படித்தோம் சொல்கின்றோம்: பார்த்திபனின் – “கதை”! மனிதவாழ்வில் அற்றுப்போனவர்களின் அவலக்குரலை பதிவு செய்துள்ள படைப்பாளி! அந்நியமாவதற்கு தூண்டும் சமூகத்தின் வாழ்வுக் கோலங்களை சித்திரிக்கும் கதைகள்!

எழுத்தாளர் பார்த்திபன்பார்த்திபனின் 'கதை'உருவம், உள்ளடக்கம், படைப்புமொழி, பாத்திர வார்ப்பு, காட்சி சித்திரிப்பு முதலான பல அம்சங்களை உள்ளடக்கியது சிறுகதை வடிவம். இலங்கையில் இந்த இலக்கியம் தோன்றிய காலத்தில், எழுத முன்வந்த எழுத்தாளர்கள் பலர், தென்னிந்திய சிற்றேடுகளில் வெளியான கதைகளின் பாதிப்பில், சென்னை மவுண்ட் ரோட்டையும் மெரீனா பீச்சையும் பின்புலமாகக்கொண்டு கதை பண்ணினார்கள்! அதற்குப்பின்னர் மறுமலர்ச்சிக்காலம் இலக்கியத்தில் பதிவானபோது இலங்கையர்கோன், சி. வயித்திலிங்கம், சம்பந்தன் ஆகியோரின் கதைகள் பரவலான வாசிப்பிற்குட்பட்டு பிரதேச மொழி வழக்குகளும் அறிமுகமாயின. இலங்கையில் இடதுசாரிகளின் இலக்கியப் பிரவேசத்தையடுத்து, முற்போக்கான சிந்தனைகளை அடியொற்றியும், சமூக ஏற்றதாழ்வு – சாதிப்பிரச்சினைகள் – வர்க்கப்போராட்டம் பற்றியும் கதைகள் தோன்றின. இக்கால கட்டத்தில் அறிமுகமான பல விமர்சகர்கள் மார்க்ஸீயப் பண்டிதர்களாகவும் பல்கலைக்கழக விரிவுரையாளர்களாகவும் பேராசிரியர்களாகவும் விளங்கினர். இவர்கள் நமது ஆக்க இலக்கியப்பிரதியாளர்களிடம், சோஷலிஸ யதார்த்தப்பார்வையை எதிர்பார்த்தனர். இதனால் அந்தப்பார்வைக்கு ஏற்பவும் அதே சமயத்தில் அழகியல் அம்சத்துடனும் பலர் ஈழத்து இலக்கிய உலகில் தமது படைப்புகளை அறிமுகப்படுத்தினார்கள். இந்தப்பின்னணியில் தமிழகப்படைப்புகள் கலைத்துவத்தில் முன்னின்றன. ஈழத்து படைப்பு இலக்கியம் இலக்கிய விமர்சன பிதாமகர்களின் ஆசீர்வாதத்தையும் அங்கீகாரத்தையும் எதிர்பார்த்து அழகியலை இழக்கநேர்ந்தது. எனினும் குறிப்பிட்ட சில அழகியல் சார்ந்த படைப்புகள் வெளிவந்தன.

1970 இன் பின்னர் தேசிய இனப்பிரச்சினை இனமுறுகலாகியதும் படைப்பு இலக்கியத்தில் ” இஸங்கள்” குறித்த விமர்சனங்கள் கூர்மையடைந்தன. கேள்விக்குட்படுத்தப்பட்டன. போர்க்காலம் தொடங்கியதும் போர்க்கால இலக்கியமும், போரினால் மக்கள் இடம்பெயர்ந்ததும், இடம்பெயர்ந்தோர் இலக்கியமும் நாட்டைவிட்டு புலம்பெயர்ந்ததும், அவர்கள் மத்தியிலிருந்த இலக்கியவாதிகளினால் புலம்பெயர்ந்தோர் இலக்கியமும் பின்னர் புகலிட இலக்கியமும் வரவாகியது. கொட்டும் பனிக்குள்ளிருந்து நெருப்பின் தீவிரத்துடன் படைத்து, ஆறாம் திணை இலக்கியத்தை அறிமுகப்படுத்தியவர்களிடமிருந்து, வீரியம் மிக்க எழுத்துக்கள் தமிழ் இலக்கிய வாசகப்பரப்பின் பொதுவான கவனத்திற்குட்பட்டுள்ளன. தமிழகமும் இலங்கையும் விழியுயர்த்தி பார்க்கின்றன. 

வெளியுலகத்தின் கட்டற்ற சுதந்திரத்தினால் புகலிட வாழ்வுக்கோலங்களும் தாயகத்தின் நெருக்கடியிலிருந்து தப்பி ஓடுவதற்கு எத்தனித்தவர்களின் செய்திகளும் கதைகளாகின. புலம்பெயர்ந்தோர் சந்தித்த அவலங்களும் படைப்புகளில் கருப்பொருளாகின. இந்தப் பதிவின் தொடக்கத்தில் குறிப்பிட்ட உருவம், உள்ளடக்கம், படைப்புமொழி, பாத்திர வார்ப்பு, காட்சி சித்திரிப்பு முதலான பல அம்சங்களை புகலிட படைப்பாளர்களும் நவீன முறையில் புத்தம் புதிய உத்திகளுடன் பயன்படுத்தினர். இவர்களுக்கும் ஆசிர்வாதமும் அங்கீகாரமும் தேவைப்படுகிறது. அதன்மூலம் தமக்கென ஒரு அடையாளத்தை தக்கவைப்பதற்கு பிரயத்தனப்படுவதையும் அவதானிக்க முடிகிறது. அவர்களுக்கு அந்த அடையாளம் கிடைத்ததும் அவர்களின் சுமாரான கதைகளுக்கும் விமர்சகர்களின் Promotion கிடைக்கிறது.  எனினும் அவ்வாறு அடையாளம் காணப்படாத ஒரு சிலர் அந்த Promotion ஐ எதிர்பார்க்காதுவிட்டாலும், தேர்ந்த வாசகர்கள், அவர்களின் படைப்புகளின் முக்கியத்துவம் குறித்து எழுதுகின்றனர்.

Continue Reading →