அ.ந.கந்தசாமி (கவீந்திரன்) கவிதைகள் 4: மாம்பொழிலாள்.

அறிஞர் அ.ந.கந்தசாமி (கவீந்திரன்) – மாம்பொழிலாள் புத்தரின் புனிதச்சின்னம். பேரழகின் ஓர் உருவாய் அமைந்த அவள் ஒரு கணிகையாய் வாழ்ந்து பின் போதி மாதவனின் அட்டாங்க மார்க்கத்தில் ஆட்கொள்ளப்பட்டவள். அம்பபாலி என்று அழைக்கப்பட்ட  அம்மாஞ்சோலை மங்கையைக் காவிய நாயகியாக்கி அ.ந.கந்தசாமி அவர்கள் புனைந்துள்ள  மாம்பொழிலாள் என்ற சிறு காப்பியத்தின்  சில பகுதிகளை ‘நோக்கு’ இங்கே தன் வாசகர்களுக்கு மகிழ்ச்சியுடன் அளிக்கிறது [ஆ-ர்]


எங்கிருந்து வந்தாள்?

எங்கிருந்து வந்தாளோ எழிலரசி யாமறியோம்
தங்கத்தை உருக்கிஅதில் தாவிவரும் உயிர்வார்த்துப்
பொங்குகின்ற பேரழகு பூரித்து நிற்கும்நல்
அங்கங்கள் அமைந்திங்கே ஆரனுப்பி னார்அவளை?

வானத்துச் சந்திரனை வாவியிலே தாமரையை
கானத்து மாமயிலைக் காரிகையார் குலத்தினையே
மோனத்தில் மூழ்கிஇவண் முற்றுவித்த பேரயனார்
தேனொத்த சேயிழையைத் தெரிந்திங்கு படைக்கையிலே

அதுவரையும் தான்படைத்த அழகென்னும் பொருளெல்லாம்
மதுவொத்த மைவிழியாள் மலருடலின் அழகின்முன்
இதுவெல்லாம் ஓர்அழகோ இன்பப்பூங் கொடிஇவளின்
மெதுவுடலின் அழகன்றோ அழகென்று மேதினியார்

மெச்சட்டும் என்றிங்கு மெலச்செய்து விட்டானோ?
நச்சொச்ச நயனத்தின் நளினத்தின் வயப்பட்டு
விச்சவிநாட் டிளைஞர்கள் வல்லியவள் லீலைக்காய்
சச்சரவிட் டுலகம்இது சாயட்டும் என்றெண்ணி

Continue Reading →