முன்னுரை
சங்க காலச் சமூக மக்கள் தொடக்கத்தில் இனக்குழுச் சமூகமாக வாழ்ந்தனர். தங்களுக்கான ஐந்திணைப் பகுப்பில் அவரவர்களுக்கான வாழ்வுச் சூழலை மேற்கொண்டனர். ஆனால் வேளாண்மையின் செழிப்பும், வாணிபத்தின் வளர்ச்சியும் மேம்பட மெல்ல நிலவுடைமைச் சமூகம் தோற்றம் பெற்றது. இதன் விளைவாக அரசர்களும் நிலக்கிழார்களும் உருவாயினர். பெண்களையும் நிலத்தையும் உடைமைப் பொருள்களாகக் கருதினர். அதில் பெண் பண்பாட்டையும் குடும்ப அமைப்பையும் கட்டிக்காக்கும் பொறுப்புடையவளாக நியமிக்கப்பட்டாள்.
தமிழ்ச் சமூகம் அரசர்களும் நிலக்கிழார்களும் தலைமை ஏற்று வழி நடத்திய போதும் அடிமை முறையோ தீண்டாமை முறையோ வழக்கத்தில் இருந்ததாகத் தென்படவில்லை. பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் என்ற நிலையிலேயே சமூக வாழ்வு சூழல் நிகழ்ந்ததை அறிய முடிகிறது. பேரரசர்களின் தோற்றத்திற்குப் பின்னரே போர்ச்சூழலில் பிறநாட்டின் வீரர்களை சிறைப்பிடித்தலும் பெண்ணைப் பொருளாக எண்ணி கொள்ளையிட்டு கொணர்தலும் நடந்தேறியது. இவ்வாறு கொள்ளையிட்டு கொணர்ந்தப் பெண்களே “கொண்டி மகளிர்” எனப்பட்டனர்.
ஆரியர்களின் நுழைவுக்கு பின்னர் இச்சூழல் தீவிரப்படுத்தப்பட்டது. தமிழக வரலாற்றில் இவர்களின் வருகை பெரும் மாற்றத்தை ஏற்படுத்தி விட்டது. தமிழகச்சூழலில் பெண்கள் இரண்டாம் தரப்படுத்தப்பட்டதும் ஒதுக்கப்பட்டதும் இதன் பின் தான் அதிகரித்தது எனலாம்.
“கி.பி.3-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பல்லவச் சாசனம் ஒன்றின்படி நிலத்தோடு அதனைச் சேர்ந்த ஆட்களும் தானமாக அளிக்கப்பட்டதாகத் தெரிகிறது”என்று ‘இந்தியாவில் வரலாறு’ எனும் நூல் (மாஸ்கோ 1979-பக்:194) கூறும் குறிப்பும் கவனிக்கத் தக்கது.
இன்னும் குறிப்பாக அடுத்த நாட்டுக் கூட்டத்தினருடன் சண்டையிட்டு, வெற்றி கொண்ட பிறகு அவர்தம் ஆடு, மாடு செல்வங்களைக் கொள்ளையடித்து வந்ததோடு அவர்தம் வீட்டு – நாட்டுப் பெண்களையும் அடிமைப் பெண்களாகப் பிடித்து வந்த செய்திகளும் வெகு சில (வென்றவர் பெருமை கூறும்) இலக்கியங்களில் காணக் கிடைக்கிறது.