(மெல்பனில் நடைபெற்ற தமிழச்சி தங்கபாண்டியனுடனான இலக்கியச் சந்திப்பில் சமர்ப்பிக்கப்பட்ட நயப்புரை)
கவிதை நான் பயணப்படாத தளம். சிறுகதைகளிலும் புதினங்களிலும் இயல்பாக இலகுவாக பயணிப்பதுபோல், கவிதை கைவரவில்லை. மனம் இன்னும் அதற்குப் பக்குவப்படவில்லை என்று நினைக்கிறேன். தமிழச்சி தங்கபாண்டியனின் பல கவிதைகள் ஒரு சிறுகதைக்குரிய கருவை தாங்கியிருப்பதும், என் மனம் அதை சிறுகதையாய் மாற்ற முயற்சித்ததும், பின் அதை நான் கட்டியிழுத்து அடுத்த கவிதைக்கு இட்டுச்செல்வதும் என முதல் நான்கு நாட்கள் ஓடியேவிட்டது. தமிழச்சி, தன் மனதிற்குள் பல நாட்களாய் பொத்திவைத்து அடைகாத்ததை கவிதை முத்துக்களாய் ஒரு சில வரிகளில் படைப்பது பிரமிப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆடம்பரமற்று, எளிமையான வார்த்தைகளால் எல்லோரும் அனுகும்விதமாக , எல்லோருக்கும் புரியும் விதமாக இவரது கவிதைகள் உள்ளன. எப்படி எளிமையான சொற்களால் ஆனதோ, அதேமாதிரி எளிமையான மனிதர்கள், அன்றாட நிகழ்வுகள், வாழ்க்கைப்பாடுகள், சின்னச்சின்ன இழப்புகள் என இவர் கவிதைகளாலும், நாம், நம் அன்றாட வாழ்க்கையுடனும் எண்ணங்களுடனும் இணைத்துக்கொள்ளலாம்.
இவரது கவிதைகளை வாசிக்கும்பொழுது, தமிழச்சி மறைந்து, கிராமத்துப்பெண்ணான சுமதியே மனதில் வலம்வருகிறார். கிராமத்திலிருந்து பெருநகரத்திற்கு இடம்பெயர்ந்தமையால் அவரது மனதிற்குள் தோன்றும் உணர்வுகளை கவிதையாக பதிவுசெய்கின்றார்.
தீப்பெட்டி பொண்வண்டு என்ற கவிதையில்,
அதிகாலைத் தூக்கம்… அசங்கியிருக்கும்
வானம் பார்த்துக் கலைகின்ற வரம்
கிராமம்விட்டு நகரத்தில் குடிவந்த நாள் முதல்
பக்கத்துக் குடியிருப்பும் பார்க்காதிருக்க இறுகப்பூட்டப்படும்
சன்னல்களின் உயிரற்ற திரைச்சேலைகளில் நிலைக்கின்ற சாபமானது.
இக்கவிதையில் கவிஞர், பெருநகரத்து வாழ்வில் தான் இழந்ததை கூறுகிறார். ஆனால், இன்றைய சென்னை வாழ்க்கையும் அன்று நான் வாழ்ந்த சென்னை வாழ்க்கையும் வேறு வேறு! தமிழச்சி தனது கிராமத்து வாழ்க்கையை கூறும்போது, நான் வளர்ந்த சென்னை வாழ்க்கையைத்தான் நினைத்துக்கொள்கிறேன்.
கோடைகாலம் முழுவதும் மொட்டை மாடியில் தண்ணீர் ஊற்றி தரையை குளிர்வித்து, பக்கத்து மாடியில் உள்ளவர்களிடம் கதைபேசி, Transistor இல் பாட்டுக்கேட்டு, தூங்கிய நாட்கள். காலைக்கதிரவனின் வெளிச்சம் படரும்பொழுது, விழித்ததும் – விழித்தும் விழிக்காமலும் சுகமாய் படுத்திருக்கும் அந்த பத்து நிமிடம்….! பக்கத்துவீட்டு தொலைக்காட்சி செய்திவாசிப்பதும், எங்கிருந்தோ வரும் கோயில் மணியோசையும், உடன் ஒலிக்கும் மசூதியின் பாங்கு சத்தமும் என இவரது கிராமத்து வாசனை கவிதைகள் அனைத்தும் எனக்கு என் கிராமத்து சென்னையை நினைவுபடுத்தின.