பண்டைக் காலத்தில் விலங்குகளைப் போன்று அலைந்து திரிந்த மனிதன் காலப் போக்கில் பல படிநிலைகளைக் கடந்து வளர்ச்சி பெறலானான். உணவினைத் தேடி அலைந்த மனித இனம் உணவினை உற்பத்தி செய்யத் தொடங்கி நிலையான ஒரு குடியிருப்பை அமைத்துக் கொண்டு வாழத் தொடங்கியது முதல் சமூகம் என்ற ஒரு அமைப்பு தோற்றம் பெறலாயிற்று. அது முதல் அவர்களிடையே ஓர் உறவு ஏற்பட்டது. காலப்போக்கில் இவ்வுறவுகளே மனிதனை உயர்நிலைக்கு அழைத்துச் சென்றது. மேலும் ஒரு சமுதாயத்தின் உயர்வு தாழ்வுகளை நிர்ணயிக்கக்கூடிய காரணிகளுள் ஒன்றாக வளர்ச்சி பெற்றது. ஓர் உறவு ஏற்பட வேண்டுமெனில் குறைந்த அளவு இருவர் தேவை இவ்விருவரும் ஒருவரை மற்றொருவர் ஏதோ ஒரு சொல்லால் குறிப்பிட முற்படும் பொழுது அவர்கள் குறிப்பிட்ட உறவுமுறையை ஏற்க வேண்டியுள்ளது. இவ்வாறு ஒவ்வொரு தனிநபரும் ஒரே வேளையில் பல உறவு நிலைகளை அடைய நேரிடுகிறது. அதே வேளையில் இந்த உறவுகளைக் குறிக்க பல வகையான உறவுமுறைச் சொற்களும் தோன்றியது. உறவுமுறைகள் பற்றிய ஆராய்ச்சியில் இவ்வுறவுமுறைச் சொற்கள் முக்கிய இடம் பெறுகின்றது.
ஆய்வு நோக்கம்
உறவுமுறைச் சொற்கள் ஆய்வில் மானிடவியலார்தான் அதிக கவனம் செலுத்தியுள்ளார்கள். அவர்கள் ஒரு சமுதாயத்தில் காணப்படும் உறவுமுறைச் சொற்களைக் கண்டுபிடித்து வகைப்படுத்த பலவகையான அணுகுமுறைகளைக் கையாண்டுள்ளனர். அவற்றின் அடிப்படையில் பாறப்பட்டி இருளர்களின் சமுதாய அமைப்பில் காணப்படும் உறவுமுறைச் சொற்களை ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.
பாறப்பட்டி இருளர்கள்
கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் அமைந்துள்ள மேற்குத் தொடர்ச்சி மலையில் கடல் மட்டத்திலிருந்து சுமார் 1200 அடி உயரத்தில் அடர்ந்த வனப்பகுதிகளுக்கு நடுவே அமைந்துள்ள இருளர் குடியிருப்பு பாறப்பட்டி ஆகும். இருளர்கள் இந்திய நடுவண் அரசால் இனம் காணப்பட்ட “பண்டைய பழங்குடி இனத்தவர்” (Primitive Tribes) ஆவர். மேற்கே வண்ணப்பாறை, தெற்கே மங்கலத்தாள் பாறை, கிழக்கே சங்கிலிப்பாறை இவ்வாறு மூன்று பக்கங்களும் பாறைகளை எல்லையாகக் கொண்டுள்ளதால் இவ்வூர் பாறப்பட்டி என்று பெயர் பெற்றது. பாறப்பட்டி இருளர்கள் திராவிட மொழிக்குடும்பத்தைச் சார்ந்த “இருள” மொழியைப் பேசுகின்றனர். இவர்களின் மொழியில் தமிழ், மலையாளம், கன்னடம் கலந்து காணப்படுகின்றது. இருளர்கள் தங்களுக்குள் உள்ள பிரிவுகளை ‘குலம்’ என்று குறிப்பிடுகின்றனர். இவர்களிடையே மொத்தம் 12 குலங்களும் 96 வகை உட்பிரிவுகளும் காணப்படுகின்றன. இருளர்கள் ஆவி, ஆன்மா, மாந்திரீகம், பில்லிசூனியம் போன்றவற்றில் அதிக நம்பிக்கை உடையவர்கள். இவர்கள் காட்டு விலங்குகளை வேட்டையாடுவதில் நுண்மதி படைத்தவர்கள். பாறப்பட்டி இருளர்கள் பேச்சு வழக்கு, சடங்குகள் போன்றவற்றால் மற்ற இருளர்களிடமிருந்து தனித்து நிற்கின்றனர். தற்பொழுது இவர்கள் வேலைவாய்ப்பு, குழந்தைகளின் கல்வி போன்ற பல காரணங்களுக்காக மலையை விட்டு கீழே இறங்கி மலையடிவாரங்களில் குடியேறியுள்ளனர். இவர்கள் தமிழ்நாட்டில் கோவை மாவட்டத்தில் பெருமாள் கோவில் பதி, மூங்கில் மடை குட்டை பதி, முருகன் பதி, புதுப்பதி, சின்னாம்பதி மற்றும் கேரள மாநிலத்தில் வாளையார் அருகே நடுப்பதி ஆகிய ஊர்களில் வசித்து வருகின்றனர். மேலும் தாங்கள் பாறப்பட்டியில் இருந்து வந்ததால் தங்களை பாறப்பட்டி இருளர் என்று அடையாளப்படுத்திக் கொள்கின்றனர்.