தமிழகத்தின் மிகப்பெரிய புத்தகத்திருவிழாவில் ஈழத்து எழுத்தாளர் இளங்கோவனுக்குக் கௌரவம்..!

தமிழகத்தின் மிகப்பெரிய புத்தகத்திருவிழாவில் ஈழத்து எழுத்தாளர் இளங்கோவனுக்குக் கௌரவம்..!“பல்துறை ஆற்றலாளரான வி.ரி.இளங்கோவன் அவர்களது கவிதைத் தொகுதியினை ஈரோடு மக்கள் சிந்தனைப் பேரவையின் புத்தகத் திருவிழாவில் இடம்பெறும் உலகத் தமிழர் படைப்பரங்கில் வெளியீடு செய்வதில் மகிழ்ச்சியடைகிறோம். கலை – இலக்கியவாதியாகவும், முற்போக்குச் சிந்தனையாளராகவும் விளங்கும் இளங்கோவன் புலம்பெயர்ந்து வாழும் பிரான்ஸ் நாட்டிற்கும் எமக்குமிடையே தமிழ் இலக்கியப் பாலமாக – தொடர்பாளராக விளங்குகிறார். பல நூல்களை வெளியிட்டுள்ள குறிப்பிடத்தக்க சிறந்த படைப்பாளியான அவரது கவிதைத் தொகுதியை உலகத்த தமிழர் படைப்பரங்கில் வெளியிட முன்வந்தமைக்காக அவருக்கு மக்கள் சிந்தனைப் பேரவை மகிழ்ச்சியையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கிறது.”

இவ்வாறு ஈரோடு மக்கள் சிந்தனைப் பேரவைத் தலைவரும் எழுத்தாளருமான ஸ்டாலின் குணசேகரன் கடந்த 12-ம் திகதி பகல் (12-08-2018) ஈரோடு புத்தகத் திருவிழா உலகத் தமிழர் படைப்பரங்கில் இடம்பெற்ற கலாபூஷணம், இலக்கியவித்தகர் வி. ரி. இளங்கோவனது “ஒளிக்கீற்று” கவிதைத் தொகுதி வெளியீட்டு நிகழ்வுக்கு தலைமை வகித்துப் பேசுகையில் குறிப்பிட்டார்.

“ஒளிக்கீற்று” கவிதைத் தொகுதியை வெளியிட்டு வைத்து, தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்ற ஈரோடு மாவட்டச் செயலாளர் ஓடை பொ. துரைஅரசன் பேசுகையில், ஈழத்துக் கவிஞர்கள் பலரின் கவிதைகள் யதார்த்தப் பூர்வமானவை. அந்தவகையில், முற்போக்குச் சிந்தனை வயப்பட்ட இளங்கோவனின் கவிதைகள் அவரது அனுபவங்களைப்  பிரதிபலிக்கின்றன, சிந்தனையைத் தூண்டுகின்றன.
மரபு சார்ந்தும், மரபு சாராமலும் உணர்வுகளின் ஊற்றாக அவரது கவிதைகள் சிறப்பாகப் படைக்கப்பட்டுள்ளன. புதிய வெளிச்சத்தைப் பாய்ச்சுகின்றன. அவருக்கு எமது பாராட்டுக்கள்.” எனக் குறிப்பிட்டார்.  நூலாசிரியர் இளங்கோவனது உணர்ச்சிமிகுந்த ஏற்புரை சபையோரின் பாராட்டுதலைப் பெற்றது. ஓடை பொ. துரைஅரசன் நூலை வெளியிட, மூத்த வழக்கறிஞர் யு. கே. செங்கோட்டையன் அதனைப் பெற்றுக்கொண்டார். படைப்பாளிகள், இலக்கிய அபிமானிகள், பேராசிரியர்கள் உட்பட பெருந்தொகையானோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

Continue Reading →

ஆய்வுக் கட்டுரை: விந்தைக் கவிஞன் விந்தன்!

எழுத்தாளர் விந்தன்தமிழ் எழுத்து மரபில் கவிதை, பாடல், சிறுகதை, நாவல், கட்டுரை, இதழ், பதிப்பு எனப் பல்வேறு தளங்களில் தடம் பதித்த ஆளுமைகளுள் விந்தனும் குறிப்பிடத்தக்கவர். 1916 – இல் செங்கல்பட்டு மாவட்டம், நாவலூரில் பிறந்த கோவிந்தன் எனும் இயற்பெயர் கொண்ட விந்தன், வறுமையின் காரணமாக நடுநிலைப் பள்ளியைக் கூட முடிக்க முடியாமல் தம் குலத்தொழிலான இரும்புப் பட்டறை வேலையை செய்து வந்தார். பின்னர் சூளை பட்டாளத்தில் பொதுவுடமை இயக்கத்தினர் நடத்திய இரவுப் பள்ளியில் சேர்ந்து கல்விக் கற்றார். பின்னர் 1941 – இல் கல்கி இதழில் அச்சுக்கோர்ப்புப் பணியில் சேர்ந்து அவ் இதழின் துணை ஆசிரியராக உயர்வு பெற்றார்.

1951 – இல் திறைத்துறையில் இணைந்து அன்பு, பார்த்திபன் கனவு, குலேபகாவலி ஆகிய படங்களுக்குப் பாடல்களும் திரைக்கதை வசனமும் வாழப்பிறந்தவள், மணமாலை, குழந்தைகள் கண்ட குடியரசு, சொல்லுத் தம்பி சொல்லு ஆகிய படங்களுக்குத் திரைக்கதை வசனமும் எழுதினார். இவை மட்டுமன்றி முல்லைக் கொடியாள், ஒரே உரிமை, சமுதாய விரோதி, விந்தன் கதைகள், இரண்டு ரூபாய், ஏமாந்துதான் கொடுப்பீர்களா?, மகிழம்பூ, நாளை நம்முடையது, முதல்தேதி, எங்கள் ஏகாம்பரம், இதோ ஒரு மக்கள் பிரதிநிதி, நவீன விக்கிரமாதித்தன், ஓ மனிதா! ஆகிய சிறுகதைகளையும் கண் திறக்குமா?, பாலும் பாவையும், அன்பு அலறுகிறது, மனிதன் மாறவில்லை, சுயம்வரம், தெருவிளக்கு ஆகிய நாவல்களையும் எம்.கே.டி.பாகவதர், நடிகவேள் எம்.ஆர்.ராதா ஆகியோரது வாழ்க்கை வரலாறுகளையும் பாட்டில் பாரதம், பசி கோவிந்தம், புதிய ஆத்திச்சூடி –பெரியார் அடிச்சுவட்டில் ஆகிய கவிதை நூல்களையும் வேலை நிறுத்தம் ஏன்?, சேரிகள் நிறைந்த சென்னை, விந்தன் கட்டுரைகள், புதுமைப்பித்தனும் புகையிலையும் ஆகிய கட்டுரைகளையும் எழுதி தமிழ் எழுத்து மரபில் நீங்கா இடம் பெற்றவர் கவிஞர் விந்தன். ஆனால் அவரது நூற்றாண்டினை (1916-2016) கொண்டாடிய நிலையிலும் தமிழ்ச்சமூகம் அவரை இன்றளவும் முன்னெடுக்கவில்லை என்பது வருந்தத்தக்கதே. பொதுவுடமைவாதியாக பன்முகத் தளத்தில் ஆளுமை செலுத்திய விந்தனின் கவிதைகளையும் பாடல்களையும் இக் கட்டுரை முன்னெடுக்கின்றது.

கவிதைகள்
1956 இல் விந்தன் ‘பசி கோவிந்தம்’ என்ற சிறுநூல் எழுதினார். அந்த நூலைப் பற்றி டாக்டர் ஆ.ரா. வெங்கடாசலபதி அவர்கள், புலவர் த.கோவேந்தன் எழுதிய புதுநாநூறு என்ற நூலுக்கு எழுதியுள்ள முன்னோட்டத்தில் “இராஜாஜியின் பஜ கோவிந்தத்தை நையாண்டி செய்து விந்தன் ‘பசி கோவிந்தம்’ எழுதினார். இராஜாஜி அரசியல் தலைவராகவும் இந்தியாவின் நடுவண் ஆளுநராகவும் இருந்ததால் அவருக்கு இலக்கிய பீடத்தில் இடம் கிடைத்து விட்டது. அவருடைய பஜ கோவிந்தத்தை வாங்கு வாங்கு என்று வாங்குகிறார் விந்தன். இயல்பாகவே விந்தன் ஒரு சிறுகதையோ, நாவலையோ எழுதும் போதுகூட ஆசிரியர் கூற்றாகப் பகுதிக்கு ஒரு வரியேனும் எழுதி சமூக இழிவுகளையும் ஒழுக்கங்களையும் நையாண்டி செய்யாமல் விந்தனுக்குக் கதையை நடத்திச் செல்லத் தெரியாது. அப்படி இருக்கையில் நையாண்டி செய்வதற்காகவே எழுதப்பட்ட ‘பகடி’ நூலில் கேட்க வேண்டுமா? தன்னுடைய நூலைப் புடைநூல் என்று குறிப்பிட்டாலும் குறிப்பிட்டார் ‘புடை புடை’ என்று புடைத்து விடுகிறார் விந்தன்” எனக் குறிப்பிடுகிறார். பசி கோவிந்தத்தில் முப்பத்தொரு பாடல்கள் இருக்கின்றன. உதாரணத்திற்கு சில பாடல்கள். 

Continue Reading →