– -வேலணையூர்த் தொல்காவியன் மன்றில் நடைபெற்ற தமிழ்மறை விழாக் கவியரங்கில் அறிஞர் அ.ந.கந்தசாமி பாடியவை. நவீனத்தமிழ் இலக்கியத்தில் வள்ளுவரைப்பற்றி வெளிவந்த சிறந்த கவிதையிது. –
வள்ளுவனார் செய்திட்ட நிறைநூலைப் போற்றி
வாழ்த்தெடுக்க வந்திட்டேன் வண்கவிஞர் மன்றில்
தெள்ளுதமிழ்த் தீங்கவிதைத் தேனமுதம் நல்கும்
தெவிட்டாத நடராசர் கவியரங்கின் தலைவர்
விள்ளுகவி கேட்டோம்; பிறர் கவியும் கேட்டோம்
வேலணையூர் வீசுபுகழ் தொல்காவியன் மன்றில்
வள்ளுவனார் புகழ்பாட வாய்த்ததொரு வாய்ப்பு
வாய்ப்பளித்த பண்டிதர்க்கு என்னுளத்தின் வாழ்த்து.
பாட்டாலே உலகத்தைக் கவர்ந்திட்ட பேரில்
பைந்தமிழர் தம்மிடையே வள்ளுவர்போல் யாரே?
பாட்டாளிக் கவிஎனவே அன்னவனைப் போற்றிப்
பரவிடுவேன் அதற்கும்பல ஆதாரம் சொல்வேன்
நாட்டினிலே மிகச்சிறந்த நெசவென்னும் கலையை
நற்றொழிலாய்க் கொண்டிட்ட கவியரசர் கோமான்
பாட்டாக வடித்தெடுத்தான் அநுபவத்தின் கோர்வை
பாரெல்லாம் போற்றுததை தமிழ்வேதம் என்றே.