அ.ந.கந்தசாமி ( ‘கவீந்திரன்’) கவிதைகள் 5: முன்னேற்றச் சேனை!

– அறிஞர் அ.ந.கந்தசாமி ‘கவீந்திரன்’ என்னும் புனைபெயரிலெழுதி ‘பாரதி’ இதழில் வெளிவந்த இன்னுமொரு கவிதையிது. –

அறிஞர் அ.ந.கந்தசாமி ( 'கவீந்திரன்') கவிதைகள் 5:  முன்னேற்றச் சேனை!1.

முன்னேற்றச் சேனை ஒன்று மூவுலகும் வாழ்ந்திட
மூடத்தனம் யாவு நிர் மூலமாகி வீழ்ந்திட
முன்னேறிச் செல்லுகின்ற முகூர்த்தம் இஃது தோழர்காள்
முடியரசும் முதலரசும் முடிந்து பொடியாகுது!
பின்னேற்ற பேரெல்லாம் விழி பிதுங்குகின்றனர்
பீடைகட்கு முடிவு வந்ததே யென்று கவல்குனர்!
இன்னாளை போலொருநாள் இன்று வரையில்லையே
இத்தருணம் எழுந்திடுக, எங்கள் சேனை சேர்ந்திட!

2.
எங்கள் சேனை அச்சமென்பதென்றுமறியாதது.
எட்டுத் திக்கும் அதன் ஒலியே முட்டி முழங்குகின்றது!
மங்கி நிற்கும் பாசிசத்தை மண்ணிடத்தே புதைத்துப் பின்
மரண கீதம் பாடும் வரை ஓய்வதற்கு இல்லையே!
எங்கும் அடிமை சுரண்டல் என்னும் பிசாசுதீய்ந்து மாய்ந்து
இவ்வுலக மக்களெல்லாம் ஒரு சமானமாகினால்
துங்கமான எம்படையின் வெற்றி அதுவாகுமே!
துகளிலாத புது உலகம் தோன்றல் வேண்டும் என்பமே!

Continue Reading →