தமிழினி ஜெயக்குமரனின் ‘மழைக்கால இரவு’ சிறுகதைத்தொகுப்பு தமிழகத்தின் ‘பூவரசி’ பதிப்பகமும், இலங்கையிலுள்ள ‘ஷேக் இஸ்மையில் நினைவுப் பதிப்பக’மும் இணைந்து கடந்த ஆண்டு வெளியிட்ட நூல். ஏற்கனவே சிங்களத்தில் வெளியான ‘அளுயம் சிஹினய’ சிறுகதைத்தொகுப்பின் மூல வடிவம். ‘கவுரவக் கவசம்’, ‘மழைக்கால இரவு’, ‘சுதர்சினி’, ‘வைகறைக் கனவு’, ‘பாக்கியம்மா’ மற்றும் ‘எனது மகன் வந்திட்டான்’ ஆகிய ஆறு கதைகளின் தொகுப்பு. தமிழினியின் மறைவுக்குப்பின்னர் அவரது சுயசரிதையான ‘ஒரு கூர்வாளின் நிழலில்’, ‘தமிழினி கவிதைகள்’ மற்றும் ‘மழைக்கால இரவு’ (சிறுகதைத்தொகுப்பு) ஆகிய நூல்களை வெளியிடக் காரணமாகவிருந்த அவரது கணவர் ஜெயக்குமரனை நிச்சயம் பாராட்டத்தான் வேண்டும். இவை அனைத்துமே தமிழினியின் அனுபவங்களை கலை, இலக்கிய மற்றும் அரசியல் வரலாற்றில் பதிவு செய்பவை. அத்துடன் தமிழினியின் பல்வேறு காலகட்டச் சிந்தனைப்போக்குகளின் பரிணாம வளர்ச்சியினை வெளிப்படுத்துபவை.
தமிழினியின் ‘மழைக்கால இரவு’ சிறுகதைத்தொகுப்பும் இலங்கை அரசின் சாகித்திய அமைப்பின் 2017ஆம் ஆண்டுச் சிறந்த சிறுகதைத்தொகுப்பு விருதுக்காகப் பரிந்துரைக்கப்பட்ட இறுதிச்சுற்றில் தெரிவான மூன்று நூல்களிலொன்றாக இருந்தது என்னும் விடயத்தை அறிந்தேன். இறுதிச்சுற்றுக்குத் தெரிவான மூன்று நூல்களின் விபரங்கள் வருமாறு:
1. ஒரு பெண்ணின் கதை – எம்.எஸ்.அமானுல்லா
2. உயிருதிர் காலத்தின் இசை – பதுளை சேனாதிராஜா
3. மழைக்கால இரவு – தமிழினி ஜெயக்குமாரன்
( இறுதியில் விருது பெற்ற நூல் பதுளை சேனாதிராஜாவின் ‘உயிருதிர் காலத்தின் இசை’.)
தமிழினியின் மேற்படி தொகுப்பிலுள்ள சிறுகதைகளில் ‘மழைக்கால இரவு’, ‘வைகறைக் கனவு’ மற்றும் ‘பாக்கியம்மா’ ஆகிய சிறுகதைகள் ‘பதிவுகள்’ இணைய இதழில் வெளியாகியவை என்பதை இத்தருணத்தில் நினைத்துப்பார்க்கின்றேன். அவர் முதலில் ‘பதிவுகள்’ இணைய இதழுக்கு அனுப்பிய சிறுகதை ‘மழைக்கால இரவு’. அதனை வெளியிட்டபோது கீழுள்ள குறிப்புடன் வெளியிட்டோம்:
Continue Reading →