‘தனிமனித அவலத்தின் நினைவுகள் கூட்டு மனநிலையில் வடுவாக மாறுகின்றன.’ பா.அகிலனின் ‘அம்மை’ கவிதை நூலை முன்வைத்து…

'தனிமனித அவலத்தின் நினைவுகள் கூட்டு மனநிலையில் வடுவாக மாறுகின்றன.' பா.அகிலனின் 'அம்மை' கவிதை நூலை முன்வைத்து…  தேவகாந்தன்மறைந்த கலை இலக்கிய விமர்சகர் வெங்கட் சாமிநாதன்மூலம் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் பா.அகிலனது கவிதைகளுடனான அறிமுகம் எனக்கு ஏற்பட்டது. இந்த அறிமுகத்தைத் தொடர்ந்தே ‘பதுங்கு குழி நாட்கள்’ தொகுப்புக்குள்ளான என் பிரவேசம் இருந்தது. அவரது அடுத்த கவிதைத் தொகுப்பு ‘சரமகவிகள்’ வெளிவந்தபோது, மேலும் அவரது கவிதைகளை அறிவதற்கான தரவுகளுடன் நான் இருந்திருந்தேன். ‘அம்மை’ தொகுப்பு வெளிவந்தபொழுது அவருடன் நேரடி அறிமுகமே உண்டாகியிருந்தது. கவிதைகளின் அகத்துள்ளும் அகலத்துள்ளும் சென்று தேட இது இன்னும் வாய்ப்பாக அமைந்தது.  

‘அம்மை’ தொகுப்பை புரட்டியதுமே என் மனத்தில் ஞாபகமானது சோ.ப.வின் ‘தென்னிலங்கைக் கவிதைகள்’ மொழிபெயர்ப்பு நூலுக்கு பேராசிரியர் கா.சிவத்தம்பி எழுதியிருந்த 22 பக்க முன்னுரை. ‘அம்மை’யிலும் கீதா சுகுமாரனின் அதைவிட நீண்ட பின்னுரையொன்று இடம்பெற்றிருக்கிறது. பா.அகிலனின் மூன்று கவிதைத் தொகுப்புகளினையும் உள்ளடக்கி பல தளங்களினூடாகவும் அலசிய ஆய்வு அது. எனினும் பின்னுரையின் தேவை பின்னாலேதான் ஏற்படுகிறது. அப்போது ‘அம்மை’ கவிதைகள் குறித்து வாசகன் இன்னும் கூடுதல் வெளிச்சம் பெறுகிறான்.

ஈழக் கவிதையாக வரலாற்றின் அடுக்கில் வைத்தும், இதிலிருந்து கிளைத்த புலம்பெயர் கவிதையென்ற புதிய வகையினத்துடன் ஒப்பவைத்தும், தமிழ்க் கவிதையானதால் தமிழக கவிதைகளுடனும் ‘அம்மை’ நோக்கப்படலாம். அது ‘அம்மை’பற்றிய அகல்விரிவான ஒரு பார்வையைத் தருமென்பது மெய்யே. ஆனாலும் கவிதையென்ற ஒற்றைத் தளத்தில் இது அடையக்கூடிய பேறுகள் முக்கியமானவை. அதனால் இவ்வொப்பீடுகளின் கவனிப்பு அகன்றுவிடாதவாறு கவிதையின் நயம் காண்பதே எனது எண்ணம்.

நாற்பத்திரண்டு கவிதைகளைக்கொண்ட ‘அம்மை’ இருபத்தொன்பது கவிதைகளைக் கொண்ட ‘காணாமற் போனாள்’ என்றாகவும், மீதி பதின்மூன்று கவிதைகள் ‘மழை’யென்றாகவும் அமைவுபெற்றிருக்கின்றது. ஆயினும் துல்லியமாய் வித்தியாசப்படும் பொருள்களைப் பேசுகிற கவிதைகளை இவை கொண்டில்லை. ஒரே விஷயத்தை அடிநாதமாய்க்கொண்டு வெவ்வேறு கதிகளிலும் ஆழங்களிலும் பேசுகிறவையாகவே அவை பெரும்பாலும் இருக்கின்றன. வேறுவேறு உணர்ச்சிகளைப் பேசுகிற கவிதைகளை தொகுப்பு உள்ளடக்கியிருப்பினும் அவை ‘மழை’யென்கிற இரண்டாம் பகுதியிலேயே அதிகமாயும் உள்ளன. இந்த இரண்டு வகைக் கவிதைகளுக்கிடையிலும் கவிதைநிலை சார்ந்த வித்தியாசம் இருக்கவே செய்கிறது. அது அவை வெளிப்படுத்தும் கருத்துக்களின் காரணத்தாலாகும்.

தனதும், பிறரதுமான போர்க்கால அனுபவங்களிலிருந்து சுழித்தெழுந்த இத் தொகுப்பின் பெரும்பாலான கவிதைகளின் ஊற்று மன உடல்ரீதியாக அடைந்த அவலங்களினதும் வடுக்களினதும் மய்யத்திலிருந்தே பீரிட்டெழுகிறது. கைகால்கள் போன்ற பொறிகள் மட்டுமில்லை, புலன்களும்கூட இழக்கப்பட்டன. மிகக்கொடூரமான மனித அவலம் சம்பவித்தது. ஆனால் அந்த அவல உணர்வுகள் மீளுதல் சாத்தியமற்ற நிர்கதியின் இருளாய் உறைவடைந்து மேலும் பகுக்கக்கூடிய திண்மமாய் ‘அம்மை’ கவிதைகளில் மாற்றம் பெறுகின்றன.  

போர்க்கால அவலங்களில் அமிழ்ந்துகிடந்து அவற்றின் உடலியற் துன்பங்களையும், மனோவியல் பாதிப்புகளையும் பொதுவில் பேசுகிற நிலையொன்று இருக்கிறது. இது வெளிப்படையானது. இன்னொன்று, தன்னை அவலத்தின் பின்னால் மறைந்திருந்துகொண்டு குரல்மட்டும் கொடுத்துக்கொள்கிற ஒரு நிலை.

Continue Reading →