ஒருநாள் இளைஞனொருவன், ஒரு பத்திரிகை ஆசிரியரிடம் கவிதை ஒன்றைப்.பிரசுரிப்பதற்கெனக் கொண்டுபோய்க் கொடுத்தான்.
அதனைப் படித்துவிட்டு, “இந்தக் கவிதையை நீயே எழுதினாயா?” என்று ஆசிரியர் கேட்டார்.
“ஆம், ஒவ்வொரு எழுத்தும்” என்று அழுத்தம் திருத்தமாகப் பதிலளித்தான், இளைஞன்.
ஆசிரியர் மிக மரியாதையுடன் எழுந்து நின்றார். “வணக்கம், உங்களைச் சந்திப்பதில் நான் பெருமகிழ்ச்சி அடைகிறேன், எட்கார் அலன்போ அவர்களே! நீண்ட
நாட்களுக்கு முன்னரே நீங்கள் இறந்துவிட்டதாக நான் நினைத்தது தவறுதான்!”
எழுத்து என்பது மனித நாகரிக வளர்ச்சிப் போக்கின் ஒரு பிரதான மைல்கல். இது உணர்வுகள், சிந்தனைகள், செய்திகள் என்பவற்றைப் பரிமாறிக்கொள்வதற்கான ஒரு வழிமுறை. இந்த உணர்வுகளும், சிந்தனைகளும், செய்திகளும் புதுமையானவையாகவும் கட்டுக்கடங்காதவையாகவும் மனதில் பொங்கிப் பிரவகிக்கின்றபோது, அவற்றை எழுத்தில் பதிக்க வேண்டும் என்ற உந்துலையும் உத்வேகத்தையும் பெறுகின்றவர்கள், எழுத்தாளர்கள்.
அறிவு, ஆர்வம், ஆற்றல், தேடல், தெளிவு கொண்டவர்களுக்கு எழுத்துக்கலை கைகூடிவர வாய்ப்பு உண்டு. இவையேதுமின்றி, முடவன் கொம்புத் தேனுக்குக் கொண்ட ஆசை போன்று, குறுக்கு வழியில் எழுத்தாளராக வேண்டும் என்ற சிலரது பேராசையே, எட்கார் அலன்போ போன்ற புகழ்பூத்த எழுத்தாளர்கள் பலரும் இந்நாட்களில் அடிக்கடி புத்துயிர் பெற்றுவரக் காரணமாகிப் போய்க் கிடக்கின்றது!
இவ்வாறான எழுத்துச் சூழலில், எழுத்தாளர்களும் படைப்பாளர்களும் பத்திரிகையாளர்களும் பிரசுரிப்பாளர்களும் அறிந்து வைத்திருக்க வேண்டிய – கருத்துக் களவு, பதிப்புரிமை, ஆக்கவுரிமை, சர்வதேச நியம நூல் இலக்கம், சர்வதேச நியமத் தொடர் இலக்கம் போன்றன குறித்த, சில முக்கிய தகவல்களை முன்வைப்பதே இச்சிறு கட்டுரையின் நோக்கமாகும்.
கருத்துக் களவு (Plagiarism)
இன்னொருவரது மொழிப் பாவனைகளை, எழுத்துக்களை, சிந்தனைகளை, கருத்துக்களை அல்லது படைப்புக்களை அச்சொட்டாகப் பிரதிசெய்து, அவற்றைத் தமதென்று உரிமை பாராட்டி, வெளிப்படுத்துவது கருத்துக் களவு எனப்படும்.
ஒரு தவறான அபகரிப்பு நடவடிக்கையான இக்கருத்துக் களவானது, எழுத்துத்துறையில் இந்நாட்களில் சர்வ சாதாரணமாக இடம்பெற்றுவரும் பெருத்த மோசடி; ஒழுக்கம், சட்டம்சார் விதிமுறைகளுக்கு முரணான, கண்ணியமற்ற செயற்பாடு. இது பதிப்புரிமைச் சட்டங்களை மீறுவதனால், சம்பந்தப்பட்டவர்களைச் சில சமயங்களில் பாரதூரமான சட்டப் பிரச்சினைகளுக்குள் இட்டுச் செல்லக்கூடிய ஆபத்துக்களைக் கொண்டது.
கருத்துக் களவில் பல வகைகள் காணப்படுகின்றன. அவற்றுள் சுயகருத்துக் களவு (Self Plagiarism), தற்செயலான கருத்துக் களவு (Accidental Plagiarism), நேரடியான கருத்துக் களவு (Direct Plagiarism) என்பன பிரதானமானவையாகும். ஒருவர் தனது சொந்தக் கருத்தினை அல்லது எழுத்தினை, அது முன்னர் பிறிதொரு சந்தர்ப்பத்தில் ஏற்கனவே தம்மால் பயன்படுத்தப்பட்டது என்பதைக் குறிப்பிடாமல், மீண்டும் பயன்படுத்துதல் சுயகருத்துக் களவு எனப்படும். ஓர் எழுத்தின் மூலத்தைக் குறிப்பிடாமல் அலட்சியம் செய்தல், தவறாகக் குறிப்பிடுதல், அல்லது உள்நோக்கமின்றி மூலப் பிரதியுடன் ஒருமைப்பாடுடைய சொற்களை, சொற்றொகுதிகளை, வாக்கிய அமைப்புக்களைப் பயன்படுத்துதல் தற்செயலான கருத்துக் களவு எனப்படும். எங்கிருந்து பெறப்பட்டது என்ற பண்புக்கூற்றோ அல்லது மேற்கோள் குறியோ இன்றி, இன்னொருவரது கருத்தை, வார்த்தைக்கு வார்த்தை படியெடுத்தும், வெட்டியொட்டியும் தனதென உரிமை பாராட்டிப் பயன்படுத்துதல், நேரடியான கருத்துக்களவாகும். இதுவே மிகவும் பாரதூரமான கருத்துக் களவு எனக் கருதப்படுகின்றது.