மராத்தி, மேற்கு இந்தியாவில் மகாராஷ்டிர மாநிலத்தில் பேசப்படும் ஓர் இந்தோ-ஆரிய மொழியாகும். இம்மொழியானது அங்கு அலுவலக மொழியாகப் பயன்படுத்தப்படுகின்றது. உலகளவில் தொண்ணூறு மில்லியன் மக்களால் பேசப்படும் மொழி எனும் சிறப்பைப் பெற்றுக் காணப்படுகின்றது.
இந்திய மக்களால் பயன்படுத்தப்படும் மொழிகளுள் மராத்தி நான்காவது இடத்தைப் பெற்றுத் திகழ்கின்றது. இம்மொழி பாலி என்ற மொழியின் வழியாகச் சமசுகிருதத்திலிருந்து வந்தது. இது மகாராஷ்டி அல்லது மகாராஷ்டிரா அல்லது அபப்ரம்ஸா என அழைக்கப்பட்டு வந்தது. பின்பு அதன் பேச்சு மொழியில் ஏற்பட்ட படிப்படியான மாறுதல்களே இன்றைய மராத்தி மொழி உருவாக வழிவகுத்தது.
தோற்றம்
மராத்தி மொழியின் தோற்றம் கி.பி.8ஆம் நூற்றாண்டு எனச் சுட்டப்படுகின்றது. நவீனகால மராத்தி பிராகிருத மகராஷ்ட்ரி மொழியிலிருந்து வந்தது. கி.பி.875ஆம் ஆண்டு வரை சாதவாகனப் பேரரசின் அலுவலக மொழியாகப் பயன்படுத்தப்பட்டு வந்தது. இது மற்ற பிராகிருத மொழிகளைக் காட்டிலும் சிறப்பு வாய்ந்த மொழியாக மேற்கு, தென்னிந்தியாவில் பேசப்பட்டு வந்தது. மேலும் இது மகாராஷ்ட்ரி அபபிராம்சா என அழைக்கப்பட்டது. மகாராஷ்ட்ராவில் வாழ்கின்ற ஐம்பது மில்லியனுக்கு மேலான மக்களுக்கு மராத்தி தாய்மொழியாகவும் திகழ்கிறது.
மகாராஷ்ட்ரிரா எனும் பெயர் மகாபாரதத்திலோ, இராமயணத்திலோ இடம் பெறவில்லை. கி.பி.17ஆம் நூற்றாண்டில் சீனப்பயணி யுவாங் சுவாங் இந்தப் பகுதியை மா-ஹா-லா-சொ (ma-ha-la-cho) என்று குறிப்பிடுகின்றார். கி.பி.10ஆம் நூற்றாண்டில் அல்பர்னி மகாராஷ்டிராவை மார்காட்டா (Marhatta) என்றும் குறிப்பிட்டுள்ளார்.
மாராத்தி மொழியின் தோற்றத்தைப் பற்றி அறிஞர்களிடையே பல்வேறு கருத்துக்கள் நிலவி வந்துள்ளன. அதாவது, மராத்தி மொழி சமசுகிருதத்திலிருந்து வளர்ச்சியடைந்தது என சி.வை.வைத்யாவும் (C.V.Vaidya), அபபிரம்சாவிலிருந்து வளர்ச்சியடைந்தது என ஸ்டென் க்னோவும் (Sten Knonow) கூறுகின்றனர். பலர் பஞ்ச திராவிட மொழிகளில் ஒன்று எனவும் குறிப்பிடுகின்றனர்.
கைரேயின் (Khaire) கருத்துப்படி (முந்தையப் பேச்சு) மராத்தி மொழியின் பேச்சுமொழிச் சொற்கள் பல தமிழிலிருந்தும் கன்னடம், தெலுங்கு போன்ற திராவிட மொழிகளிருந்தும் கடன் வாங்கப்பட்டு யாதவர்களால் பேசப்பட்டதெனக் கூறுகின்றார்.
பெரும்பாலான மக்கள் மராத்தி மொழியானது பிராகிருதத்திலிருந்து வந்தது என்றே கருதுகின்றனர். ‘விஜயாஅதித்ய’ செப்புத்தகடு மற்றும் சரவணபலகோலா (கர்நாடகம்) கல்வெட்டுக்கள் பிராகிருத மொழி என்று சுட்டுகின்றது. மேலும் அது ‘உத்தியோட்டன்’ என்ற சைன மதத்துறவியின் கூற்றுப்படிக் கொங்கனி எனவும் சொல்லப்பட்டது.
கி.பி.13ஆம் நூற்றாண்டிற்கு முன் (யாதவா காலத்திற்குமுன்) மராத்தியில் எந்தவொரு படைப்புகளும் இல்லை. அதன்பின் வந்த ஆட்சியிலேஎ மராத்தி அலுவலக மொழியாக அங்கீகரிக்கப்பட்டது.