முன்னுரை
பழந்தமிழர் இலக்கியம் சங்க இலக்கியம் ஆகும். இதில் பத்துப்பாட்டும் எட்டுத்தொகையும் இலக்கியமாகும். எட்டுத்தொகையில் நூல்களில் அகம் சார்ந்த நூல்களுள் ஒன்றான அகநானூறு மிகவும் சிறப்பு வாய்ந்தவையாகும். 13 அடி முதல் 31 அடி வரை அமைந்த 400 அகப்பாடல்களின் தொகுப்பாகும். களிற்றியானை நிரை, மணிமிடை பவளம், நித்திலக்கோவை என மூன்று பிரிவாகப் பாகுபாடு செய்துள்ளனர். வேறு நூல்களில் காணமுடியாத ஒரு வரையறையை இந்நூல் காணலாம். நான்காம் எண் முல்லை என்ற முறையில் இந்நூல் பாடல்கள் தொகுக்கப்பட்டுள்ளன. தலைவன் தலைவி மீது கொண்ட காதலும், தலைவி தலைவன் மீது கொண்ட காதலும் இவ்விருவரும் அன்பைப் பயிரினச் காட்சி உவமைகள் வாயிலாகவும், பயிரினங்கள் ஒன்றையொன்று சார்ந்து வாழும் நிலைகளைக் கூட்டுப் பயிரினக் காட்சிகள் வாயிலாகக் காட்டி அகமாந்தர்கள் உள்ளத்தில் அன்பின் நிலைபேற்றினை உறுதிப்படுத்தும் உணர்வுகளைப் புலவர்களின் குறிப்பின் சுட்டிக்காட்டுவதை இக்கட்டுரையின் வாயிலாக வெளிப்படுத்துவதை அறியலாம்.
தலைவனின் கூற்று
வினையின் பொருட்டுத் தலைவியைப் பிரிந்து செல்லும் தலைவனே முல்லைத்திணையில் மிகுதியான கூற்று நிகழ்த்துகிறான். வினையை முடிந்து மீண்டும் வரும் சூழலில் தலைவனானவன் தன்னோடு வரும் தேர்ப்பாகனிடம் தன்னுணர்வை வெளிப்படுத்துகிறான். தலைவனுக்குரிய கிளவிகளையெல்லாம் தொகுத்துக் கூறும் தொல்காப்பியர் பாகனைக்குறிப்பிடும்போது,
பேரிசை ஊர்தீப் பாகர் பாங்கினும் (தொல்.பொருள்.நூ:144)
என்று நூற்பாவின் மூலமாகக் கூறுகிறார்.
தலைவியைப் பிரிந்திருக்கும் போது பாகன் ஒருவனே தலைவனுடன் நெருங்கிப் பணிபுரிபவனாக, நெருங்கியத் தொண்டனாக இருப்பதால் பாகனிடம் மட்டுமே தலைவன் தன் கடமைகளை இனிதே முடித்த மகிழ்ச்சியையும் பிறவற்றையும் புலப்படுத்துவான். இதனை,
. . . . . . முடிந்த காலத்துப்
பாகனொடு விரும்பிய வினைத்திற வகையிலும் (தொல்.பொருள்.நூ:44)
என்ற நூற்பாவின் மூலமாகச் சுட்டுகிறது.
முல்லைத்திணையில் தலைமகன் தேர்ப்பாகன் கூறுவதாகப் பதினெட்டுப் பாடல்கள் இடம்பெற்றுள்ளன. இதில் பாசறையில் இருக்கும்போது தலைவன் தேர்ப்பாகனுக்குச் சொல்லியதாக ஒரு பாடலும், வினையை முடித்து மீளும் தலைமகன் தேர்ப்பாகனுக்குச் சொல்லியதாக பதினான்குப் பாடல்களும், தலைவன் தேர்ப்பாகற்குச் சொல்லியதாக மூன்று பாடல்களும் இடம் பெற்றுள்ளன. இதைத்தவிர வினைமுற்றியத் தலைவன் தன் நெஞ்சிற்கு உரைப்பது போல் தேர்ப்பாகற்குச் சொல்லியதாக இரு பாடல்களும், பாசறையில் இருந்த தலைவன் தன் நெஞ்சிடம் கூறியதாக நான்கு பாடல்களும், தலைவன் பாசறையிலிருந்து தனக்குத் தானே சொல்லியதாக ஒரு பாடலும் இடம்பெற்றுள்ளது.