இலக்கியங்கள் யாவும் மனித சமூகம் நன்கு வாழ்வதற்குரிய சூழலைத் தோற்றுவித்தல் வேண்டும். அந்நிலையை பண்டையக் காலந்தொட்டு இன்று வரையும் தமிழ் இலக்கியங்கள் செய்து வருகின்றன எனலாம். சங்க இலக்கியம், சங்க மருவிய கால இலக்கியம், காப்பியங்கள், சிற்றிலக்கியங்கள், பக்தி இலக்கியங்கள் என பல்வகையில் தோன்றிய தமிழ் இலக்கியங்கள் ஐரோப்பியர் வருகைக்குப் பின்னர் புதிய எழுச்சியோடு, மரபினை உடைத்த இலக்கியங்களாய்த் தோன்றின. அவற்றுள் சிறகதை, புதினம், புதுக்கவிதை தனிச்சிறப்புடைய இலக்கிய வகைமைகளாகும்.
தமிழ் இலக்கிய வரலாற்றில் எல்லோரும் படிக்கும் வண்ணமும், தொழில்நுட்ப வளர்ச்சி கொண்ட சூழலுக்கு ஏற்றவாறும் அமைந்த சிறுகதைகள், புதினம், புதுக்கவிதைகள் போன்றவை நடைமுறை நிகழ்ச்சிகள், அதனால் விளையும் செயல்கள் ஆகியவற்றை உரைநடையில் எளிமையாகவும், நுட்பமாகவும், சமூகப் பின்புலங்களோடு எடுத்துரைத்ததை நாம் மறுக்க இயலாது. அத்தகைய இலக்கியங்களுள் சிறுகதையின் வரவு மிகச் சிறந்த இலக்கிய கலைப்படைப்பாக மாறி வாசகர்களைக் கூடுதலாக்கியது என்றே கருதலாம்.
20-ஆம் நூற்றாண்டில் புதுமைப்பித்தன், மௌலி, நா.பிச்சைமூர்த்தி, லா.சா.இராமாமிர்தன், கல்கி, அகிலன், அரவிந்தன், சுந்தரராமசாமி, ரெகுநாதன் போன்ற பலரும் சிறுகதைப் படைப்பதில் தனித்தன்மைப் பெற்று விளங்கினர். அத்தகையோhpன் ஆற்றலைப்போல ‘வண்ணநிலவன்’ அவர்களின் சிறுகதைகளும் மிகச்சிறந்த படைப்பாக வலம் வந்தது என்றே கூறலாம்.
“கதைக்கரு எந்த இடத்திலிருந்தும் வரக்கூடும் எந்த நேரத்திலும் வரக்கூடும். ஊசி குத்துவது போல் சுருக்கென்று தைக்கக்கூடியது அது” (டாக்டர்.கோ.கேசவன், தமிழ்ச் சிறுகதைகளில் உருவம், ப.50)
என்பதற்கு ஏற்ப, எல்லா சூழலிலும், வாழும் புற உலகு மனிதனின் அக வாழ்க்கையை மிக நுட்பமாக வெளிப்படுத்தும் திறன் கொண்டவராய் வண்ணநிலவன் காணப்படுகின்றார். மேலும்,
“சிறுகதையில் பாத்திரங்கள் வளர்க்கப்படுவதில்லை, வார்க்கப்படுகின்றன. அதாவது வார்த்த பாத்திரங்களின் இயக்க நிலையில் தோன்றும் ஓர் உண்மை தான் சிறுகதையின் கருவாக அமையும்” (கா.சிவதம்பி, தமிழ்ச் சிறுகதையின் தோற்றமும் வளர்ச்சியும், ப. )
என்பதற்கு ஏற்பவும், மிக அழகாக, நுட்பமாக, தெளிவாக சிறுகதைக்கு ஏற்றார் போல பாத்திரங்களைப் படைத்து கதைக்கருவை மிகச் சிறப்பாக அமைத்துள்ளார் எனலாம்.
‘யுகதர்மம்’ கதையும், சமூக நிலையும்
வண்ணநிலவன் சிறுகதைத் தொகுப்பிலுள்ள முதல் சிறுகதையே அவர் கதைக்கரு அமைத்த விதத்தையும், கதைப்பின்னலையும் மிக நுட்பமாக அடையாளப்படுத்திவிடுகின்றன எனலாம். நடுத்தர, வறுமைக் கோட்டுக்குக் கீழான மக்களே இவர் கதையின் பெரும்பகுதி பாத்திரங்கள், நடுத்தர வர்க்க மக்களின் வாழ்க்கை நிலையையும், சமூகத்தில் ஏற்படுகின்ற அகநிலை, புறநிலைச் சார்ந்த கருத்தியலும், மக்களின் வாழ்க்கைச் சிக்கல்கள், தீர்வுகள் எனப் பலவற்றையும் இவர் கதைகள் எடுத்துரைக்கின்றன என்பதை ‘யுகதர்மம்’ என்ற ஒரு கதையே சான்றாக அமைந்துவிடும்.