கவிஞர் சோ.பத்மநாதனின் தொகுப்பிலும் மொழிபெயர்ப்பிலும் வெளிவந்துள்ள ‘தென்னாசியக் கவிதைகள்’ என்ற இந்த நூலே அகண்ட பிராந்தியம் சம்பந்தமாக வெளிவந்த முதல் தமிழ் நூலாக இருக்கமுடியுமெனத் தோன்றுகிறது. அந்த வகையில் இதுபற்றி சரியான ஒரு மதிப்பீட்டைக் கொள்ளுதல் தொடர்ந்தேர்ச்சியான இதுபோன்ற முயற்சிகளுக்கு ஒழுங்கமைந்த வழிகாட்டியாக இருக்கமுடியும்.
SAARC என சுருக்கமாக அழைக்கப்படும் South Asian Association for Regional Corporation என்ற இந்த அமைப்பு 1985ஆம் ஆண்டளவில் தோற்றுவிக்கப்பட்டது. ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், இந்தியா, இலங்கை, பூட்டான், நேப்பாளம், மாலைதீவுகள், பங்களாதேஷ் ஆகிய நாடுகள் அங்கம் வகிக்கும் இந்த அமைப்பின் தலைமையகம் நேப்பாளின் காத்மண்டுவில் இருக்கிறது. வர்த்தகத்துக்கான முன்னுரிமைகளைக் கருத்தில்கொண்ட அமைப்பாகத் தொடங்கப்பட்டாலும், அதற்கும் மேலான இணக்கப்பாடுகளை இலக்கியமூடாக உள்வாங்கும்படியாக ஆரம்ப காலம்தொட்டே இதன் நடைமுறைகள் இருந்துவருகின்றன. அதன்படி தென்னாசிய நாடுகளின் ஆளுமைக்கான விருது உட்பட இலக்கியச் சாதனைக்கும் மற்றும் இளைஞர் சாதனைக்குமான விருதுகள் வழங்கலுமென திட்டங்கள் பலவற்றை இது தன்னகத்தே கொண்டிருக்கிறது. இவற்றில் 25000 டொலர் மதிப்பான தென்னாசிய நாடுகளின் ஆளுமை விருதானது முதல் தடவைக்குப் பின்னால் எப்போதும் வழங்கப்படவில்லை. ஆனால் இலக்கியச் சாதனை விருதுகள் தொடர்ந்து வழங்கப்பட்டே வருகின்றன. மகாஸ்வேதாதேவி, மார்க் ரலி, சுமன் பொக்றெல் மற்றும் சீதாகாந்த் மஹாபத்ர உட்பட பல தெற்காசியாவின் முக்கிய இலக்கியவாதிகள் இப்பரிசினைப் பெற்றிருக்கிறார்கள்.
சார்க் நாடுகளின் கவிஞர்களது ஒன்றுகூடல்களில் வாசிக்கப்பெற்ற கவிதைகளிலிருந்து ‘தென்னாசியக் கவிதைகள்’ என்ற இந்நூல் தொகுக்கப்பெற்றிருக்கிறது. இந்தி, வங்காளம், தெலுங்கு, மலையாளம் ஆகிய இந்திய மொழிக் கவிதைகளுடன் சிங்களம், நேப்பாளம் ஆகிய மொழிகளின் கவிதைகளும் இவற்றின் ஆங்கிலவாக்கத்திலிருந்து மொழிபெயர்ப்பு ஆகியிருக்கின்றன. நேரடியாக தமிழிலிருந்து தேரப்பட்ட ஒன்பது கவிதைகளுட்பட அறுபத்தைந்து கவிஞர்களின் எண்பத்தேழு கவிதைகள் இத்தொகுப்பிலுண்டு. ஒட்டுமொத்தமான எண்பத்தேழு கவிதைகள் மேலுமான ஒரு கண்ணோட்டத்தைச் செய்திருந்தாலும், முப்பத்தைந்து கவிதைகளின் தேர்விலிருந்து நல்ல கவிதைகளாக பதினேழு கவிதைகளையும் சிறந்த கவிதைகளாக இரண்டினையும்கொண்டு இந்த நூலின் விசாரணையைத் தொடங்கவிருக்கிறேன்.
மூன்றாம் உலகநாடுகளென பொருளாதார அரசியல்ரீதியில் பொதுவாகக் குறிக்கப்பெற்ற நாடுகளின் வறுமை, வேலையின்மை, வாழ்க்கைத் தரம், சுகாதார விருத்தியின்மை ஆகியன ஒரே தரத்தனவாகத்தான் இருக்கின்றன. அந்தவகையில் தென்னாசிய அமைப்பைச் சேர்ந்த இந்த நாடுகளின் தரமும் பெரிதான வித்தியாசங்கள் அற்றவையே. ஆயினும் இவை ஒவ்வொன்றினுள்ளும் உள்ளோட்டமாய் இவற்றின் தனித்துவமான உணர்வுகள் இருந்துகொண்டிருக்கின்றன என்ற உண்மையையும் நாம் உதாசீனம் செய்துவிட முடியாது. அவற்றை இங்கே முழுமையாகக் காணமுனைவது அனுசிதமான செயற்பாடு. அதனால் ஒட்டுமொத்தமான இவற்றின் உணர்வுகளை மய்யப்படுத்திக்கொண்டு, அவற்றின் அடிப்படையில் கவிதைகளில் எழும் குரல்களின் தேடல்களையும், திசைகளையும் கணிப்பதோடு கவிதைரீதியிலான இவற்றின் மதிப்பீட்டு முயற்சியையும் செய்வதே இங்கே மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.
இன்றைக்கு வளர்முக நாடுக (Developing Countries) ளென இவை குறிக்கப்படுவதாலேயே இவை பின்தங்கிய நாடுகளென அழைக்கப்பட்ட காலத்து தரத்திலிருந்து பெருமளவில் வேறுபட்டுப்போகவில்லை. இங்கே முக்கியமாகவும் முதன்மையாகவும் சட்டத்தின் ஆட்சி வலுப்பட்டிருக்கவில்லை என்பதில் நம் கவனத்தைக் குவிக்க முனைந்தால், அதிலிருந்து தொடர்புடைய பல விஷயங்களும் தாமாகவே மேலே எழுந்துவிடும். இந்த நாடுகளில் ஜனநாயக உரிமைகளின் பயில்வினையும், பத்திரிகைத் துறையின் சுயாதீனத்திற்கு விளையும் இடைஞ்சல்களையும் இங்கிருந்தே புரிந்துகொள்ள முடியும்.