வாசிப்பும், யோசிப்பும் 319: என்னைப் பாதித்த முதலிருபது நூற் பட்டியல்!

என்னைப் பாதித்த முதலிருபது நூற் பட்டியல்!

இதுவரை வாசித்த நூல்களில் என்னைப் பாதித்த முக்கியமான இருபது நூல்களை எண்ணிப்பார்த்தேன். அவற்றின் பட்டியல் இது. இன்னும் பல நூல்களுள்ளன. ஆனால் நினைத்தபொழுது முதலில் நினைவுக்கு வந்தவை இவை. என்னைக் கவர்ந்த வெகுசனப்படைப்புகள் பட்டியலும் விரைவில் வரும். அது போல் என்னைக் கவர்ந்த தமிழகப்படைப்புகள், ஈழத்துப் படைப்புகள், என்னைக் கவர்ந்த எழுத்தாளர்கள், வெகுசன எழுத்தாளர்கள் பட்டியல்களும் வெளியாகும்

1. புத்துயிர்ப்பு – டால்ஸ்டாய்
2. Crime and Punishment – Dostoyefsky
3. பாரதியார் கவிதைகள், கட்டுரைகள் அடங்கிய தொகுப்புகள்.
4. The Brothers Karamazov – Dostoyefsky
5. கம்யூனிஸ்ட் கட்சியின் அறிக்கை – மார்க்ஸ், எங்கெல்ஸ்
6. தாய் – மார்க்சிம் கோர்க்கி
7. The Metamorphosis – Franz Kafka
8. The old man and the Sea – Ernest Hemingway
9. வெற்றியின் இரகசியங்கள் – அ.ந.கந்தசாமி
10. Candide – Voltaire
11. காலம் – வாசுதேவன் நாயர்
12. ஒரு மனிதன்! ஒரு வீடு! ஒரு உலகம்! – ஜெயகாந்தன்
13. The Fabric of The Cosmos – Brian Greene
14. A brief History Of Time – Stephen Hawkings
15. Hyperspace -Michio Kaku
16. மோகமுள் – தி.ஜானகிராமன்
17. அன்னா கரீனினா – டால்ஸ்டாய்
18. ஏணிப்படிகள் – தகழி சிவசங்கரன்பிள்ளை
19. ஒரு கிராமத்தின் கதை – எஸ்.கே.பொற்றேகாட்
20. நீலகண்ட பறவையைத்தேடி.. – அதீன் பந்த்யோபாத்

Continue Reading →

வாசிப்பும், யோசிப்பும் 318: எழுத்தாளர் பிரபஞ்சனின் மரணமும், அவரது ஆசையொன்றும்! காலச்சுவடு வெளியீடாக வெளிவரவுள்ள எழுத்தாளர் தாஜ் (சீர்காழி) அவர்களின் ‘தங்ஙள் அமீர்’! மகாகவியின் மகாமனது!

எழுத்தாளர் பிரபஞ்சனின் மரணமும், அவரது ஆசையொன்றும்!

பிரபஞ்சன் அவர்கள் ‘ஜெயித்த கதை’ கட்டுரையின் இறுதியில் ‘என் விருப்பமெல்லாம் , எழுத்தைப் போலவே , என் மரணமும் கெளரவமாக இருக்க வேண்டும் என்பதுதான்’ என்று குறிப்பிட்டிருந்தார்.  அவரது  ஆசை அவரது மரணத்தில் நிறைவேறியுள்ளது. நீண்ட காலத்துக்குப் பிறகு எழுத்தாளர் ஒருவருக்கு உரிய  மரியாதைகொடுத்து அவரது இறுதி அஞ்சலியை நடாத்தியதற்காகப் புதுவை மாநில அரசையும், அதன் முதல்வரையும் பாராட்டுகின்றேன்.

தம்  வாழ்நாளெல்லாம் தம் எழுத்தால் இலக்கியத்துக்கு வளம் சேர்க்கும்  எழுத்தாளர்களைப் பொதுவாக மாநில அரசுகள் கவனிப்பதில்லை. இந்நிலையில் அரச மரியாதையுடன் எழுத்தாளர் பிரபஞ்சனுக்கு இறுதி அஞ்சலியினைச் செய்ததன் மூலம் புதுவை மாநில அரசு உயர்ந்து நிற்கிறது. தமிழக அரசும், ஏனைய மாநில அரசுகளும் இம் முன்மாதிரியைப்பின்பற்றட்டும். எழுத்தாளர்கள் வாழும் காலத்திலேயே அவர்களது படைப்புகளை இலகுவாக வெளியிடும் வகையிலான திட்டங்கள் பலவற்றை உருவாக்கட்டும். நூலகங்கள் இலகுவாக அவர்கள்தம் நூல்களை வாங்கும் திட்டங்களை உருவாக்கட்டும். எழுத்தாளர்களின் நூல்களுக்குக் கொடுக்க வேண்டிய நூலுரிமைப்பணத்தை உரிய முறையில் கொடுப்பதை உறுதி செய்யும் திட்டங்களை உருவாக்கட்டும்.

எழுத்தாளர் தஸ்தயேவ்ஸ்கி இறந்தபோது ஆயிரக்கணக்கில் மக்கள் திரண்டு அவரை வழியனுப்பியதை இத்தருணத்தில் நினைவு கூர்கின்றேன். தமிழ் மக்களும் எழுத்தாளர்களை மதிக்கும் பண்பினை வளர்த்துக்கொள்ள வேண்டும். மக்களுக்காக இலக்கியம் படைக்கும் எழுத்தாளர்கள் அதற்கு முற்றிலும் உரித்துடையவர்களே.


காலச்சுவடு வெளியீடாக வெளிவரவுள்ள எழுத்தாளர் தாஜ் (சீர்காழி) அவர்களின் ‘தங்ஙள் அமீர்’!

Continue Reading →

படித்தோம் சொல்கின்றோம்: “சிப்பிக்குள் முத்து “! கி. லக்‌ஷ்மணன் அய்யாவின் நூற்றாண்டு வெளியீடு!

கி. லக்‌ஷ்மணன் அய்யாவின் நூற்றாண்டு வெளியீடு!” படைப்பாளிகளையும் பத்திரிகையாளர்களையும் கல்வித்துறை சார்ந்த  ஆசிரியர்கள், விரிவுரையாளர்கள், பேராசிரியர்கள் மற்றும்  பதிப்புத்துறையில்  இருப்பவர்களையும் மிரட்டிக்கொண்டிருக்கும் ஒரு  பிசாசு இருக்கிறது. கண்களுக்குத் தெரியும் பிசாசுதான்! ஆனால், எப்படியோ   கண்களுக்குத்தப்பிவிடும்! எங்கே எப்படி காலை வாரிவிடும்  என்பதைச் சொல்லமுடியாது.   மானநட்ட  வழக்கிற்கும் தள்ளிவிடும் கொடிய இயல்பு இந்தப்பிசாசுக்கு  இருக்கிறது. அதுதான் அச்சுப்பிசாசு. மொழிக்கு ஆபத்துவருவதும்  இந்தப்பிசாசினால்தான். 1990 ஆம் ஆண்டு மறைந்த எங்கள் கல்விமான்  இலக்ஷ்மணன் அய்யாவை நினைக்கும் தருணங்களில் அவர் ஓட ஓட விரட்டிய  இந்த அச்சுப்பிசாசுதான் எள்ளல்  சிரிப்போடு கண்முன்னே  தோன்றுகிறது.”

இவ்வாறு சில வருடங்களுக்கு முன்னர் எனக்குத் தெரிந்த இலக்கிய ஆளுமைகள் பற்றிய தொடரில் பெரியார் இலக்‌ஷ்மணன் அவர்களைப்பற்றிய பதிவின் தொடக்கத்தில் எழுதியிருந்தேன். அண்மையில் எனக்கு கிடைத்துள்ள  அய்யா எழுதியிருக்கும் “சிப்பிக்குள் முத்து” நூலை படிக்கின்றபோது அவர் நேரில் தோன்றி உரையாற்றுவதுபோன்ற உணர்வுதான் வருகிறது. இந்த அரிய நூலை அய்யாவின் செல்வப்புதல்வி மங்களம் வாசன் தொகுத்துள்ளார். கடந்த சில வருடங்களாக மங்களம் மேற்கொண்ட அயராத முயற்சி திருவினையாகியிருக்கிறது என்றுதான் சொல்லவேண்டும். கி. இலக்‌ஷ்மணன்  அய்யாவின் நூற்றாண்டு காலம் தொடங்கியிருக்கும் இக்காலப்பகுதியில் ” சிப்பிக்குள் முத்து” வெளியாகியிருப்பது பெரும் சிறப்பு. இந்நூலில் இடம்பெற்றுள்ள கட்டுரைகளுக்குப் பொருத்தமான  ஓவியங்களை பிரபல ஓவியர் பத்மவாசன் வரைந்துள்ளார். கி.லக்‌ஷ்மணன் அவர்கள் இலங்கை – தமிழக  தமிழ், ஆங்கில இதழ்களிலும் சிறப்பு மலர்களிலும் முன்னர் எழுதிய பல கட்டுரைகளின் தொகுப்பாக  சிப்பிக்குள் முத்து ஒளிர்கின்றது. இலங்கை தேசிய சுவடிகள் திணைக்களம் மற்றும்  பொது நூலகங்களிலிருந்து தேடி எடுத்த கட்டுரைகளின்  தொகுப்பான இந்நூலில் தமிழ், கல்வி, இலங்கை வாசனை, சமயம், தத்துவம் ஆகிய தலைப்புகளில் 64 கட்டுரைகளும் ஆங்கிலத்தில் 9 கட்டுரைகளும் இடம்பெற்றுள்ளன.

வீரகேசரி பத்திரிகையின் முன்னாள் பிரதம  ஆசிரியர் ( அமரர் ) க. சிவப்பிரகாசம், வடமாகாண முன்னாள் முதல்வர் நீதியரசர் சி.வி. விக்னேஸ்வரன், சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வளிப்பு, மீள் குடியேற்றம் மற்றும் இந்து மத அலுவல்கள்( முன்னாள்) அமைச்சர் திரு. டி. எம்.சுவாமிநாதன் (அமரர்கள்) பேராசிரியர் க.கைலாசபதி,   சிரேஷ்ட  சட்டத்தரணி  நீலன் திருச்செல்வம்  ஆகியோர் உட்பட பலர் கொழும்பு றோயல் கல்லூரியில் கற்ற காலத்தில்,  இவர்களின் தமிழ் ஆசிரியராக பணியாற்றியிருக்கும் கி. லக்‌ஷ்மணன் அய்யா அவர்கள்,  தமிழ் ஊடகங்களில் தமிழ் மொழியை சரியாகவும் பிழையின்றியும் எழுத வேண்டும் என்று தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்திருப்பவர். அவர்  1960 இல் எழுதிய இந்திய தத்துவ ஞானம் நூல் பல பதிப்புகளை கண்டுள்ளதுடன்,  இலங்கை தேசிய சாகித்திய விருதும் தமிழ்நாடு அரசின் விருதும் பெற்றது. அய்யாவை சதா அவதானி என்றும் அழைக்கமுடியும். அவர் நூல்கள், இதழ்கள், பத்திரிகைகள், ஆவணங்களை மாத்திரம் படிப்பவர் அல்ல. ரயில், பஸ் நிலையங்களிலும் விமான நிலையங்களிலும் வீதியோரங்களிலும் இருக்கும் பெயர்ப்பலகைகள், விளம்பரங்களிலும் எழுத்துப்பிழை – கருத்துப்பிழை கண்டு பிடித்து,  உரிய இடத்தில் முறையிட்டு உடனடியாக திருத்தியும்விடுவார். சிப்பிக்குள் முத்து நூலில் இடம்பெற்றுள்ள கட்டுரைகளில் அவர் தனது வாழ்நாளில் மேற்கொண்ட தமிழ்சார்ந்த பணிகளில் சந்தித்த அனுபவங்களை மிகவும் எளிய முறையில் வெகு சுவாரஸ்யமாக சொல்லியிருப்பதனால் வாசகர்களினால் இலகுவாக இந்த நூலுடன் நெருங்க முடிகிறது.

Continue Reading →

முகநூல்: தொடக்கமும் தொடர்ச்சியும் விடை பெறுதல் ​ – பிரபஞ்சன்

– எழுத்தாளர் பவா செல்லத்துரை எழுத்தாளர் பிரபஞ்சனின் மறைவையொட்டி எழுதிய முகநூற் பதிவிது. நன்றியுடன் மீள்பிரசுரம் செய்கின்றோம். – பதிவுகள்.காம்

நெருக்கடிமிக்க சென்னை அண்ணா சாலையின் தென்புறம் நாங்கள் நான்கைந்து நண்பர்கள் நிற்க, மார்பில் அணைக்கப்பட்ட நான்கு பீர் பாட்டில்களோடு சாலையைக் கடந்த பிரபஞ்சனிடம் அந்த இரவு பத்துமணிக்கு சிலர் நின்று ஆட்டோகிராப் கேட்டார்கள். பீர் பாட்டில்களை அவர்கள் கையிலேயே தற்காலிகமாகத் தந்துவிட்டு சாலை ஓரமாக நின்று கையெழுத்திட்டுத் தந்த பிரபஞ்சனைப் பார்த்து, “இதெல்லாம் வேணாம் சார், உங்களுக்கென்று தமிழ்நாட்டில் ஒருபெரிய இமேஜ் இருக்கு ” என்று சொன்ன என்னை தடுத்து, “அப்படி ஒரு பொய்யான இமேஜை நான் வெறுக்கிறேன் பவா. நான் எதுவாக இருக்கிறேனோ அப்படியான பிம்பம் மட்டுமே வெளியிலேயும் பதிவாக வேண்டும். நான் எப்போதாவதுதான் குடிப்பவன். அது வெளியே தெரிய வேண்டாமெனில் இதை இனி தொடக்கூடாது இல்லையா” என்ற அப்படைப்பாளியின் கையிலிருந்த பாட்டில்களை கொஞ்சநேரம் என் கைகளுக்கு மாற்றி நடந்தது நினைவிருக்கிறது. எவர் கைகளிலேயும் நிரந்தரமாக அடக்கிவிட முடியாத நீர் தான் பிரபஞ்சன் எனத் தோன்றும். என் கல்லூரிப் படிப்பை முடித்து, இலக்கியம் நோக்கி வெறிகொண்டலைந்த காலத்தில் கி.ரா. பற்றிய ஒரு இலக்கியக்கூட்டத்தில்தான் பிரபஞ்சனை முதன்முதலில் பார்த்தேன். பட்டு வேட்டி, பட்டுச் சட்டை போட்டு கையில் புகைந்த ஒரு சிகரெட்டோடு அரங்கவாசலில் நின்றிருந்த அவரை ஏனோ அப்படிப் பிடித்துவிட்டது. எனக்கு அது இத்தனை ஆண்டுகளாகியும் அகல மறுக்கும் அன்பின் அடர்த்தி. பத்தாயிரம் ரூபாயை கவரில் வைத்து கொடுப்பார்கள் என்ற நிச்சயத்திற்காக, ஒன்றுமேயில்லாத ஒருவனை உலகக்கவி என்றும், தன் படைப்பு அவன் அதிகாரக் காலடியில் அச்சேறக்கூடும் என்ற எதிர்பார்ப்பில், அவன் எழுத்து நோபலுக்கும் மேலே என எழுதுகிற பலபேருக்கு மத்தியில் பிரபஞ்சன் என்ற அசல் இன்றளவும் தமிழ்வாசிக்கும் பலராலும் நேசிக்கப்படுவதற்கு அவரிடம் இயல்பிலேயே இன்றளவும் இருந்து வருகிற இந்த எளிமையும் உண்மையும்தான் காரணம்.

தகுதிபெறாத படைப்புகள் எதுவாயினும், அதை எழுதியவன் இந்தியாவின் பிரதமரேயாயினும் தன் கால் சுண்டுவிரலால் அவர் எத்தித் தள்ளிய சம்பவங்கள் இலக்கிய உலகம் அறிந்தவைதான். எதிலும் எங்கும் நிலைத்திருக்கத் தெரியாத படைப்பாளிகளுக்கேயுள்ள அலைவுறும் மனம் கொண்டவர் பிரபஞ்சன். முறையாகத் தமிழ் படித்து, முதன்முதலில் மாலைமுரசு பத்திரிகையில் ஒரு நிருபராகத் தன் வாழ்வைத் துவக்குகிறார். துவக்கத்திலேயே உண்மையின் குரூர முகம் அச்சேற்ற மறுத்து அவரை வெளியேற்றுகிறது; அல்லது அவரே வெளியேறுகிறார். மானுட ஜீவிதத்தின் இந்த எழுபத்து மூன்று வயது வரை அவருக்கு ஏற்பட்ட முரண்பாடுகளையும், சமூக வாழ்வில் ஒரு படைப்பாளியால் சகித்துக்கொள்ள முடியாத அருவருப்பு மிக்க சமரசங்களையும் உதறித் தள்ளுபவராகவும், எதிர்கால லௌகீக வசதிகளைப் பற்றி எந்தக்கவலையுமின்றி ஆரம்பத்தில் தன் உடல் மீதேறிய அதே உற்சாகத்துடன் கடற்காற்றின் குளுமையுடனும், சுதந்திரத்துடனும் நம்மோடு அலைந்து திரியும் எளிய படைப்பாளியாகவும்தான் பிரபஞ்சனை ஒவ்வொருவருமே உணரமுடியும்.

Continue Reading →

எழுத்தாளர் பிரபஞ்சனின் மறைவு தமிழ் இலக்கிய உலகிற்குப் பெரும் இழப்பு

எழுத்தாளர் பிரபஞ்சன்எங்கள் காலத்தில் வாசிப்பு முக்கியமானதொன்றாக இருந்தது. ஒருவரோடு உரையாடும் போது அவரிடம் இலக்கியத்தேடல் இருக்கிறதா இல்லையா என்பதை அவருடைய வாசிப்பு அனுபவத்தில் இருந்துதான் பெறமுடிந்தது. இலக்கியத்தில் ஈடுபாடு கொண்டவர்கள் நிறைய வாசித்துக் கொண்டே இருந்தார்கள். இதனால் அவர்களின் கல்வி அறிவை மட்டுமல்ல, அவர்களின் பொது அறிவையும் இனம் காண முடிந்தது. சிறுகதை, நாவல் போன்றவற்றில் ஏற்பட்ட ஆர்வம் காரணமாக எனக்குப் பிடித்தமான எழுத்தாளர்களின் ஆக்கங்களை வாசிக்கத் தொடங்கினேன். அந்த வரிசையில்தான் பிரபஞ்சனின் ஆக்கங்களையும் வாசிக்கத் தொடங்கினேன். சுருங்கச் சொன்னால், முகம் தெரியாத பிரபஞ்சனின் வாசகர்களில் ஒருவனாக இருந்த எனக்கு, அவர் 2011 ஆம் ஆண்டு கனடாவிற்கு வந்த போது, அவரை நேரிலே சந்தித்து உரையாடச் சில சந்தர்ப்பங்கள் கிடைத்தன.

எழுத்தாளர் பிரபஞ்சனை நான் சந்தித்ததற்கு இன்னும் ஒரு காரணம் இருந்தது. சமீபத்தில் அமரரான சித்தன் அவர்களை ஆசிரியராகக் கொண்ட ‘யுகமாயினி’ குறுநாவல் போட்டியில், ‘அம்மாவின் பிள்ளைகள்’ என்ற எனது குறுநாவல் பரிசு பெற்ற போது, அந்தக் குறுநாவல் போட்டிக்கு பிரபல எழுத்தாளர் பிரபஞ்சன் அவர்கள் தான் நடுவர் குழுவுக்குப் பொறுப்பாக இருந்தாகவும் தெரிவித்திருந்தார். அதனால்தான் கனடாவுக்கு எழுத்தாளர் பிரபஞ்சன் வந்திருந்த சமயம், அவரைச் சந்தித்து உரையாடினேன். அப்போது அந்த ‘அம்மாவின் பிள்ளைகள்’ குறுநாவலின் சிறப்பம்சங்களைக் குறிப்பிட்டு என்னைப் பாராட்டியிருந்தார். போர்க்காலச் சூழலில் எழுந்த அந்த நாவலின் கருப்பொருளையும், சிறப்பு அம்சங்களையும் சொன்ன போது, அவருடைய ஞாபக சக்தியையும், முழுமையாக வாசித்துத்தான் அதைத் தெரிவு செய்திருந்தார் என்பதையும் நினைத்து பெருமைப்பட்டேன்.

Continue Reading →

எழுத்தாளர் பிரபஞ்சன் மறைந்தார்!

பிரபஞ்சனின் 'வானம் வசப்படும்'பிரபஞ்சனின் 'மானுடம் வெல்லும்'நவீனத்தமிழ் இலக்கியத்தின் முக்கிய படைப்பாளிகளிலொருவரான எழுத்தாளர் பிரபஞ்சனின் மறைவுச்செய்தியை முகநூல் மூலம் அறிந்தேன். அண்மைக்காலமாக இவரது உடல்நிலை பற்றிய செய்திகளை முகநூல் மூலம் அறிந்து வந்திருக்கின்றேன். இவரது ‘மானுடம் வெல்லும்’, ‘வானம் வசப்படும்’ நாவல்கள் தமிழில் வெளியான சிறந்த படைப்புகள். ‘வானம் வசப்படும்’ நாவலுக்காகச் சாகித்திய அகாதமி விருது பெற்றவர் இவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. கதை, கட்டுரை, நாவல், நாடகமெனத் தமிழ் இலக்கிய உலகில் தடம் பதித்தவர் எழுத்தாளர் பிரபஞ்சன்.

தமிழ் எழுத்தாளர்களின் புனைபெயர்களில் என்னை மிகவும் கவர்ந்த புனைபெயர்களில் ஒன்று இவரது புனைபெயரான ‘பிரபஞ்சன்’ என்னும் புனைபெயர்.

சென்னை மாநகரில் கழிந்த இவரது ‘மேன்சன்’ வாழ்க்கை பற்றிய கட்டுரைகளும் முக்கியமானவை.

இவரது மறைவு மிகப்பெரிய இழப்பு என்பது மிகையான கூற்றல்ல.

இவரைப்பற்றிய கட்டற்ற கலைக்கலைஞ்சியமான விக்கிபீடியாக் குறிப்பு இவ்விதம் கூறுகின்றது:

Continue Reading →

படித்தோம் சொல்கின்றோம்: ஆழியாள் மொழிபெயர்த்த அவுஸ்திரேலிய ஆதிக்குடிகளின் கவிதைகள்: ‘பூவுலகைக்கற்றலும் கேட்டலும்’!

ஆழியாள்பூமித்தாயை கற்கவும் அவளது உணர்வுகளை கேட்கவும் முடியுமா? ஆம்! முடியும் என்பவர்கள்தான் அவுஸ்திரேலியாவின் ஆதிக்குடிகளான அபோர்ஜனிஸ் இனத்தவர்கள். இயற்கையை நேசித்து அதற்கியைந்து வாழ்ந்த மக்கள் கூட்டத்தினரிடமிருந்து, வந்தேறு குடிகளால் அபகரிக்கப்பட்ட பெருநிலப்பரப்பிலிருந்து குரல்கள் தொடர்ந்தும் ஒலிக்கின்றன. அங்கு இசையும் அவலமும் கண்ணீரும் இழப்பும் பண்பாட்டுக்கோலங்களும் வரலாற்றுச்செய்திகளும் வெளிப்படுகின்றன. அந்த மக்கள் குறித்து தொடர்ந்து எழுதியும் பேசியும் ஆய்வு செய்தும் வந்திருப்பவர் அவுஸ்திரேலியா கன்பரா மாநில நகரத்தில் வதியும் கவிஞர் ஆழியாள் மதுபாஷினி.

இவர், இலங்கையில் திருகோணமலையில் பிறந்து, தனது கல்வியை மூதூர் புனித அந்தோனியார் கல்லூரியில் தொடர்ந்து, பின்னர் மதுரை மீனாட்சி கல்லூரியில் ஆங்கில இலக்கியத்தில் கலைமாணி பட்டமும், நியுசவுத்வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் ஆங்கில முதுமாணிப்பட்டமும் பெற்றவர். தகவல் தொழில்நுட்பத்தில் பட்ட மேற்படிப்பு டிப்ளோமாவும் பெற்றவர். உரத்துப்பேச, துவிதம், கருநாவு முதலான கவிதைத் தொகுப்புகளை 2000 முதல் 2013 வரையிலான காலப்பகுதிக்குள் வரவாக்கியவர். பூவுலகைக் கற்றலும் கேட்டலும் தொகுப்பு ஆழியாளின் மொழிபெயர்ப்பில் வந்துள்ள ஆதிக்குடிகள் பற்றிய கவிதைகளின் தொகுப்பு. ஆழியாளின் கவிதைகள் ஆங்கிலம், மலையாளம், கன்னடம், சிங்களம் ஆகியமொழிகளிலும் பெயர்க்கப்பட்டுள்ளன. ஆழியாள் இலங்கையில் வவுனியா பல்கலைக்கழக வளாகத்திலும் ஆங்கில இலக்கிய விரிவுரையாளராக பணியாற்றியிருப்பவர். பெண்கள் சந்திப்பு, மற்றும் அவுஸ்திரேலிய தமிழ் இலக்கிய கலைச்சங்கம் முதலான கலை இலக்கிய அமைப்புகளிலும் அங்கம் வகிப்பவர். இவரது கவிதைகள் ஊடறு, காலம், அணங்கு, மூன்றாவது மனிதன், பூமராங் முதலான இதழ்களிலும் வந்துள்ளன.

‘பூவுலகைக் கற்றலும் கேட்டலும்’ தொகுப்பினை ” அணங்கு” பெண்ணியப்பதிப்பகம் வெளியிட்டுள்ளது.

Continue Reading →

பிடித்த சிறுகதை – குந்தவையின் ‘பாதுகை’

குந்தவை1963 இல் ஆனந்தவிகடனில் ‘சிறுமை கண்டு பொங்குவாய்’ என்ற முத்திரைக் கதையுடன் அறிமுகமானவர் எழுத்தாளர் குந்தவை. இவரது இயற்பெயர் சடாட்சரதேவி. யுத்தத்தின் கோரமுகங்களைத் தரிசித்து தொண்டைமானாற்றை விட்டு அகலாது தனது தளர்ந்த வயதிலும் தனியாக வாழ்ந்து வருபவர். ஈழத்தில் பெயர் குறிப்பிடக்கூடிய மூத்த பெண் எழுத்தாளர்களில் ஒருவர். இன்றுவரையும் எழுதி வருபவர். இவரின் “யோகம் இருக்கிறது”, “ஆறாத காயங்கள்” ஆகிய இரண்டு சிறுகதைத்தொகுப்புகள் இதுவரை வெளிவந்துள்ளன. 

குந்தவையின் சிறுகதைகள் யதார்த்த வாழ்வின் பதிவுகள். ஈழத்து மாந்தர்களின் வாழ்வின் இருண்ட பக்கங்களையும் தன்னைப் பாதித்த கதைகளையும் மண்ணின் பண்பாட்டோடு அழகாக வெளிப்படுத்துபவை. இவரின் கதைகளில் வரும் காட்சிச் சித்திரிப்புக்கள் வாசகரை கதைகளோடு கட்டிப்போடக்கூடியவை. 

இவர் எழுதிய “பாதுகை” என்ற சிறுகதை பற்றி இச்சிறுகட்டுரையில் குறிப்பிடலாம். இறுதி யுத்தத்தின் பின்னர் காணாமலாக்கப்பட்ட பல பிள்ளைகளின் கதைகளில் ஒரு கதையைச் சொல்வது. அவளின் ஒரேயொரு மகன் அவளின் கண்முன்னேயே காணாமல் ஆக்கப்பட்டவன். மகன் வருவான் என எதிர்பார்த்து, தாய் எதிர்கொள்ளும் வேதனைகளும் உள்ளக்குமுறல்களும் உணர்வுபூர்வமாக இச்சிறுகதையில் பதிவாகியுள்ளது. 

“வாசலில் நின்று அம்மா அம்மா என்று கூப்பிட்டான் தயாளன். உள்ளே ஒருவருமிருப்பதாகத் தெரியவில்லை. முன் எப்பொழுதாவது இந்த வீட்டின் முன்நின்று இப்பிடி அன்னியன்போல் கூப்பிட்டிருப்பானா என யோசித்தான். “ரமணா” என கூப்பிட்டுக் கொண்டு அட்டகாசமாக உள்ளே நுழைந்துதான் பழக்கம். மீண்டும் கூப்பிட்டான். வெளியிலிருந்து வீட்டைச் சுற்றிக்கொண்டு யாரோ வருவது தெரிந்தது. ரமணனின் அம்மாதான். பாதியாய் இளைத்திருந்தாள். முன்கற்றைத் தலைமயிர் வெளுத்து காற்றில் அலைந்தது. கன்னம் ஒட்டிப்போய் இருந்தது. நடுவே சுருக்கங்கள்.”

இவ்வாறு ரமணின் தாய் இச்சிறுகதையில் அறிமுகப்படுத்தப்படுகிறார். நீண்ட காலத்திற்குப் பின்னர் தனது நண்பன் ரமணனின் நிலை தெரிந்திருந்தும், அவனின் தாயாரிடம் ஒரு முறை வரும் சக நண்பனாகிய தயாளனின் பார்வையூடாகவே இச்சிறுகதை நகர்த்தப்படுகிறது. அப்போது ரமணனோடு படித்த, பழகிய உறவாடிய காலங்கள் எல்லாவற்றையும் அவன் மீட்டுப் பார்க்கிறான். அந்தத் தாயாரோடு பல விடயங்களைப் பரிமாறிக் கொள்கிறான்.

“ஆம்பிளை செக் பொயிண்டிலிருந்து என்ரை பிள்ளை வெளியில வந்தவன் தம்பி. நான் கண்டனான் அதுக்குள்ளை என்னை பொம்பிளை செக் பொயின்ரிலை கூப்பிட்டாங்கள். நான் உள்ளை போயிட்டன். திரும்பி வந்து பார்த்தா என்ரை பிள்ளையைக் காணேல்ல. வெளியில நிண்ட தாங்கள் பிடிக்கேல்லை எண்டான். பஸ் வந்து தங்களை வவுனியாவிற்கு ஏற்றிச் செல்லுமெனக் காத்திருந்த சனத்துக்குள்ள நான் ‘விசரி’ மாதிரிச் திரிஞ்சன். என்ரை பிள்ளையைக் கண்டீங்களோ? என்று கேட்டு ஒரு நாளோ இரண்டு நாளோ? பசி தாகம் ஒண்டுமே தெரியேல்ல” 

மகனைப் பிரிந்த வேதனைகளும் வார்த்தைகளும் தயாளனையும் வாட்டுகிறது. நாளை புறப்படும்போது ரமணனின் நினைவாக ஏதாவது ஒரு பொருளை எடுத்துச்செல்லலாம் என எண்ணுகிறான். தற்செயலாக அவனின் செருப்பு கண்களுக்குப் புலப்படுகிறது. அதனை எடுத்துச்செல்ல மனம் விரும்புகிறது. 

Continue Reading →

வாசிப்பும், யோசிப்பும் 317: நகுலனின் சுசீலா! யார் அவள்?

எழுத்தாளர் நகுலன்எஸ்.ராமகிருஷ்ணனின் ‘நாவலெனும் சிம்பொனி’ நூலில் எழுத்தாளர் நகுலன் பற்றியதொரு கட்டுரையுள்ளது. சிறு கட்டுரை அது. அதில் நகுலனின் படைப்புகளில் அடிக்கடி காணப்படும் சுசீலா என்னும் பெண் பற்றிய எஸ்.ராமகிருஷ்ணனின் கருத்துகள் இடம் பெற்றுள்ளன. நகுலனின் சுசீலா பற்றி எஸ்.ரா பின்வருமாறு கூறுவார்:

“‘சுசீலாவின் உயர் தன்மைகள் சுசீலாவிடம் இல்லை’ எனப்பேசும் இவர், கவிதையெங்கும் காணப்படும் சுசீலா எனும்  பெண் பெயரைக்கொண்டு அதைப்பெண்ணாக எடுத்துக்கொள்ள வேண்டியதில்லை என்ப்படுகிறது.  இப்பெண்பெயர் உருவாக்கும்  வார்த்தைச் சித்திரம் ஏற்கனவே உருவாகும் மனநிலையின் தீவிரத்திற்கு எதிர்நிலையாகவோ , சமன் செய்யும் ஒன்றாகவோ, பரிகசிக்கும் நிலையாகவோ கொள்ளலாம். ஒருவகையில் மரபுக்கவிதையில் வரும் வெண்சங்கே, பாம்பே, கிளியே, குதம்பாய்போல் இதுவும் சுய எள்ளல் குறியீடாகக் கொள்ளலாம்.  சில இடங்களில் சுசிலா மூலம் ஏற்படுத்தும்  நெருக்கம் பாரதியின் கண்ணம்மா என்ற வார்த்தை உருவின் செயல்பாடு போலத் தெரிகிறது.”

எழுத்தாளர்கள் பலர் அவ்வப்போது சுசீலா போன்ற விடயமொன்றினைப்பற்றிக் குறிப்பிடும்போது அவ்விடயம் பற்றிய போதிய ஆய்வெதுமின்றி முடிவொன்றுக்கு வந்து விடுகின்றார்கள். அதற்கு எஸ்.ராமகிருஷ்ணனும் விதிவிலக்கானவரல்லர் என்பதையே நகுலனின் சுசீலா பற்றிய அவரது கூற்றும், அது பற்றிய மேலதிக விளக்கங்களும் புலப்படுத்துகின்றன.

எஸ்.ரா. நகுலனின் சுசீலா பற்றி இவ்விதமான முடிவொன்றுக்கு வர முன்னர் நகுலனின் படைப்புகள் அனைத்திலும் நகுலன் எவ்விதம் சுசீலாவை விபரித்திருக்கின்றார் என்று பார்த்திருக்க வேண்டும். பார்த்தாரா என்பது தெரியவில்லை. அவ்விதம் அவர் செய்திருந்தால் நிச்சயமாக ‘சுசீலாவும் ஒரு எள்ளல்’ என்னும் முடிவுக்கு வந்திருக்க மாட்டார். எனக்கென்னவோ நகுலனின் வாழ்வில் எதிர்பட்ட , அவர் காதலித்த ஆனால் அவருக்குக் கிடைக்காமற் போன பெண்ணொருத்திதான் அவர் படைப்புகளில் வரும் சுசீலா என்னும் பாத்திரமாக இருக்க வேண்டுமென்று தோன்றுகின்றது. தனக்குக் கிடைக்காமற் போன பெண்ணைச் சுசீலா என்னும் பாத்திரமாக உருவகித்து அவளைத்தன் எழுத்துகளில் நடமாடவிட்டு , அவளுடன் எழுத்துலகில் வாழ்ந்து வந்திருக்கின்றார் நகுலன் என்றே தோன்றுகின்றது. இறுதிவரைத் தனிமையில் வாழ்ந்த நகுலன் நிஜ வாழ்க்கையில் தனக்குக்கிடைக்காமற் பெண்ணைச் சுசீலாவாக்கி மானசீகமாக வாழ்ந்த்திருக்கின்றார் என்றே தோன்றுகின்றது.

உதாரணத்துக்கு நகுலனின் சுசீலா பற்றிய கவிதைகள் சிலவற்றைப்பார்ப்போம்..  – நடை சிற்றிதழில் வெளியான கவிதைகள் இவை:

1. உன் நினைவு

காவியத்தின் சுவை போல
சுவை போல
நீள் நகரின் எழில் போல
எழில் போல
உன் நினைவு தான்
நினைவு தான்.

2. சுசீலா

சுசீலா
சுசீலாவின் பெயரில்லை;

சுசீலாவின் சிறப்பு (ச்)
சுசீலாவிடமில்லை

என்றாலும் என்ன
அவளிடம் இல்லாத
ஒவ்வொன்றும்
எனக்குக் கிட்டாத
ஓராயிரம்
கிட்டும் கிட்டும்
என்று

பல்லாண்டு பாடும்.

Continue Reading →