எழுத்தாளர் எஸ்.பொ அவர்கள் ஒருமுறை (2000) கனடா வருகை தந்திருந்தார். வருவதற்கு முன்னர் எனது முகவரிக்கு எனக்குக் கடிதமொன்றினை அனுப்பியிருந்தார். அதிலவர் தன் கனடா விஜயம் பற்றி விரிவாகக் குறிப்பிட்டிருந்தார். அத்துடன் தொடர்ந்து செய்யவுள்ள உலகப்பயணம் பற்றியும் கூறியிருந்தார். அதிலவர் கூறியிருந்தவற்றில் சிலவற்றை இங்கு பகிர்ந்துகொள்கின்றேன்:
“படைப்பிலக்கியத்திலே நீங்கள் அடைந்துவரும் முன்னேற்றமும் வெற்றியும் மனசுக்குக் குளிர்வினைத்தருகின்றது. நேரில் சந்திக்கும் வாய்ப்பு கிடைக்குமென நம்புகின்றேன். நான் எதிர்வரும் ஆகஸ்டு மாதம் பிற்பகுதியிலே கனடா வரத்திட்டமிட்டுள்ளேன். பத்து நாள்கள் Toronto வில் தங்கலாம் என்பது திட்டம். அங்கு வாழும் தமிழ் நேசங்களையும், இலக்கியப் படைப்பாளிகளையும் நேரிலே சந்தித்து அளவளாவதுதான் இந்தப் பயணத்தின் நோக்கம். இது தமிழ்ப்பயணம்.
இலக்கியப்பயணம். குழு நலன்களை பேசுவதற்கப்பாற்பட்ட முதிர்ச்சி அடைந்து விட்டேன். இந்நிலையில் படைப்பிலக்கியத்திற்குச் செழுமை சேர்க்கும் இளவல்கள் கூட்டத்தினைச் சந்திப்பதற்கே அதிகம் விரும்புகின்றேன். …. கனடாவிலிருந்து லண்டன் போய், அங்கிருந்து சில மேற்கு ஐரோப்பிய நாடுகளுக்கும் சென்று , சென்னையை அடைவது திட்டம். தற்பொழுது நான் அதிக காலத்தினைச் சென்னையிலேயே செலவு செய்கின்றேன். உலகப்படைப்பிலக்கிய மையம் ஒன்றினை இங்கு நிறுவியுள்ளேன். புத்தாயிரத்திலே புலம் பெயர்ந்த ஈழத்துப் படைப்பாளிகளே இலக்கிய வீரியத்தை முன்னெடுத்துச் செல்வார்கள் என்கிற சுவிஷேசத்தின் பிரசாரகனாயும் சென்னையில் வாழ்கின்றேன்.”
இவ்விதம் கூறியிருக்கும் எஸ்.பொ அவர்கள் கடிதத்தின் இறுதியில் பின்வருமாறு கூறியிருப்பார்: “இருபதாம் நூற்றாண்டின் இலக்கிய வரலாற்றினைத் தக்கபடி ஆவணப்படுத்தும் பாரிய நூலொன்றினையும் எழுதிக்கொண்டிருக்கின்றேன். அதிலே குறிப்பிடும் தகவல்களைச் செப்பம் பார்ப்பதற்கும் இந்தப்பயணத்தினைப் பயன்படுத்துதல் நோக்கம்”