறார் இதனை,

நவில் இனப்பற்றும் நாட்டுப் பற்றும்
வையப் பற்றை வளர்க்கும் நோக்கத்தன
இல்லை யாயின் இன்றிவ் வுலகில்
தொல்லை யணுக்குண்டு தொகு தொலைக் கருவி
பொல்லா நச்சுப் புகைச்சல் இவற்றை
அகற்றல் எப்படி ?அமைதியாங்ஙனம்?
உலகில் பொதுவாட்சி ஒன்றே ஒன்று
நிலவுதல் கருதி நிகழ்த்திய இந்நூல்
ஆத்திசூடி போறலின்
ஆத்திசூடியென் றடைந்து பெயரே        (பாயிரம்)

Continue Reading →

சிறுகதை : அனுபவம் புதுமை

- கே.எஸ்.சுதாகர் -புரட்டாதி மாதம். சிட்னியில் குளிர் குறையத் தொடங்கிவிட்டது. மாலை நேரம். துவாரகன் தனது நண்பி லோறாவுடன் நியூமன் என்ற நோயாளியை சந்திக்கப் போயிருந்தான்.

துவாரகனும் லோறாவும் மருத்துவபீட இறுதிவருட மாணவர்கள். பேராசிரியர் நெயில் றொபின்ஷன் பாடமொன்றின்—long integrated population medicine (IPM)— ஒப்படைக்காக மாணவர்களைப் பல குளுக்களாகப் பிரித்திருந்தார். . Choronic diseases – asthma, cancer, diabetes, heart diseases –  சம்பந்தமான நோயாளர்களை, வருடத்திற்கு குறைந்தபட்சம் பன்னிரண்டு தடவைகள் நேரில் சந்திக்க வேண்டும். நோயாளியுடன் கலந்துரையாடி குறிப்புகள் எடுக்க வேண்டும்.

இவர்கள் குழுவில் ஜொனதான், அன்டி நூஜ்ஜின், கான், ஜெசிக்கா, லோறா, ஜுவான் என மொத்தம் ஏழு பேர்கள் இருந்தார்கள். விரிவுரைகள் இல்லாத மாலை நேரங்களில் துவாரகனும் லோறாவும் நியூமனை சந்திப்பது வழக்கம்.

பெரியதொரு வளவிற்குள் அந்த வீடு தனிமையில் இருந்தது. காரை கேற்றுக்குச் சமீபமாக நிறுத்திவிட்டு கொழுவியிருக்கும் கேற்றைத் திறந்து கொண்டு உள்ளே போனால், முற்றத்திலே சாய்வணைக் கதிரையில் சரிந்தபடி ஆகாயத்தைப் பார்த்துக் கொண்டு நியூமன் இருப்பார். அவருக்கு ஒரு எழுபது வயது இருக்கலாம். அந்த முதியவரின் ஒத்துழைப்பு இவர்களுக்கு வியப்பைத் தந்தது. எல்லா நோயாளிகளும் இந்தத் திட்டத்திற்கு உதவிபுரிய முன்வருவதில்லை. நோயின் உக்கிரத்துடன் போராடிக்கொண்டிருக்கும் அவர்கள் தம் எதிர்கால சந்ததியினர் வளமாக வாழ செய்யும் ஒரு சேவை இது.  கேற்றிலிருந்து வீட்டின் வாசல்வரை செல்லும் பாதையின் இருமருங்கிலும் அழகாக புல் வெட்டப்பட்டிருக்கும். வேலிக்கரையோரமாக அப்பிள், பீச்சஸ் எலுமிச்சை மரங்கள். சாய்வணைக்கதிரைக்குப் பக்கத்தில் ஒரு குட்டி மேசையும், இவர்களுக்கான கதிரைகளும் இருக்கும். மேசைக்குக்கீழே விரிக்கப்பட்டிருக்கும் பொலித்தீன் கடதாசி மீது சில தட்டுமுட்டுச் சாமான்களுடன் நாலைந்து புத்தகங்களும், அன்றைய புதினப்பத்திரிகையும் இருக்கும்.

இன்று நியூமனைக் காணவில்லை. மூன்று கதிரைகள் போடப்பட்டிருந்தன. இவர்கள் தயங்கியபடியே மேசைக்குக் கிட்டப் போய் நின்று, சுற்றுமுற்றும் பார்த்தார்கள். மேசையில் நிறையப் புத்தகங்கள் இருந்தன. கதவு திறந்து கொண்டது.

நியூமன் வெளியே வந்தார். கம்பீரமான ஆடையுடன் ஒரு கனவான் போலக் காட்சி தந்தார். இவர்களுக்காகவே ஜன்னலிற்குள்லால் பார்த்துக் கொண்டு நின்றிருப்பார் போலும்.

Continue Reading →

சிறுகதை: கனிகின்ற பருவத்தில்

சிறுகதை: அகதியும்,  சில நாய்களும்! - சுதாராஜ் -காத்திருத்தல் என்பது அவனைப் பொறுத்தவரை பொறுக்க முடியாத விஷயம். ஆனால் சில வேளைகளில் மனதைச் சோதிப்பதுபோல தவிர்க்க முடியாத காத்திருத்தல்கள் ஏற்பட்டுவிடுகின்றன. அப்பொழுதெல்லாம் தனது அப்போதைய தேவையை மறந்து இயற்கையோடு ஒன்றிப்போய் மனதை இதப்படுத்திக்கொள்வான். மதியம் கொழும்பிலிருந்து கிளம்புகிற புகையிரதம் மழை காரணத்தினாற்போலும் வழக்கத்தைவிடத் தாமதமாகவே அனுராதபுரம் வந்து சேர்ந்தது. அதுவரை காத்திருந்தவர்கள் சொற்பநேர இடத்துக்காக முண்டியடித்து இடித்துக்கொண்டு ஏறினார்கள். அந்த அமளி முடிந்தபிறகு அவன் ஏறினான். இருக்க இடமில்லாததால் நின்றான். வெளியே மழை பெய்துகொண்டிருந்தாலும் சனவெக்கையில் வியர்க்கத் தொடங்கியது. வடக்கிலிருந்து கொழும்பு செல்கிற புகையிரதமும் தாமதமாகவே வருகிறதாம். ‘குறோங்சிங்’கிற்காக இது காத்திருக்கவேண்டும். வியர்வையையும் சனவெக்கையையும் சகித்துக்கொள்கிற ஆற்றலில்லாதவனாய் இறங்கி மேடைக்கு வந்தான்.

மழையைக் கண்டு சுவரோரமாக ஒதுங்கியிருக்கிற மனிதர்களின் அடக்கத்தையும் றெயினிலிருந்து குதித்து தண்ணீர் எடுப்பதற்காக போத்தலோடு ஓடுகிற சிலரையும் பார்துக்கொண்டு நின்றான். பின்னர் தற்செயலாகத் திரும்பியபொழுது புகையிரதத்துள்ளிருந்து அவள் தன்னையே பார்த்துக்கொண்டிருப்பதைக் கண்டான். ஓர் அழகிய ரோசாமலரைப் போல அவளது முகம் தோற்றமளித்தது. அப்படி ஒரு கவிதையை ரசிப்பதுபோல அவளைக் கற்பனைக்குட்படுத்திப் பார்த்தான். அவன் கவனிப்பதைக் கண்டதும் அவள் பார்வையைத் திருப்பினாள். அவள் தன்னை நெடுநேரமாகவே பார்த்துக்கொண்டிருந்திருக்கிறாள் என நினைத்தான். தனது பார்வை அவள் பக்கம் திரும்பியபோது திடுக்குற்றவள்போல சட்டென மறுபக்கம் திரும்பியதற்கு அதுதான் காரணமாயிருக்கலாம். எதற்காக அப்படிப் பார்த்திருக்கவேண்டும் என எண்ணியபொழுது ஒருவேளை மீண்டும் பார்ப்பாளோ என்ற சபலமும் தோன்றியது. அவள் திரும்பவும் பார்த்தாள். தான் இன்னும் அவளையே பார்த்துக்கொண்டிருக்கும் ரகசியத்தை அவள் அறியக்கூடாது என அவசரமாக வேறு பக்கம் திரும்பினான்.

மழையில் நனைந்துகொண்டு நிற்கிற செம்மறியாட்டைப்போல புகையிரதம் சூடு சுரணையில்லாமல் நிற்கிறது. மழை நீர் அதன் மேல் விழுந்து சிறிய பூச்சிகளைப்போலத் தெறித்துப் பறக்கிறது. பூட்டப்பட்ட கண்ணாடியில் முத்துமணிகளாக உருள்கிறது… தூரத்தே உரத்துப் பெய்துகொண்டு ஒரே புகைமூட்டமாகத் தெரிகிறது. ஆவியாக மேலே செல்கிற நீர் ஒரு ஷவரைத் திறந்துவிட விழுகிற தூறல்களாகக் கொட்டும் அழகை வியப்பவன்போல் வானத்தையே பார்த்துக்கொண்டு நின்றான்.

Continue Reading →