“பல்துறை ஆற்றலாளரான வி.ரி.இளங்கோவன் அவர்களது கவிதைத் தொகுதியினை ஈரோடு மக்கள் சிந்தனைப் பேரவையின் புத்தகத் திருவிழாவில் இடம்பெறும் உலகத் தமிழர் படைப்பரங்கில் வெளியீடு செய்வதில் மகிழ்ச்சியடைகிறோம். கலை – இலக்கியவாதியாகவும், முற்போக்குச் சிந்தனையாளராகவும் விளங்கும் இளங்கோவன் புலம்பெயர்ந்து வாழும் பிரான்ஸ் நாட்டிற்கும் எமக்குமிடையே தமிழ் இலக்கியப் பாலமாக – தொடர்பாளராக விளங்குகிறார். பல நூல்களை வெளியிட்டுள்ள குறிப்பிடத்தக்க சிறந்த படைப்பாளியான அவரது கவிதைத் தொகுதியை உலகத்த தமிழர் படைப்பரங்கில் வெளியிட முன்வந்தமைக்காக அவருக்கு மக்கள் சிந்தனைப் பேரவை மகிழ்ச்சியையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கிறது.”
இவ்வாறு ஈரோடு மக்கள் சிந்தனைப் பேரவைத் தலைவரும் எழுத்தாளருமான ஸ்டாலின் குணசேகரன் கடந்த 12-ம் திகதி பகல் (12-08-2018) ஈரோடு புத்தகத் திருவிழா உலகத் தமிழர் படைப்பரங்கில் இடம்பெற்ற கலாபூஷணம், இலக்கியவித்தகர் வி. ரி. இளங்கோவனது “ஒளிக்கீற்று” கவிதைத் தொகுதி வெளியீட்டு நிகழ்வுக்கு தலைமை வகித்துப் பேசுகையில் குறிப்பிட்டார்.
“ஒளிக்கீற்று” கவிதைத் தொகுதியை வெளியிட்டு வைத்து, தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்ற ஈரோடு மாவட்டச் செயலாளர் ஓடை பொ. துரைஅரசன் பேசுகையில், ஈழத்துக் கவிஞர்கள் பலரின் கவிதைகள் யதார்த்தப் பூர்வமானவை. அந்தவகையில், முற்போக்குச் சிந்தனை வயப்பட்ட இளங்கோவனின் கவிதைகள் அவரது அனுபவங்களைப் பிரதிபலிக்கின்றன, சிந்தனையைத் தூண்டுகின்றன.
மரபு சார்ந்தும், மரபு சாராமலும் உணர்வுகளின் ஊற்றாக அவரது கவிதைகள் சிறப்பாகப் படைக்கப்பட்டுள்ளன. புதிய வெளிச்சத்தைப் பாய்ச்சுகின்றன. அவருக்கு எமது பாராட்டுக்கள்.” எனக் குறிப்பிட்டார். நூலாசிரியர் இளங்கோவனது உணர்ச்சிமிகுந்த ஏற்புரை சபையோரின் பாராட்டுதலைப் பெற்றது. ஓடை பொ. துரைஅரசன் நூலை வெளியிட, மூத்த வழக்கறிஞர் யு. கே. செங்கோட்டையன் அதனைப் பெற்றுக்கொண்டார். படைப்பாளிகள், இலக்கிய அபிமானிகள், பேராசிரியர்கள் உட்பட பெருந்தொகையானோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.