இலக்கியங்கள் யாவும் மனித சமூகம் நன்கு வாழ்வதற்குரிய சூழலைத் தோற்றுவித்தல் வேண்டும். அந்நிலையை பண்டையக் காலந்தொட்டு இன்று வரையும் தமிழ் இலக்கியங்கள் செய்து வருகின்றன எனலாம். சங்க இலக்கியம், சங்க மருவிய கால இலக்கியம், காப்பியங்கள், சிற்றிலக்கியங்கள், பக்தி இலக்கியங்கள் என பல்வகையில் தோன்றிய தமிழ் இலக்கியங்கள் ஐரோப்பியர் வருகைக்குப் பின்னர் புதிய எழுச்சியோடு, மரபினை உடைத்த இலக்கியங்களாய்த் தோன்றின. அவற்றுள் சிறகதை, புதினம், புதுக்கவிதை தனிச்சிறப்புடைய இலக்கிய வகைமைகளாகும்.
தமிழ் இலக்கிய வரலாற்றில் எல்லோரும் படிக்கும் வண்ணமும், தொழில்நுட்ப வளர்ச்சி கொண்ட சூழலுக்கு ஏற்றவாறும் அமைந்த சிறுகதைகள், புதினம், புதுக்கவிதைகள் போன்றவை நடைமுறை நிகழ்ச்சிகள், அதனால் விளையும் செயல்கள் ஆகியவற்றை உரைநடையில் எளிமையாகவும், நுட்பமாகவும், சமூகப் பின்புலங்களோடு எடுத்துரைத்ததை நாம் மறுக்க இயலாது. அத்தகைய இலக்கியங்களுள் சிறுகதையின் வரவு மிகச் சிறந்த இலக்கிய கலைப்படைப்பாக மாறி வாசகர்களைக் கூடுதலாக்கியது என்றே கருதலாம்.
20-ஆம் நூற்றாண்டில் புதுமைப்பித்தன், மௌலி, நா.பிச்சைமூர்த்தி, லா.சா.இராமாமிர்தன், கல்கி, அகிலன், அரவிந்தன், சுந்தரராமசாமி, ரெகுநாதன் போன்ற பலரும் சிறுகதைப் படைப்பதில் தனித்தன்மைப் பெற்று விளங்கினர். அத்தகையோhpன் ஆற்றலைப்போல ‘வண்ணநிலவன்’ அவர்களின் சிறுகதைகளும் மிகச்சிறந்த படைப்பாக வலம் வந்தது என்றே கூறலாம்.
“கதைக்கரு எந்த இடத்திலிருந்தும் வரக்கூடும் எந்த நேரத்திலும் வரக்கூடும். ஊசி குத்துவது போல் சுருக்கென்று தைக்கக்கூடியது அது” (டாக்டர்.கோ.கேசவன், தமிழ்ச் சிறுகதைகளில் உருவம், ப.50)
என்பதற்கு ஏற்ப, எல்லா சூழலிலும், வாழும் புற உலகு மனிதனின் அக வாழ்க்கையை மிக நுட்பமாக வெளிப்படுத்தும் திறன் கொண்டவராய் வண்ணநிலவன் காணப்படுகின்றார். மேலும்,
“சிறுகதையில் பாத்திரங்கள் வளர்க்கப்படுவதில்லை, வார்க்கப்படுகின்றன. அதாவது வார்த்த பாத்திரங்களின் இயக்க நிலையில் தோன்றும் ஓர் உண்மை தான் சிறுகதையின் கருவாக அமையும்” (கா.சிவதம்பி, தமிழ்ச் சிறுகதையின் தோற்றமும் வளர்ச்சியும், ப. )
என்பதற்கு ஏற்பவும், மிக அழகாக, நுட்பமாக, தெளிவாக சிறுகதைக்கு ஏற்றார் போல பாத்திரங்களைப் படைத்து கதைக்கருவை மிகச் சிறப்பாக அமைத்துள்ளார் எனலாம்.
‘யுகதர்மம்’ கதையும், சமூக நிலையும்
வண்ணநிலவன் சிறுகதைத் தொகுப்பிலுள்ள முதல் சிறுகதையே அவர் கதைக்கரு அமைத்த விதத்தையும், கதைப்பின்னலையும் மிக நுட்பமாக அடையாளப்படுத்திவிடுகின்றன எனலாம். நடுத்தர, வறுமைக் கோட்டுக்குக் கீழான மக்களே இவர் கதையின் பெரும்பகுதி பாத்திரங்கள், நடுத்தர வர்க்க மக்களின் வாழ்க்கை நிலையையும், சமூகத்தில் ஏற்படுகின்ற அகநிலை, புறநிலைச் சார்ந்த கருத்தியலும், மக்களின் வாழ்க்கைச் சிக்கல்கள், தீர்வுகள் எனப் பலவற்றையும் இவர் கதைகள் எடுத்துரைக்கின்றன என்பதை ‘யுகதர்மம்’ என்ற ஒரு கதையே சான்றாக அமைந்துவிடும்.
– அண்மையில் ‘பதிவுகள்’ இணைய இதழில், முகநூலில் வ.ந.கிரிதரன் எழுதிய குறிப்புகள், தமிழ்சின் சிஎன் இணையத்தளத்தில் நக்கீரன் எழுதிய நீண்ட கட்டுரை, முகநூலில் விஜயபாஸ்கரன், எழுத்தாளர் பா.அ.ஜயகரன், எழுத்தாளர் கருணாகரன் ஆகியோர் தெரிவித்த கருத்துகள் பற்றி அனுபவம் மிகுந்த மின் பொறியியலாளர் ஜானகி பாலகிருஷ்ணன் அவர்கள் அனுப்பி வைத்த எதிர்வினை இது. உங்கள் கருத்துகளையும் அனுப்பி வையுங்கள். ஆக்கபூர்வமான கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. பதிவுகளுக்கு உங்கள் கருத்துகளை ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்.- பதிவுகள் –
அண்மையில் சிறீ லங்கா பிரதமரும், யு.என்.பீ. கட்சியின் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க அவர்கள் 200 கோடிகள் பெறுமதியான திட்டமாக மகாவலி ஆற்றினை முல்லைத்தீவு வரை திருப்பப் போவதாகவும், அதனுடன் முல்லைத்தீவின் சில பகுதிகளில் சிங்களக் குடியேற்றத்தினை அமுல்படுத்தப் போவதாவும் அறிவித்தார் என செய்திகள் வெளிவந்தன. அதனையொட்டி பதிவுகள், கட்டுரைகள், கருத்துகள், எதிர்ப்புகள் என்று பல சம்பவங்கள் நடந்தன.
கடந்த புதன்கிழமை, ஆகஸ்ட் 29, 2018 தினம் நண்பர் Giritharan Navaratnam மகாவலித்திட்டம் திசை திருப்பப்படுமாயின் வடக்கு-கிழக்கிற்கான அது பற்றிய பயன்பாடு பற்றியும், அது தொடர்பான ஏற்கத்தகு குடியேற்றத்திட்டம் எவ்வாறு இருக்கவேண்டும் என்பது பற்றியும் தனது கருத்துகளடங்கிய பதிவினைப் பகிர்ந்தார். அவை மறுப்பேதும் கூறாமல் ஏற்றுக் கொள்ளக்கூடியவையே.
இதனிடையே நண்பர் Vijaya Baskaran தனது புதன்கிழமை, ஆகஸ்ட் 28, 2018 “ஏமாற்றாதே ஏமாறாதே” என்ற தலைப்பில் உள்ள பதிவில், பல தரவுகளைத் தந்தும் சில கடந்தகால குடியேற்றத் திட்ட விபரங்களையும் தனது கருத்துகளையும் தெரிவித்திருந்தார். அவையும் ஏற்றுக்கொள்ளக் கூடியதாகவே இருந்தன.
அத்துடன் தானறிந்த வரலாறு நிமித்தம் சில குடியேற்றத்திட்டங்களில் பங்கேற்க தமிழர் முன்வரவில்லை என்பதையும் குறிப்பிட்டு, கல்லோயா திட்டத்தில் தமிழர் உதவிகளைப் பெற்று குடியேறவில்லை எனும் பதிவு பற்றிய உண்மை, பொய் தெரியவில்லை என்றும் கிரிதரன்க கூறியிருந்தார்.
அதே பதிவில் Tamilcnn எனும் தளத்தில் பதிவான, “திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்கள் எல்லாவற்றிலும் மிக மோசமானது அதே சமயம் ஆபத்தானது வெலிஓயா ஆகும்” எனும் தலைப்பில் நக்கீரன் என்பவரினால் எழுதப்பட்ட நீண்ட கட்டுரையின் சில முக்கியமான பகுதிகளை இணைத்து ஆரோக்கியமான தர்க்கத்திற்கு தந்திருப்பதாகக் கிரிதரன் கூறியிருந்தார். இது பற்றிய உங்கள் கருத்தகளைப் பகிருங்கள் நண்பர்களே என்று ஒரு பரந்த வேண்டுகோளையும் விடுத்திருந்தார்.
ஈழத்தின் படைப்பிலக்கிய ஆளுமைகளில் ஒருவரான தெணியான் அவர்களின் படைப்புலகம் பற்றிய உரைகளும், மூன்று நாவல்களின் அறிமுகமும்!
காலம்: 22-09-2018 சனிக்கிழமை பி.ப. 4:30 மணி
இடம்: Scarborough Village Recreation Centre, 3600 Kingston Rd., Toronto, On M1M 1R9 (Markham & Kingston/Eglinton)
தமிழினி ஜெயக்குமரனின் ‘மழைக்கால இரவு’ சிறுகதைத்தொகுப்பு தமிழகத்தின் ‘பூவரசி’ பதிப்பகமும், இலங்கையிலுள்ள ‘ஷேக் இஸ்மையில் நினைவுப் பதிப்பக’மும் இணைந்து கடந்த ஆண்டு வெளியிட்ட நூல். ஏற்கனவே சிங்களத்தில் வெளியான ‘அளுயம் சிஹினய’ சிறுகதைத்தொகுப்பின் மூல வடிவம். ‘கவுரவக் கவசம்’, ‘மழைக்கால இரவு’, ‘சுதர்சினி’, ‘வைகறைக் கனவு’, ‘பாக்கியம்மா’ மற்றும் ‘எனது மகன் வந்திட்டான்’ ஆகிய ஆறு கதைகளின் தொகுப்பு. தமிழினியின் மறைவுக்குப்பின்னர் அவரது சுயசரிதையான ‘ஒரு கூர்வாளின் நிழலில்’, ‘தமிழினி கவிதைகள்’ மற்றும் ‘மழைக்கால இரவு’ (சிறுகதைத்தொகுப்பு) ஆகிய நூல்களை வெளியிடக் காரணமாகவிருந்த அவரது கணவர் ஜெயக்குமரனை நிச்சயம் பாராட்டத்தான் வேண்டும். இவை அனைத்துமே தமிழினியின் அனுபவங்களை கலை, இலக்கிய மற்றும் அரசியல் வரலாற்றில் பதிவு செய்பவை. அத்துடன் தமிழினியின் பல்வேறு காலகட்டச் சிந்தனைப்போக்குகளின் பரிணாம வளர்ச்சியினை வெளிப்படுத்துபவை.
தமிழினியின் ‘மழைக்கால இரவு’ சிறுகதைத்தொகுப்பும் இலங்கை அரசின் சாகித்திய அமைப்பின் 2017ஆம் ஆண்டுச் சிறந்த சிறுகதைத்தொகுப்பு விருதுக்காகப் பரிந்துரைக்கப்பட்ட இறுதிச்சுற்றில் தெரிவான மூன்று நூல்களிலொன்றாக இருந்தது என்னும் விடயத்தை அறிந்தேன். இறுதிச்சுற்றுக்குத் தெரிவான மூன்று நூல்களின் விபரங்கள் வருமாறு:
1. ஒரு பெண்ணின் கதை – எம்.எஸ்.அமானுல்லா
2. உயிருதிர் காலத்தின் இசை – பதுளை சேனாதிராஜா
3. மழைக்கால இரவு – தமிழினி ஜெயக்குமாரன்
( இறுதியில் விருது பெற்ற நூல் பதுளை சேனாதிராஜாவின் ‘உயிருதிர் காலத்தின் இசை’.)
தமிழினியின் மேற்படி தொகுப்பிலுள்ள சிறுகதைகளில் ‘மழைக்கால இரவு’, ‘வைகறைக் கனவு’ மற்றும் ‘பாக்கியம்மா’ ஆகிய சிறுகதைகள் ‘பதிவுகள்’ இணைய இதழில் வெளியாகியவை என்பதை இத்தருணத்தில் நினைத்துப்பார்க்கின்றேன். அவர் முதலில் ‘பதிவுகள்’ இணைய இதழுக்கு அனுப்பிய சிறுகதை ‘மழைக்கால இரவு’. அதனை வெளியிட்டபோது கீழுள்ள குறிப்புடன் வெளியிட்டோம்:
உருவம், உள்ளடக்கம், படைப்புமொழி, பாத்திர வார்ப்பு, காட்சி சித்திரிப்பு முதலான பல அம்சங்களை உள்ளடக்கியது சிறுகதை வடிவம். இலங்கையில் இந்த இலக்கியம் தோன்றிய காலத்தில், எழுத முன்வந்த எழுத்தாளர்கள் பலர், தென்னிந்திய சிற்றேடுகளில் வெளியான கதைகளின் பாதிப்பில், சென்னை மவுண்ட் ரோட்டையும் மெரீனா பீச்சையும் பின்புலமாகக்கொண்டு கதை பண்ணினார்கள்! அதற்குப்பின்னர் மறுமலர்ச்சிக்காலம் இலக்கியத்தில் பதிவானபோது இலங்கையர்கோன், சி. வயித்திலிங்கம், சம்பந்தன் ஆகியோரின் கதைகள் பரவலான வாசிப்பிற்குட்பட்டு பிரதேச மொழி வழக்குகளும் அறிமுகமாயின. இலங்கையில் இடதுசாரிகளின் இலக்கியப் பிரவேசத்தையடுத்து, முற்போக்கான சிந்தனைகளை அடியொற்றியும், சமூக ஏற்றதாழ்வு – சாதிப்பிரச்சினைகள் – வர்க்கப்போராட்டம் பற்றியும் கதைகள் தோன்றின. இக்கால கட்டத்தில் அறிமுகமான பல விமர்சகர்கள் மார்க்ஸீயப் பண்டிதர்களாகவும் பல்கலைக்கழக விரிவுரையாளர்களாகவும் பேராசிரியர்களாகவும் விளங்கினர். இவர்கள் நமது ஆக்க இலக்கியப்பிரதியாளர்களிடம், சோஷலிஸ யதார்த்தப்பார்வையை எதிர்பார்த்தனர். இதனால் அந்தப்பார்வைக்கு ஏற்பவும் அதே சமயத்தில் அழகியல் அம்சத்துடனும் பலர் ஈழத்து இலக்கிய உலகில் தமது படைப்புகளை அறிமுகப்படுத்தினார்கள். இந்தப்பின்னணியில் தமிழகப்படைப்புகள் கலைத்துவத்தில் முன்னின்றன. ஈழத்து படைப்பு இலக்கியம் இலக்கிய விமர்சன பிதாமகர்களின் ஆசீர்வாதத்தையும் அங்கீகாரத்தையும் எதிர்பார்த்து அழகியலை இழக்கநேர்ந்தது. எனினும் குறிப்பிட்ட சில அழகியல் சார்ந்த படைப்புகள் வெளிவந்தன.
1970 இன் பின்னர் தேசிய இனப்பிரச்சினை இனமுறுகலாகியதும் படைப்பு இலக்கியத்தில் ” இஸங்கள்” குறித்த விமர்சனங்கள் கூர்மையடைந்தன. கேள்விக்குட்படுத்தப்பட்டன. போர்க்காலம் தொடங்கியதும் போர்க்கால இலக்கியமும், போரினால் மக்கள் இடம்பெயர்ந்ததும், இடம்பெயர்ந்தோர் இலக்கியமும் நாட்டைவிட்டு புலம்பெயர்ந்ததும், அவர்கள் மத்தியிலிருந்த இலக்கியவாதிகளினால் புலம்பெயர்ந்தோர் இலக்கியமும் பின்னர் புகலிட இலக்கியமும் வரவாகியது. கொட்டும் பனிக்குள்ளிருந்து நெருப்பின் தீவிரத்துடன் படைத்து, ஆறாம் திணை இலக்கியத்தை அறிமுகப்படுத்தியவர்களிடமிருந்து, வீரியம் மிக்க எழுத்துக்கள் தமிழ் இலக்கிய வாசகப்பரப்பின் பொதுவான கவனத்திற்குட்பட்டுள்ளன. தமிழகமும் இலங்கையும் விழியுயர்த்தி பார்க்கின்றன.
வெளியுலகத்தின் கட்டற்ற சுதந்திரத்தினால் புகலிட வாழ்வுக்கோலங்களும் தாயகத்தின் நெருக்கடியிலிருந்து தப்பி ஓடுவதற்கு எத்தனித்தவர்களின் செய்திகளும் கதைகளாகின. புலம்பெயர்ந்தோர் சந்தித்த அவலங்களும் படைப்புகளில் கருப்பொருளாகின. இந்தப் பதிவின் தொடக்கத்தில் குறிப்பிட்ட உருவம், உள்ளடக்கம், படைப்புமொழி, பாத்திர வார்ப்பு, காட்சி சித்திரிப்பு முதலான பல அம்சங்களை புகலிட படைப்பாளர்களும் நவீன முறையில் புத்தம் புதிய உத்திகளுடன் பயன்படுத்தினர். இவர்களுக்கும் ஆசிர்வாதமும் அங்கீகாரமும் தேவைப்படுகிறது. அதன்மூலம் தமக்கென ஒரு அடையாளத்தை தக்கவைப்பதற்கு பிரயத்தனப்படுவதையும் அவதானிக்க முடிகிறது. அவர்களுக்கு அந்த அடையாளம் கிடைத்ததும் அவர்களின் சுமாரான கதைகளுக்கும் விமர்சகர்களின் Promotion கிடைக்கிறது. எனினும் அவ்வாறு அடையாளம் காணப்படாத ஒரு சிலர் அந்த Promotion ஐ எதிர்பார்க்காதுவிட்டாலும், தேர்ந்த வாசகர்கள், அவர்களின் படைப்புகளின் முக்கியத்துவம் குறித்து எழுதுகின்றனர்.
மறைந்த கலை இலக்கிய விமர்சகர் வெங்கட் சாமிநாதன்மூலம் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் பா.அகிலனது கவிதைகளுடனான அறிமுகம் எனக்கு ஏற்பட்டது. இந்த அறிமுகத்தைத் தொடர்ந்தே ‘பதுங்கு குழி நாட்கள்’ தொகுப்புக்குள்ளான என் பிரவேசம் இருந்தது. அவரது அடுத்த கவிதைத் தொகுப்பு ‘சரமகவிகள்’ வெளிவந்தபோது, மேலும் அவரது கவிதைகளை அறிவதற்கான தரவுகளுடன் நான் இருந்திருந்தேன். ‘அம்மை’ தொகுப்பு வெளிவந்தபொழுது அவருடன் நேரடி அறிமுகமே உண்டாகியிருந்தது. கவிதைகளின் அகத்துள்ளும் அகலத்துள்ளும் சென்று தேட இது இன்னும் வாய்ப்பாக அமைந்தது.
‘அம்மை’ தொகுப்பை புரட்டியதுமே என் மனத்தில் ஞாபகமானது சோ.ப.வின் ‘தென்னிலங்கைக் கவிதைகள்’ மொழிபெயர்ப்பு நூலுக்கு பேராசிரியர் கா.சிவத்தம்பி எழுதியிருந்த 22 பக்க முன்னுரை. ‘அம்மை’யிலும் கீதா சுகுமாரனின் அதைவிட நீண்ட பின்னுரையொன்று இடம்பெற்றிருக்கிறது. பா.அகிலனின் மூன்று கவிதைத் தொகுப்புகளினையும் உள்ளடக்கி பல தளங்களினூடாகவும் அலசிய ஆய்வு அது. எனினும் பின்னுரையின் தேவை பின்னாலேதான் ஏற்படுகிறது. அப்போது ‘அம்மை’ கவிதைகள் குறித்து வாசகன் இன்னும் கூடுதல் வெளிச்சம் பெறுகிறான்.
ஈழக் கவிதையாக வரலாற்றின் அடுக்கில் வைத்தும், இதிலிருந்து கிளைத்த புலம்பெயர் கவிதையென்ற புதிய வகையினத்துடன் ஒப்பவைத்தும், தமிழ்க் கவிதையானதால் தமிழக கவிதைகளுடனும் ‘அம்மை’ நோக்கப்படலாம். அது ‘அம்மை’பற்றிய அகல்விரிவான ஒரு பார்வையைத் தருமென்பது மெய்யே. ஆனாலும் கவிதையென்ற ஒற்றைத் தளத்தில் இது அடையக்கூடிய பேறுகள் முக்கியமானவை. அதனால் இவ்வொப்பீடுகளின் கவனிப்பு அகன்றுவிடாதவாறு கவிதையின் நயம் காண்பதே எனது எண்ணம்.
நாற்பத்திரண்டு கவிதைகளைக்கொண்ட ‘அம்மை’ இருபத்தொன்பது கவிதைகளைக் கொண்ட ‘காணாமற் போனாள்’ என்றாகவும், மீதி பதின்மூன்று கவிதைகள் ‘மழை’யென்றாகவும் அமைவுபெற்றிருக்கின்றது. ஆயினும் துல்லியமாய் வித்தியாசப்படும் பொருள்களைப் பேசுகிற கவிதைகளை இவை கொண்டில்லை. ஒரே விஷயத்தை அடிநாதமாய்க்கொண்டு வெவ்வேறு கதிகளிலும் ஆழங்களிலும் பேசுகிறவையாகவே அவை பெரும்பாலும் இருக்கின்றன. வேறுவேறு உணர்ச்சிகளைப் பேசுகிற கவிதைகளை தொகுப்பு உள்ளடக்கியிருப்பினும் அவை ‘மழை’யென்கிற இரண்டாம் பகுதியிலேயே அதிகமாயும் உள்ளன. இந்த இரண்டு வகைக் கவிதைகளுக்கிடையிலும் கவிதைநிலை சார்ந்த வித்தியாசம் இருக்கவே செய்கிறது. அது அவை வெளிப்படுத்தும் கருத்துக்களின் காரணத்தாலாகும்.
தனதும், பிறரதுமான போர்க்கால அனுபவங்களிலிருந்து சுழித்தெழுந்த இத் தொகுப்பின் பெரும்பாலான கவிதைகளின் ஊற்று மன உடல்ரீதியாக அடைந்த அவலங்களினதும் வடுக்களினதும் மய்யத்திலிருந்தே பீரிட்டெழுகிறது. கைகால்கள் போன்ற பொறிகள் மட்டுமில்லை, புலன்களும்கூட இழக்கப்பட்டன. மிகக்கொடூரமான மனித அவலம் சம்பவித்தது. ஆனால் அந்த அவல உணர்வுகள் மீளுதல் சாத்தியமற்ற நிர்கதியின் இருளாய் உறைவடைந்து மேலும் பகுக்கக்கூடிய திண்மமாய் ‘அம்மை’ கவிதைகளில் மாற்றம் பெறுகின்றன.
போர்க்கால அவலங்களில் அமிழ்ந்துகிடந்து அவற்றின் உடலியற் துன்பங்களையும், மனோவியல் பாதிப்புகளையும் பொதுவில் பேசுகிற நிலையொன்று இருக்கிறது. இது வெளிப்படையானது. இன்னொன்று, தன்னை அவலத்தின் பின்னால் மறைந்திருந்துகொண்டு குரல்மட்டும் கொடுத்துக்கொள்கிற ஒரு நிலை.
அன்பினியவர்களே ! அன்பான வணக்கங்கள். இதோ மிக நீண்டதோர் இடைவெளியின் பின் “தமிழ்ப்பூங்கா” புதியதோர் வடிவமைப்புடன் காலாண்டு இதழாக புதுவடிவம் பெற்று உங்களிடம் வருகிறது. வாழ்வின் கடமைகளை நிறைவேற்றுவதில் ஏற்பட்ட காலதாமதத்திற்கு வருந்துகிறேன். இது வழமை போல P.D.F ஆக இணைக்கப்பட்டுள்ளது. இத்துடன் இதனை வெள்ளோட்டமாக ஒரு மின்புத்தகமாக்கும் முயற்சியில் அதற்குரிய இணையத்தளத்தினைத் தருகிறேன் இதனைப் பார்வையிடுவதற்கு Adobi Flash மென்பொருள் உங்கள் கணணியில் இருக்க வேண்டும். என்றும் போல இப்பவும் உங்கள் ஆதரவையும், ஆக்கங்களையும் தந்து ஆதரவளிபீர்கள் எனும் நம்பிக்கை எனக்குண்டு. இ-புத்தக வடிவில் பார்க்க இணையத்தளம் – https://www.flipsnack.com/thamilpoonga/2.html
நீடித்த போரினால் வலிசுமந்த மக்களின் கதைகளைச்சொல்லும் தாமரைச்செல்வியின் ” வன்னியாச்சி” பெரும் கதைத்தொகுப்பில் இடம்பெற்றுள்ள 37 கதைகளையும், ஜீவநதியில் இம்மாதம் வெளியான அவனும் அவளும் என்ற சிறுகதையையும் சேர்த்து மொத்தம் 38 கதைகளையும் படித்து முடித்த தருணத்தில், தமிழ் ஊடகங்களில் ” அரசின் மகா வலி – தமிழருக்கு மன வலி ” என்ற தலைப்பிலும் தொனியிலும் செய்திகள் வெளிவந்துகொண்டிருக்கின்றன. மக்கள் வலிசுமந்த மேனியராகவே கடந்த மூன்றரை தசாப்த காலமாக வாழ்ந்துகொண்டிருக்கின்றனர் என்பதை, தனது கதைகளின் ஊடாக பதிவுசெய்துவருபவர் தாமரைச்செல்வி. இவரது எழுத்துக்களை இலங்கையில் நான் இருந்த காலப்பகுதியில் படித்திருந்தாலும், நேரில் சந்தித்துப்பேசியது வெளிநாடான தற்போது நான் வாழும் அவுஸ்திரேலியாவில்தான்.
சில வருடங்களுக்கு முன்னர் எமது அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் தமிழ் எழுத்தாளர் விழாவில் அவரது சமுகம் இன்றியே அவரது பச்சை வயல் கனவு என்ற நாவலை அறிமுகப்படுத்தியிருந்தோம். அதனை இங்கு வதியும் கிளிநொச்சி பிரதேசத்தில் முன்னர் ஆசிரியராக பணியாற்றிய மரியதாசன் மாஸ்டர் அறிமுகப்படுத்தி உரையாற்றினார். இவர் பெண் போராளி தமிழினிக்கும் முன்னர் ஆசிரியராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தகுந்தது.
நான் முன்னர் எழுதிய இலக்கியத்துறையில் பெண்ணிய ஆளுமைகள் தொடரில் தாமரைச்செல்வி பற்றியும் ஒரு பதிகை எழுதியிருக்கின்றேன். இலங்கையில் சந்திப்பதற்கு வாய்ப்புக்கிட்டாது போனாலும், அதற்கான சந்தர்ப்பம் காலம் கடந்து, 2016 ஆம் ஆண்டு அவுஸ்திரேலியா குவின்ஸ்லாந்து மாநிலத்தில் கோல்ட்கோஸ்டில் நடந்த 16 ஆவது தமிழ் எழுத்தாளர் விழாவில்தான் கிடைத்தது. அன்று இவர்தான் விழாவை மங்கல விளக்கேற்றி தொடக்கிவைத்தார். அன்று அந்த புதிய மேடையில் அவர் உரையாற்றவில்லை என்பது எனக்கு ஆச்சரியமானது! எனினும் இவரது நேர்காணலை அவுஸ்திரேலியா எஸ்.பி. எஸ். வானொலியில் கேட்டபோது, இவரால் தாம் வாழ்ந்த பிரதேசத்து மக்களின் வலி நிரம்பிய கதைகளை யதார்த்தம் குன்றாமல் பேசவும் தெரிந்தவர் என்பதையும் அறிந்துகொள்ள முடிந்தது.
ஈழத்தின் போர்க்கால இலக்கியம் தமிழ்ச்சூழலில் அறிமுகமாகி தற்போது சிங்களம், ஆங்கில மொழிகளுக்கும் பரவியிருக்கிறது. தாமரைச்செல்வியின் கதைகள் இலங்கையிலும் தமிழகத்திலும் பாட நூல்களிலும் சேர்க்கப்பட்டுள்ளன. ஒரு ஓவியராகவும் அறியப்பட்டுள்ள தாமரைச்செல்வியின் கதைகள் அவர் வரைந்த ஓவியங்களுடனும் வெளியாகியுள்ளன. சில கதைகள் குறும்படங்களாக தயாரிக்கப்பட்டு வெளியாகி விருதுகளும் பெற்றுள்ளன. இந்தப்பின்னணிகளைக்கொண்டிருக்கும் – மேடைகளைத் தவிர்க்கும் – தாமரைச்செல்வியின் தன்னடக்கம், ஆழ்ந்த பெருமூச்சுக்களாக வலி சுமந்த மக்களின் ஓலங்களை வெளிப்படுத்திக்கொண்டிருக்கிறது.
” சொந்த மண்ணிலேயே இருப்பிடம் இழந்து அகதிகளாகிக் குண்டுகளின் அதிர்வும் கந்தக நெடியும் ஒரு புறம் துரத்த உயிருக்கு உத்தரவாதமற்ற நிலையில் பதற்றத்தோடும் பசி பட்டினியோடும் பதுங்கு குழிகளின் பக்கத்துணையோடும் வாழ்ந்திருந்தவர்கள். இந்த மக்களின் நடுவே நானும் ஒருத்தியாக வாழ்ந்துகொண்டேதான் இச்சிறுகதைகளை எழுதினேன். என்னைச் சுற்றிய நிகழ்வுகள் தந்த அதிர்வுகள், பாதிப்புகள், நெருடல்கள், இவைதான் இப்படைப்புகள். இம்மக்களின் துயரங்களை வார்த்தைகளில் பதியும்போது எனக்கும் வலித்திருக்கிறது. கண்களின் ஓரம் நீர் கசிந்திருக்கிறது. இந்த மக்கள் அனுபவித்த கடலளவு துயரங்களில் ஒரு சில துளிகளையே என்னால் பதிவு செய்ய முடிந்திருக்கிறது. ” என்று வன்னியாச்சி தொகுப்பில் தனதுரையில் குறிப்பிட்டிருக்கும் தாமரைச்செல்வியும், குறிப்பிட்ட வன்னியாச்சி கதையில் வரும் வன்னியாச்சியைப்போன்றே அந்த மண்ணின் ஆத்மாவை நன்கு அறிந்திருப்பவர்.
09-09-2018, ஞாயிறு, மாலை 6 மணிக்கு.
பியூர் சினிமா புத்தக அங்காடி, எண்.7 , மேற்கு சிவன் கோவில் தெரு, வடபழனி, விக்ரம் ஸ்டுடியோ எதிரில், வாசன் ஐ கேர் அருகில், டயட் இன் உணவகத்தின் இரண்டாவது மாடியில். கூகிள் மேப்பில் pure cinema book shop என்று தேடினால் எளிதாக கண்டடையலாம்.
திறந்து வைப்பவர்: ஒளிப்பதிவாளர் ரவிவர்மன்.
இந்தியாவில் செயல்படும் நிலையில் இருக்கும் முழுக்க முழுக்க சினிமா புத்தகங்களுக்காகவே செயல்படும் இந்தியாவின் ஒரே சினிமா புத்தக அங்காடியான பியூர் சினிமா புத்தக அங்காடி சென்னையில் கடந்த மூன்றாண்டுகளுக்கு மேல் செயல்பட்டு வருகிறது. இன்னும் சீரிய முறையில் செயல்படும் வகையிலும், பல்வேறு கிரியேட்டிவ் செயல்பாடுகள் கொண்ட இடமாகவும் மாற்றியமைக்கப்பட்டு எதிர்வரும் ஞாயிறு அதாவது செப்டம்பர் 9 ஆம் தேதி, மாலை 6 மணியளவில் திறக்கப்படுகிறது. இதனை இந்தியாவின் மிக முக்கிய ஒளிப்பதிவாளராக, பாலிவுட்டின் மோஸ்ட் வான்டட் கேமராமேன் திரு. ரவிவர்மன் அவர்கள் திறந்து வைக்கிறார். ஒளிப்பதிவு, ஓவியங்கள், லைட்டிங் குறித்தும் மிக முக்கிய உரையொன்றையும் நிகழ்த்த இருக்கிறார்.