– கடந்த ஆண்டு வெளியான ‘கணையாழிக் கட்டுரைகள் (1995 – 2000) ‘ என்னும் தொகுப்பு நூல் பற்றிய எனது விமர்சனம் செப்டம்பர் 2017 ‘கணையாழி’ இதழில் வெளியாகியுள்ளது. ஒரு பதிவுக்காக அக்கட்டுரை இங்கு மீள்பிரசுரமாகின்றது. – வ.ந.கி –
அண்மைககாலத்தில் வெளிவந்து நான் வாசித்த கட்டுரைத்தொகுதிகளில் சிறந்த தொகுதிகளிலொன்றாகக் ‘கணையாழிக்கட்டுரைகள் (1995-2000) தொகுதியினைக் கருதுவதில் எனக்கு எந்தவிதத்தயக்கமுமில்லை. இந்தக்கட்டுரைதொகுதி என்னைக் கவர்வதற்குக் காரணமாக இத்தொகுப்பு உள்ளடக்கியுள்ள கட்டுரைகளின் கூறுபொருள், கட்டுரைகளின் மொழிநடை ஆகியவற்றையே குறிப்பிடுவேன்.
கட்டுரைகளின் கூறுபொருள்
இத்தொகுப்பிலுள்ள கட்டுரைகளின் கூறுபொருள் பன்முகத்தன்மை வாய்ந்தவை. கலை, இலக்கியம், அறிவியல், அரசியல் எனக் கட்டுரைகள் பல விடயங்களைப்பற்றிக் கூறுபவை. இலக்கியத்தை என்னும் அதை மேலு பல உபபிரிவுகளாகப் பிரித்துப் பார்க்கலாம். கவிதை, படைப்பாளிகளின் படைப்புத்தன்மை, நாடகம், மொழிநடை (வட்டாரத்தமிழ் போன்ற), மேனாட்டு இலக்கிய அறிமுகம், நூல் அறிமுகம் இவ்விதம் இலக்கியத்தின் பன்முகப்பிரிவுகளிலும் கட்டுரைகள் தேர்வு செய்யப்பட்டிருக்கின்றது தேர்வாளர்களின் கடும் உழைப்பினை வெளிப்படுத்துகின்றது. இப்பிரிவிவில் வெளியான கட்டுரைகள் வெளிப்படுத்தும் விடயங்கள், தகவல்களும் பற்பல.
படைப்பாளிகளைப்பற்றிய கட்டுரைகளாகச் சா.கந்தசாமியின் ‘ஒரு படைப்பாளியின் நடைப்பயணத்தில்’ , ‘ஆருயிர் கண்ணாளுக்கு’ (எழுத்தாளர் புதுமைப்பித்தன் மனைவிக்கு எழுதிய நெஞ்சினைத் தொடும் கடிதம்), ‘கருத்துக்குளத்தில் கல்லெறிந்த கலகக்காரர்'(பிரபஞ்சனின் கலைஞர் படைப்புகள் பற்றிய பார்வை), சா.கந்தசாமியின் ‘இலக்கிய சரிதம்’ , தஞ்சை ப்ரகாஷின் ‘எம்.வி.வெங்கட்ராம் எனும் நிரூபணம்’, விக்கிரமாதித்யனின் ‘நவீன கவிதை பிரமிளுக்கு முன்னும் பின்னும்’ , ஞானக்கூத்தனின் ‘டி.எஸ்.இலியட்டும் தமிழ் நவீன இலக்கியமும்’ , அசோகமித்திரனின் ‘சக பயணி’ போன்ற கட்டுரைகள் குறிப்பிடத்தக்கன.
அசோகமித்திரனின் கட்டுரைகளில் கூறப்படும் பொருளுடன் பல்வேறு தகவல்களும் காணப்படுவது வழக்கம். இங்கும் ‘சக பயணி’ என்னும் அவரது சிறு கட்டுரை கோமல் சுவாமிநாதனைப்பற்றி குறிப்பாக அவரது நாடக, சினிமா முயற்சிகளைபற்றி, அவர் ஆசிரியராகவிருந்து வெளியிட்ட ‘சுபமங்களா’ பற்றி, கோமலின் இறுதிக்காலத்தைப்பற்றிச் சுருக்கமாகப் பதிவு செய்யும் கட்டுரை அறுபதுகளில் நடிகர் சகஸ்ரநாம் சேவா ஸ்டேஜ் நாடகக் குழு பற்றி, அறுபதுகளில் உஸ்மான் சாலையின் தென்பகுதியிலிருந்த தி.நகர் பஸ் ஸ்டாண்ட் பற்றியெல்லாம் மேலதிகத் தகவல்களைத் தருகின்றது.\
தஞ்சை ப்ரகாஷின் ‘எம்.வி.வெங்கட்ராம் எனும் நிரூபணம்’ என்னும் கட்டுரை எம்.வி.வி.யின் வாழ்க்கையை வெளிப்படுத்தும் சமயம், எழுத்தாளர் நீலமணி பற்றியும், சுதேசமித்திரன் பத்திரிகையின் இலக்கியப்பங்களிப்பு பற்றியும் எடுத்துரைக்கின்றது. பொருளியல்ரீதியில் எவ்வளவோ சிரமங்களை இருப்பு அவருக்குக் கொடுத்தபோதும் எம்.வி.வி ஒருபோதுமே ‘அவர் வியாபார எழுத்தில் , வெகுஜன ரசனையில் என்றுமே ஈடுபாடு வைத்ததில்லை’ என்றும் கட்டுரையாளர் சுட்டிக்காட்டுவார்.
Continue Reading →