கவிதை: சித்திரைப் பாவையே வருக !

சித்திரைப்புத்தாண்டு!

– சித்திரைப் புத்தாண்டு நாளினையொட்டி அண்மையில் கிடைத்த கவிதை.- பதிவுகள்.காம் –

இன்று
நாங்கள் காலை துயில் எழுந்து
நாட்காட்டியைப் பார்த்தால்
பங்குனித்திங்கள் பெற்றெடுத்த 
சித்திரைப்பாவையே உந்தன்
மத்தாப்பூ முகம் தெரிகிறதே !

இன்று
நோக்குமிடமெல்லாம்
சித்திரைப் பாவையே உந்தன்
நேசக்கரம் நீட்டுகிறதே !

இன்று
கேட்குமிடமெல்லாம்
சித்திரைப் பாவையே உந்தன்
மனிதநேயம் ஒலிக்கிறதே !

Continue Reading →

வாசிப்பும், யோசிப்பும் 340: ஸோலாவும், அ.ந.க.வும் பற்றி மு.தளையசிங்கம்!

எமிலி ஸோலாஅ.ந..க.மு.தளையசிங்கத்தின் ‘ஏழாண்டு இலக்கிய வளர்ச்சி’ நூலில் ஓரிடத்தில் இவ்விதம் வருகின்றது: “அ.ந.கந்தசாமி கூட சோலாவைப்பற்றித்தான் எழுதினார். சோலா இயற்கைவாதியே ஒழிய சோஸலிஸ்ட் யதார்த்தவாதியல்ல. அதோடு அப்படி ஒருவரைத்தான் தேட வேண்டுமென்றால் மார்க்ஸே பால்சாக்கைப்பிடித்திருக்கலாம். ஆனால் அவர் சோலாவைத்தான் பிடித்தார்.”

இக்கூற்றினை சிறிது ஆராய்வோம். அ.ந.க சோலாவைப்பற்றி எழுதுவதிலென்ன தவறிருக்க முடியும். ஐம்பதுகளின் ஆரம்பத்தில் எமிலி சோலாவின் நாவலான ‘நானா’வைத் தமிழுக்கு மொழிபெயர்த்து சுதந்திரன் பத்திரிகையில் வெளியிட்டவர் அ.ந.க. சோலாவின் பாதிப்பு அ.ந.க.வுக்கு நிறையவேயுண்டு. எமிலி சோலாவைப்பற்றி அவர் பல கட்டுரைகள் எழுதியுள்ளார். அதில் சுதந்திரனில் ‘நானா’ தொடராக வெளியான சமயம் எழுதிய ‘எமிலி ஸோலா: வழுக்கி விழுந்த வடிவழகி நானா மூலம் வையத்தைக் கலக்கிய நாவலாசிரியர்! பிரெஞ்சுப் பேனா மன்னர்களின் ஒப்பற்ற ஜோதி எமிலி ஸோலா’ என்னும் கட்டுரையும் முக்கியமானது.

எமிலி ஸோலாவின் இலக்கியம் பற்றிக் குறிப்பிடுகையில் அவர் பின்வருமாறு குறிப்பிடுவார்: “ஸோலா இலக்கியத்திலே மோகனமான கனவுகளைத் தோற்றுவிக்கும் போக்கில் நம்பிக்கை கொண்டவரல்ல. சாக்கடை உலகைச் சாக்கடை நாற்றத்தை நாம் உணரத்தக்கவகையில் இயற்கைத்தன்மையுடனே சமைப்பதில்தான் அவரது சிறந்த கலை வெற்றி பெறுகிறதென்று கூறலாம். ‘இயற்கை வாதம்’ (Naturalism) என்று அவரும் அவரது கோஷ்ட்டியினரும் தமது இலக்கியப் பாணிக்கு நாமகரணம் செய்து கொண்டனர்.”

மேலும் “பிளாபரியின் இலக்கியப் போக்குக்கும் ஸோலாவின் இலக்கியப் போக்குக்கும் வித்தியாசம். இருந்தபோதிலும் பிளாபரி பிளாபரி ஸோலாவின் அகண்டாகாரமான இலக்கிய வளத்துக்கு அஞ்சலி செலுத்தினார். அவருக்குப் பிடிக்காத அம்சம் ஸோலாவின் எல்லை மீறிய – சில சமயங்களில் அருவருப்பூட்டும் யதார்த்தவாதமேயாகும். பிளாபரி ஸோலாவைப் பற்றிப் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்.” என்றும் கூறுவார்.

இவற்றிலிருந்து இயற்கைவாதம் என்றால் தீவிர யதார்த்தவாதம் என்று முடிவு செய்யலாம். இயற்கைவாதம் , யதார்த்தவாதம் இரண்டுமே மானுட வாழ்க்கையை உள்ளது உள்ளபடி சித்திரிப்பவை. இரண்டுமே கற்பனாவாதப்படைப்புகளுக்கு எதிராகத் தோன்றிய இலக்கிய வடிவங்கள். இவற்றில் இயற்கைவாதம் இயற்கை, அதன் விதிகள், பரம்பரை, நிலவும் இயற்கைச் சூழல் ஆகியவை மானுட வாழ்வை நிர்ணயிக்கும் கூறுகள் என்பதை அக்கோட்பாட்டின் அடிப்படைகளாகக் கொள்பவை. அடித்தட்டு மக்களின் வாழ்க்கையை அதன் சிக்கல்களை , கோரங்களை அப்படியே எடுத்துரைப்பவை. உண்மையில் இயற்கைவாதம் யதார்த்தவாதத்தின் தீவிர வடிவமே.

Continue Reading →

யாழ்ப்பாணத்தில் ‘படிப்பகம்’

முற்போக்கான , சமூகம் சார்ந்த நூல்களை உள்ளடக்கிய நூலகத்துடன் கூடிய புத்தகக்கடை வரவேற்கத்தக்க விடயம். சமூக மற்றும் இலக்கியப் பிரக்ஞை மிக்க அனைவரும் பாவிக்க வேண்டிய அமைப்பு.…

Continue Reading →

வாசிப்பும், யோசிப்பும் 339 : இலங்கைத் தமிழ் இலக்கிய வரலாற்றில் இலங்கை முற்போக்கு எழுத்தாளர்களும், அவர்கள்தம் இலக்கியக் கோட்பாடுகளும் , சுபைர் இளங்கீரன் தொகுத்துள்ள ‘தேசிய இலக்கியமும், மரபுப்போராட்டமும்’ என்னும் நூல் பற்றியுமான பதிவு!.

சுபைர் இளங்கீரன் தொகுத்துள்ள 'தேசிய இலக்கியமும், மரபுப்போராட்டமும்'இலங்கைத்தமிழ் இலக்கிய வரலாற்றைப்பொறுத்தவரையில் முக்கியமான காலகட்டங்களாக ‘மறுமலர்ச்சி’க் காலகட்டத்தையும், ‘இலங்கை  முற்போக்கு எழுத்தாளர் சங்கக்’ காலகட்டத்தையும் குறிப்பிடலாம். இலங்கை மண்ணுக்கேயுரிய மண்வாசனை மிக்க தனித்துவம் மிக்க எழுத்துகளைப்படைக்க வேண்டுமென்று ‘மறுமலர்ச்சிக்’ குழு வழிவந்த இளைஞர்கள் எண்ணினார்கள். ஆனால் அந்நோக்கமே ‘தேசிய இலக்கியம்’ என்னும் கோட்பாடாக வளர்த்தெடுக்கப்பட்டது. அதனைச் செய்தவர்கள் இலங்கை முற்போக்கு எழுத்தாளர் அமைப்பின் வழிச் செயற்பட்ட எழுத்தாளர்கள் , திறனாய்வாளர்கள். தேசிய இலக்கியம் பற்றிய புரிதலுக்காக எழுத்தாளர் இளங்கீரனின் ‘மரகதசம்’ சஞ்சிகையில் ‘தேசிய இலக்கியம்’ பற்றி ‘மரகதம் ‘ சஞ்சிகையில் வெளியான பேராசிரியர் க.கைலாசபதி, ஏ.ஜே.கனகரட்னா, அ.ந.கந்தசாமி ஆகியோர் எழுதிய கட்டுரைகள் முக்கியமானவை.

இதனைத்தொடர்ந்து தினகரன் பத்திரிகையில் மரபினைப்பேணிய பண்டிதர்களுக்கும், இலங்கை முற்போக்கு எழுத்தாளர்களுக்குமிடையில் தலையெடுத்த ‘மரபு’ பற்றிய விவாதமும் முக்கியமானது. இரு சாராரும் தினகரன் பத்திரிகையில் நடாத்திய விவாதம் இலங்கைத்தமிழ் இலக்கிய வரலாற்றில் முக்கியமானதொரு நிகழ்வு.

‘மரகதம்’ சஞ்சிகையில் வெளியான ‘தேசிய இலக்கியம்’ பற்றிய கட்டுரைகளையும், தினகரன் பத்திரிகையில் நிகழ்ந்த மரபு பற்றிய விவாதக் கட்டுரைகள் சிலவற்றையும், வேறு சில கட்டுரைகளையும் தொகுப்பாக்கி வெளியிட்டிருக்கின்றனர் ‘சவுத் ஏசியன் புக்ஸ்’ (சென்னை) பதிப்பகத்தினர். தொகுத்தவர் எழுத்தாளர் சுபைர் இளங்கீரன். மிகவும் முக்கியமான தொகுப்பு.

இத்தொகுப்பில் ‘மரகதம்’ சஞ்சிகையில் வெளியான ‘தேசிய இலக்கியம்’ பற்றிய கட்டுரைகளை  எழுதியவர்கள்:

1. தேசிய இலக்கியம் என்றால் என்ன? – பேராசிரியர் க.கைலாசபதி (மரகதம் 1961).
2. தேசிய இலக்கியம்  -சில சிந்தனைகள் – ஏ.ஜே.கனகரத்தினா (மரகதம் செப்டம்பர்  1961)
3. தேசிய இலக்கியம் – அ.ந.கந்தசாமி (மரகதம் அக்டோபர் 1961)

இதுபற்றி மேற்படி நூலுக்கான முன்னுரையில் இளங்கீரன் அவர்கள் பின்வருமாறு கூறுவார்:

“1954இல் இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கம்  நிறுவப்பட்டது.  அது நடத்திய இலக்கிய இயக்கத்தினூடாக ஈழத்து எழுத்தாளர் மத்தியிலும் , ஈழத்துப் படைப்பிலக்கியம் சம்பந்தமாகவும் விழிப்புணர்ச்சியும் எழுச்சியும் ஏற்பட்டது.  எனவே ஈழத்தின் படைப்பிலக்கியம் தமிழ் என்னும் பொதுப்பரப்புக்குள் அடங்கும் அதே வேளையில், அதன் தனித்துவத்தைக் காட்டவும் அத்தனித்துவத்தை நமது  மக்கள் இனங்கண்டு அதன் மீது தமது இலக்கிய உணர்வைப் பதிய வைக்கவும் , நேசிக்கவும், யதார்த்தவாதக் கோட்பாட்டை எளிதில் புரிந்துகொள்ளவும் அதற்குத் ‘தேசியம்’ என்னும் சொற் பிரயோகம் தேவையாகவிருந்தது.  எனவே இ.மு.எ.ச தனது முதலாவது மாநாட்டில் முன்வைத்த ஜனநாயக யதார்த்தவாதக் கோட்பாட்டை அடியொட்டி இரண்டரை வருடங்களுக்குப் பிறகு 1960 இல் ‘தேசிய இலக்கிய’த்தைப் பிரகடனம் செய்தது. இதனைத்தொடர்ந்து தேசிய இலக்கியம் பற்றிய விளக்கத்தை அளிக்க வேண்டியிருந்தது.  1961இல் வெளியான எனது கலை இலக்கிய சஞ்சிகையான ‘மரகதம்’ இப்பணியை ஏற்றது.  அதில் முதல் இதழில் பேராசிரியர் கைலாசபதி ‘தேசிய இலக்கியம்’ பற்றிய  தனது முதலாவது கட்டுரையை எழுதினார். அதனை அடுத்து இரண்டாவது மூன்றாவது கட்டுரைகளாக ஏ.ஜே.கனகரத்தினா, அ.ந.கந்தசாமி ஆகியோர் எழுதியதை மரகதம் வெளியிட்டது. “

Continue Reading →

ஆய்வு: அத்திப்பாக்கம் அ.வெங்கடாசலனார் – பத்தொன்பதாம் நூற்றாண்டு பகுத்தறிவு கருத்தியல்

ஆய்வு: அத்திப்பாக்கம் அ.வெங்கடாசலனார் – பத்தொன்பதாம் நூற்றாண்டு பகுத்தறிவு கருத்தியல்காலனிய ஆட்சி காலத்தில் இந்து மதத்தின் பண்பாட்டுச் சூழலையும் தகவமைப்புக்களையும் உடைத்தெறிந்து விமர்சனத்துக்குட்படுத்திய நூல் இந்துமத ஆசார ஆபாச தரிசினி. 1882 ஆம் ஆண்டில் எழுதப்பட்ட இந்நூல் இந்து மதத்தினைக் கடுமையான முறையில் எதிர்த்தும் அ.வெங்கடாசலனார் பொது வெளியில் அடையாளம் தெரியாத நபராகவே இருந்திருக்கிறார்.

இவரது சிந்தனைப்போக்கு 16 ஆம் நூற்றாண்டில் ஐரோப்பாவில் மலர்ந்த நவீன அறிவு மரபினையொட்டியதாகவும் சமூகத்தின் அத்தனை செயல்பாடுகளுக்கும் அறிவு தெளிவினைப் பெற வேண்டிய நோக்கத்தினைக் கொண்டதாகவும் இருக்கிறது. மத்திய கால ஐரோப்பாவில் சமூகத்தின் அனைத்து நடைமுறைகளுக்கான விளக்கங்களும் மதத்தில் இருந்து பெறப்பட்டன. ஆனால் 16 ஆம் நூற்றாண்டிற்குப் பின் தத்துவம், மதம், சமூகம் என எல்லாவற்றிற்குமான விளக்கங்கள் விஞ்ஞானங்களில் இருந்து தெளிவு பெற வேண்டும் என்ற தூண்டுகோளை விதைத்தவர் தெகார்த்.

‘பதினாறாம் நூற்றாண்டுகளில் ஐரோப்பாவில் தோன்றிய முக்கியத் தத்துவவாதிகளை அனுபவ வாதிகள், அறிவுவாதிகள் என வகைப்படுத்தலாம். அனுபவவாதிகள் புலனுணர்வுக்கும் புலனறிவுக்கும் முதன்மை தந்தார்கள். அறிவுவாதிகளோ மனித மனத்தில் உள்ளார்ததும், புறஉலகைப் புரிந்துகொண்டு விளக்கவல்லதும் எனத் தாங்கள் கருதிய அறிவுக்கு முதன்மை வழங்கினர். (எஸ்.வி.ராஜதுரை, இருத்தலியமும் மார்க்ஸியமும், விடியல், ப. 53) இரண்டு அணுமுறையாளர்களும் சமுதாயம், மனிதன், இயற்கை ஆகியன பற்றி அன்றைய கத்தோலிக்கத் திருச்சபை கூறிவந்த பொதுவான விடயங்களை விமர்சித்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

அதுவரை உலகத்தில் இருந்துவந்த கருத்தியல்களுக்கான மூல ஆதாரங்கள் மதத்தில் இருந்துதான் பெறப்பட்டிருக்கின்றன. இத்தகைய அதிகாரத்துவத்தைப் பெயர்த்துப்போட்ட நிகழ்வுகள் கோப்பர்நிக்கஸ், கலிலியோ, நியூட்டனில் இருந்து காண்ட் அளவிலான தத்துவ விளக்கங்களாக வளர்ச்சியடைந்தது.

இதேபோன்றதொரு உறுதியான சமூக ஊட்டாட்டங்கள் இந்தியச் சமூகத்தில் நடைபெறவில்லையென்றாலும் காலம் கடந்துவிட்ட காலனியக்கால கல்வி வாய்ப்புகளிலும் காலனியத்தின் நிர்வாகம் மற்றும் தொழில் முறைகளினால் இந்தியாவில் சீர்த்திருத்த அமைப்புகளாக உருப்பெற்றன. காலனிய காலத்தில் உண்டான சமூகச் சீர்த்திருத்த அமைப்புகள் பெரும்பாலும் மதத்தைப் புதிய நெறிமுறைகளில் வளர்ப்பதாகத்தான் இருந்தனவேயன்றி விஞ்ஞானப் பார்வையைக் கொண்டதாக இல்லை. இப்படியிருந்த ஒரு சமூகத்தில்தான் அ.வெங்கடாசலனார் இந்து மதத்தின் சடங்குகள், மத நம்பிக்கைகள், ஒழுக்க விதிகளைக் கட்டவிழ்த்து தகர்க்கிறார்.

காலனியத்திற்கு முன்பிருந்த ஆட்சி முறைகள் இத்தகைய சிந்தனை முறைக்கு வழிவகுக்கவில்லை. காரணம் தமிழக நிலங்கள் பாளையங்களாகவும் ஜமீன்களாகவும் பல படித்தான போர்களையும் வரி அழுத்தங்களையும் கொண்டிருந்த சமூகப் பின்னணியில் இனம் சார்ந்த ஒற்றுமை எண்ணங்களைக் காலனிய ஆட்சியால்தான் விதைக்க முடிந்தது.

Continue Reading →

ஆய்வு: ஸ்ரீவில்லிப்புத்தூர் வட்டாரத்தில் நெடுங்கல் வழிபாடும் வழிபாட்டு மாற்றமும்

ஆய்வு: ஸ்ரீவில்லிப்புத்தூர் வட்டாரத்தில்  நெடுங்கல் வழிபாடும் வழிபாட்டு மாற்றமும்தமிழரின் பண்பாட்டு மரபாக இருந்து வருவது நடுகல் வழிபாடாகும். இவ்வழிபாடு இன்று ஆண், பெண்  இரண்டு தெய்வங்களுக்கும் நிகழ்த்தப்படுகிறது. ஆனால் தொடக்க காலத்தில் நடுகல் வழிபாடு போரில் உயிர் நீத்த வீரனுக்கும், ஆநிரை மீட்டலின் போது இறந்த வீரனுக்காகவும்  நடுகல் எழுப்பப் பட்டு வழிபடப்பட்டன. இம்மரபு பண்பாட்டில் தொடா்மரபாக இருப்பினும் அதன் தன்மை சிதையும் நிலையில் இருக்கிறது.    நடுகல், நெடுங்கல் என்று பொதுப் பெயா் கொண்டு அழைக்கப்பட்ட நெடுங்கல்கள் எல்லாம் மாற்றுப் பெயா்கள் (நட்டுக்கல் முனியாண்டி, கருப்பசாமி கல், முனிஸ்வரன் கல்) இட்டு அழைக்கப்பட்டு வருகின்றன. அந்நெடுங்கல்லுக்கான தள அதிகாரம் குறிப்பிட்ட ஒரு சமூகத்தைச் சோ்ந்தவா்களுக்கு முக்கியத்துவப் படுத்தப்படுகிறது. அதில் வழிபாடு நடத்தும் அதிகாரமும் அவா்களுக்கு உரித்தானதாகக் கொள்ளப்படுகிறது. இம்மரபு தொடா்மரபாக பண்பாட்டில் நிகழ்ந்து வந்தால் அதன் தொண்மை மறைக்கபடும். அதன் பெயா் மாற்றமும் மாற்றப்படும். அது குறித்து  களஆய்வு செய்து வெளியிடுவதே இக்கட்டுரையின் நோக்கமாகம்.

நெடுங்கல் நடும் மரபு
“பெருங்கற்காலப் பண்பாட்டின் தொடக்கம் காலம் கி.மு. ஆயிரம் ஆகும். இப்பண்பாடு தமிழகத்தில் வடக்கிலிருந்து தெற்காக முன்னேறிச்சென்றதாகும். அவ்வாறு செல்லச் செல்ல இதன் காலம் பின்னோக்கிச் சென்றன என்று தொல்லியல் அறிஞர் க. ராஜன் அவர்கள் கூறுகிறார்.”1 ஏனென்றால் வடக்கில் தகடூரிலிருந்து கொங்கு நாடு வரையிலுள்ள பகுதிகளில் தான் அதிகமான நடுகற்கள் கிடைத்துள்ளன. தெற்கு மதுரை, திருநெல்வேலி ஆகிய ஊா்களுக்கு இடம் பெயரும்போது அதிகமாக முதுமக்கள் தாழிகள் கிடைத்துள்ளன. இத்தன்மையைக் கொண்டு தென்பகுதிகளில் கிடைக்கும் நடுகல்கள் அனைத்தும் காலத்தால் பிந்தியவை எனக் கருதமுடிகிறது. பெரும்பான்மையான தொல்லியல் அறிஞகர்கள் இக்கருத்துக்களுக்கு உடன்படுகின்றனர்.

தமிழகத்தில் கிடைக்கின்ற பெருங்கற்கால சின்னங்களில் நெடுங்கல், நடுகல், கற்பதுக்கை ஆகிய அனைத்தும் தகடூர் பகுதியிலும், கொங்கு நாட்டில் கொடுமணல் பகுதிகளிலும் அதிகம் கிடைத்துள்ளன. தென்னாட்டில் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி, விருதுநகா் மாவட்டம் குன்னூர் போன்ற ஊர்களிலும் இந்நடுகல்கள் நெடுங்கல்லாகக் கிடைத்துள்ளன. இவ்விரு பகுதிகளும் குறிஞ்சி, முல்லை நிலத்தோடு தொடர்பு கொண்டுள்ள நிலமாகும். இந்நிலங்கள் கால்நடைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறது. சங்க காலத்தில் முல்ல நிலத்தில் ஏற்பட்ட ஆநிரை கவர்தல், கவா்ந்த பசுக்களை மீட்டல் இவைகளினால் இறப்பவர்க்கு நடுகல் நடுவதும், கற்பதுக்கை அமைப்பதும் பண்டைய மரபாக இருந்துள்ளன. இது குறித்து சங்க இலக்கியமும் தொல்காப்பியமும் திறம்படக் உறுதி படுத்துகின்றன.

“பெருங்கற்காலப் பண்பாட்டுச் சின்னங்கள் குறித்து அன்மையில் களஆய்வு மேற்கொண்ட தொல்லியல் ஆய்வாளர்கள் கொங்கு நாட்டில்  அதிகமான பெருங்கற்காலச் சின்னங்களும் அதன் அருகிலே நீண்ட நெடிய நெடுங்கல்லும் இருப்பதை கண்டறிந்தனர்.”2 நினைவுச் சின்னங்கள் அமைக்கும்போது அதன் அருகில் நீண்ட நெடிய நெடுங்கல் அடையாளமாக அமைக்கும் பழக்கத்தையும் பண்டையோர் மரபாகக் கொண்டுள்ளதுடன் அந்நெடுங்கல்லிற்கு நீர்ப்படையிட்டு படையல்கள் படைத்து வழிபட்டு வந்துள்ளனர். ஆகையால் வடபகுதியில் நெடுங்கல்லுக்குச் செய்துவந்த சடங்குகள் போன்று பாண்டிய நாட்டில் கிடைத்த நெடுங்கல்லிற்கும் இச்சடங்குகள் முறையாகச் செய்து வந்துள்ளனர். சிலப்பதிகாரத்தில் சேரன் செங்குட்டுவன் வடக்கில் இமய மலையிலிருந்து கண்ணகிக்கு கல்லெடுத்து கங்கையில் நீராட்டி சேரநாட்டில் கோவில் அமைத்து வழிபட்டு வந்தான் என்று சிலப்பதிகாரம் வாயிலாக அறியமுடிகிறது. ஆகையால் நடுகல் நட்டு வழிபடும் மரபு வடக்கிலிருந்தே தொடங்கப் பட்டவையாகும்.

Continue Reading →

தமிழ் சினிமாவும் இலக்கியமும் ரசனையும்! இலக்கியப்பிரதிகளை திரைப்படமாக்குவதில் எதிர்நோக்கப்படும் சவால்களும் சமரசங்களும்! ( அண்மையில் மறைந்த எழுத்தாளரும் திரைப்பட வசனகர்த்தாவும் இயக்குநருமான மகேந்திரன் நினைவாக எழுதப்படும் குறிப்புகள்)

எழுத்தாளர் முருகபூபதி -அனைவரிடமும்    ஏதோ   ஒரு  கதையோ   அல்லது   பல கதைகளோ இருக்கும்.     ஆனால்,  இவர்களில்   சிலர்தான்    அதனை   எழுத்தில்   தருகிறார்கள்.   மற்றவர்கள்    உரையாடலின் பொழுது சொல்கிறார்கள்.   உரையாடல்களில்   ஒருவர்  சொன்ன  கதை   கேட்கப்பட்ட மற்றும்   ஒருவரினால்  வேறு  ஒரு   இடத்துக்கு காவிச்செல்லப்படும் பொழுது   அதன்   வடிவம்   மாறிவிடும்.   கண்வைத்து  காது  வைத்து மெருகூட்டி   வதந்தியாகவே   அது   பரவிவிடும்.  கேட்கப்பட்ட  வதந்தியின் அடிப்படையிலும்   ஒரு   புதிய  கதை  உருவாகிவிடும். உதாரணத்துக்கு – அவுஸ்திரேலியாவில்   ஒரு   சம்பவம்   நடந்தால்   அதனை தொலைக்காட்சி   ஊடகங்களில்   பார்த்து –   வானொலிகளில்  கேட்டு – பத்திரிகைகளில்   படித்துவிட்டு  அச்சம்பவம்   பற்றி   எதுவுமே    தெரியாத வீட்டுக்கு   வந்த   உறவினரிடம்   அல்லது  நண்பரிடம் அதனைச்சொல்லும்பொழுது   பார்த்த – கேட்ட – வாசித்த   அச்சம்பவம்   வேறு ஒரு   வடிவத்தில்   ஒரு   கதையாகவே   பின்னப்பட்டு   சொல்லப்படுவது அன்றாட   நிகழ்ச்சி.

சினிமாவுக்கு   கதை   கிடைப்பதும்  இப்படித்தான்.   முன்னர்   இந்தியாவில் பல   திரைப்பட   தயாரிப்பாளர்கள்   தத்தமக்கென  ஒரு  கதை  இலாகாவே வைத்திருந்தார்கள்.  உதாரணமாக   மனிதர்களை – மிருகங்களை நாயகராக்கியதுடன்   மட்டும்   நின்றுவிடாது    தெய்வங்களின் அதிசயங்களையும்   தனது   படங்களில்   சொன்ன  சின்னப்பாதேவர் – சந்திரலேகா  –   அவ்வையார்  –   வஞ்சிக்கோட்டை   வாலிபன்      திரைப்படங்களை    எடுத்த   ஜெமினி   வாசன்  முதலானோர்   ஒரு கதை   இலாகாவை   வைத்திருந்தனர். ஆனால்,   சுஜாதா சினி    ஆர்ட்ஸ்   என்ற   தயாரிப்பு    நிறுவனத்தை வைத்திருந்த   நடிகர்   பாலாஜி   அவ்வாறெல்லாம்   கதை    இலாகா வைத்திராமல்    வடக்கே   சென்று     ஹிந்திப்படங்களைப் பார்த்துவிட்டு   வந்து,    அந்தப்படங்களின்   அடிப்படையில்    ஏ.எல். நாராயணன்    என்பவரிடம் கதை    சொல்லி   வசனம்   எழுதவைத்து  படம்   எடுத்துவிடுவார்.

தமிழ்    சினிமாவுக்கு  கதைகள்   கிடைத்த   வரலாறு    மிகவும் சுவாரசியமானது. சினிமா    இந்த    நூற்றாண்டில்   மட்டுமல்ல    அது    உருவான    நூற்றாண்டு முதலே   வலிமையான    ஊடகமாகத்தான்    வளர்ந்து    வந்திருக்கிறது. தொடக்க காலத்தில்   சினிமா    பேசவில்லை.   தமிழ்   சினிமா     என்னும்பொழுது  இந்தியாவைத்தான்  முன்னோடியாக  சுட்டிக்காட்டும் நிலையிலிருக்கின்றோம். இந்திய    மொழிகளில்    தமிழும்   ஒன்றென்பதனால்   இந்திய   சினிமா 1931 இல்   பேசத்தொடங்கியதனால்   நாம்   இந்தியாவைத்தவிர்த்து   தமிழ்   சினிமா பற்றி   பேச முடியாது. ஆரம்பத்தில்    சொன்னவாறு    ஒவ்வொரு    மனிதரிடத்திலும்    கதைகள் இருந்தன.    இருக்கின்றன.     இருக்கும். சிறுகதையிலும்   நாவலிலும்   சொல்லப்பட்ட    அவரவர்    கதைகள் நாடகமாகும்பொழுதும்    திரைப்படமாகும்  பொழுதும்   அதன்   வடிவம் மாறித்தான்  போய்விடுகிறது. வால்மீகி     ஒரு வேடன்.   மான்  –  மரை பறவைகளை     வேட்டையாடி    வாழ்ந்த   அவர்   ஒரு வழிப்பறித்திருடனாகவும்   வாழ்ந்திருக்கிறார். எப்பொழுதும்   ஒரு   மிருகத்தை   வேட்டையாடுவதற்காக    அதனைத்துரத்திக்கொண்டு   ஓடும்பொழுதும்     மரா   மரா   என்றுதான்   சத்தம்   எழுப்பிக்கொண்டு    ஓடுவாராம்.    மரா     என்றால்    கொல்.    கொலை செய்.    என்று    அர்த்தம்.  ஒருநாள்    வால்மீகி,      அந்தக் காட்டுவழியாக    மரா   மரா எனச்சொல்லிக்கொண்டு   ஓடியபொழுது    அவரை    குறுக்கிட்டு    மறித்த   ஒரு    முனிவர்   –  இங்கே    வா.    மரா     மரா     என்று     சொல்லிக்கொண்டு    ஒரு உயிரைக்கொல்ல      ஓடுகிறாயே,   தொடர்ந்து    மரா    மரா என்று சொல்   என்றாராம். வால்மீகியும்    மரா    மரா    மரா    மரா    என்றாராம்.    எங்கே சொல்லிப்பாருங்கள்.    ராம    ராம   ராம    என்று    அந்தத்தொனி    உங்களை அறியாமலேயே    மாறும். ராமனின்    கதையை   எழுதப்பா?   என்று   சொல்லி   ராமனின்   கதையை வால்மீகிக்குச்சொல்லி,    அவரது   வேட்டையாடும் –   கொள்ளையடிக்கும் பழக்கத்தையே    மாற்றினாராம்    அந்த   முனிவர். இராமாயணம்    எழுதினார் வால்மீகி.     அதற்கு    இலக்கியச்சுவை ஏற்றினார்     கம்பர்.    எமக்கு    கம்பராமாயணம்   கிடைத்தது.    காலப்போக்கில்   நாம்    இந்த   இலக்கிய    காவியத்திலிருந்து சம்பூர்ண ராமாயணம்    –    லவ   குசா   முதலான சினிமாக்களைப்பார்த்தோம்.    தற்காலத்தில்    இராமாயணம்    பல அங்கங்களில்   தொலைக்காட்சி   சீரியலாகவும்    வந்துள்ளது.     ஹிந்தியில் எடுக்கப்பட்டு   ஏனைய   இந்திய   மொழிகளில்   டப்பிங்    செய்யப்படுகிறது.   இதற்கு    நல்ல   வரவேற்பும்    இருக்கிறது.

Continue Reading →

யாழ் நகரத்துத் திரையரங்குகள் பற்றியதொரு நனவிடை தோய்தல்!

யாழ் ராணி திரையரங்குஅண்மையில் முகநூலில் என் பதின்ம வயது யாழ் நகரத்துத் திரையரஙகுகள் மற்றும் பார்த்த திரைப்படங்கள் பற்றிய நனவிடை தோய்தலைப் பதிவு செய்திருந்தேன். அக்காலகட்டத்தில் யாழ் நகரில் பல திரையரங்குகள் பல இருந்தாலும் (மனோஹரா, ராணி, ராஜா, றீகல்,, ஹரன், சாந்தி, ஶ்ரீதர், லிடோ (பழைய வின்சர்), வின்சர் , வெலிங்டன் & றியோ ), இவற்றில் என்னை அதிகம் பாதித்தவை பற்றிய பதிவுகளிவை. இவற்றையும், இவற்றுக்கான எதிர்வினைகளையும் பதிவு செய்வதன் அவசியம் கருதி அவை அனைத்தையும் தொகுத்து இங்கு தருகின்றேன்.

1. யாழ் நகரத்துத் திரையரங்குகள் அன்று – ராணி

முகநூலில் Shan Naranderan ராணி (யாழ்ப்பாணம்) திரையரங்கின் புகைப்படமொன்றினைப் பகிர்ந்துகொண்டிருந்தார். அதனை இங்கு மீண்டும் நன்றியுடன் பகிர்ந்துகொள்கின்றேன். இன்று ராணி திரையரங்கு இருந்த இடத்தில் ‘சீமாட்டி’ வர்த்தக நிலையமுள்ளது. ஆனால் அன்று எம் பதின்ம வயதுகளில் அவ்வாழ்வுக்குரிய பொழுதுபோக்குகளில் முக்கிய இடத்தை வகித்த திரையரங்குகளிலொன்றாக விளங்கிய திரையரங்கு ராணி. முதன் முதலில் ராணி திரையரங்கைப் பார்த்த தருணங்கள் நினைவுக்கு வருகின்றன. வவுனியாவிலிருந்து யாழ்ப்பாணம் இ.போ.சபையின் பஸ்ஸில் வந்து , யாழ் பஸ் நிலையத்தில் இறங்கியபொழுது கண் முன்னால் விரிந்தது ராணி திரையரங்கின் முன் அமைக்கப்பட்டிருந்த அடிமைப்பெண் எம்ஜிஆரின் பிரமாண்டமான , ஓவியர் மணியத்தின் ‘கட் அவுட்’ இடுப்பில் கைகளை வைத்து, மணிமுடியுனிருந்த அந்த எம்ஜிஆரின் கட்அவுட் இன்னும் கண் முன்னால் விரிகின்றது. இன்னுமொரு முறை அவ்விதம் வந்து யாழ் பஸ் நிலையத்தில் இறங்கியபொழுது ‘மாட்டுக்கார வேலன்’ திரைப்படத்திலிடம் பெறும் ‘ஒரு பக்கம் பார்க்குறா’ பாடலுக்கான காட்சியை வெளிப்படுத்தும் இரு எம்ஜிஆர்களின் உயர்ந்த உருவங்களை உள்ளடக்கிய இரு ‘கட் அவுட்’டுகள். இவ்விதமாக ராணி திரையரங்குடன் ஆரம்பமாகியதென் உறவு.

யாழ் ராணியில் பார்த்த , நினைவில் நிற்கும் திரைப்படங்கள்: ‘அடிமைப்பெண்’, ‘மாட்டுக்காரவேலன்’, ‘ராஜா, பட்டிக்காடா பட்டணமா’, ‘சவாலே சமாளி’, ‘பணமா பாசமா’, ‘அன்புச் சகோதரர்கள்’, ‘ராமன் எத்தனை ராமனடி’, ‘என் தம்பி’, ‘இருவர் உள்ளம்’ (மீள் வெளியீடு), வி.பி.கணேசனின் ‘நான் உங்கள் தோழன்’ , ‘புதிய காற்று’, ‘நாளை நமதே’, ‘வாடைக்காற்று’ , ‘பட்டணத்தில் பூதம்’& ‘நீதி’

இன்னுமொரு விடயத்துக்காகவும் யாழ் ராணி நினைவிலுள்ளது. 1974 தமிழாராய்ச்சி மாநாட்டில் பொலிஸார் சுட்டுக் கலவரமாகிய சூழலில் தப்பி ஓடிக்கொண்டிருந்த மக்களைத் தன் திரையரங்கில் தங்க வைத்த மனிதாபிமானச் செயல் அது. அதன் மூலமும் ‘ராணி’ திரையரங்கு நெஞ்சில் பதிந்து விட்டது. இன்று திரையரங்கே இல்லாத நிலையில் இது போன்ற புகைப்படங்கள் அரியவை. சேகரித்துச் சேமிக்கப்பட வேண்டியவை. இவை ஒரு காலகட்ட வரலாற்றுச் சின்னங்கள்

Continue Reading →

மா.அரங்கநாதன் இலக்கிய விருது – 2019! 16.4.2019 அன்று சென்னையில் நடந்த விழா குறித்து சில எண்ணப்பதிவுகள்!

மா.அரங்கநாதன் இலக்கிய விருது – 2019! 16.4.2019 அன்று சென்னையில் நடந்த விழா குறித்து சில எண்ணப்பதிவுகள்!

கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது _ மேடையெங்கும் படைப்பாளிகளே பிரதானமாக வீற்றிருந்தது!

நிகழ்வு: எழுத்தாளர் மா.அரங்கநாதன் இலக்கிய விருது வழங்கும் நிகழ்வு. இன்று எழுத்தாளர் மா.அரங்கநாதன் மறைந்த நாள். இன்று சென்னை ராணி சீதை ஹாலில் நடைபெற்ற இந்த நிகழ்வில் சிறப்புப் பேச்சாளர்கள் எழுத்தாளர்கள் தமிழவன், அம்ஷன் குமார், கோபாலகிருஷ்ணன், ரவி சுப்பிரமணியன், கவிஞரும் மொழிபெயர்ப்பாளரு மான எஸ்.சண்முகம், விருது பெறும் படைப்பாளிகளான கவிஞர் யூமா வாசுகி, எழுத்தாளரும் – நாடகவியலாளருமான வெளி ரங்கராஜன், என விழா நாயகர்களாக படைப்பாளிகள் மட்டுமே மேடையில் வீற்றிருந்ததும். அமரர் மா.அரங்கநாதன் குறித்துப் பேசியதும், விருதுபெற்றவர்கள் குறித்து உரையாற்றி யதும் இந்த இலக்கியக்கூட்டத்தின் தரத்தை பன்மடங்கு உயர்த்தியது என்றால் மிகையாகாது!

விழா நிகழ்வுகளை, சிறப்பு விருந்தினர்கள், பேச்சாளர்களை எழுத்தாளர் அகரமுதல்வன் நேர்த்தியாக அறிமுகம் செய்தார்.

மேலும், இந்தப் படைப்பாளிகள் அனைவருமே தமிழின் நவீன இலக்கிய வெளியோடும், சிறுபத்திரிகை வெளிக்கும் மிகவும் பரிச்சயமானவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

சமீபகாலமாக இத்தகைய இலக்கிய மேடைகள் பலவற்றில் தமிழ் இலக்கியத்தின் போக்குகளை அறவே அறியாத திரைப்படத்துறையினர், அரசியல்வாதிகள், சமூகத்தில் அந்தஸ்து வாய்ந்தவர்கள் என்று வந்து சம்பந்தமேயில்லாமல் எதையாவது பேசுவதும், தங்கள் பேச்சில் தங்களையே முனைப்பாக முன்னிறுத்திக்கொள்வதும், அல்லது தங்கள் தானைத்தலைவர் களிடமிருந்துதான் தமிழே தோன்றியது என்றவிதமாய் எதையாவது சொல்லிவைப்பதும் அடிக்கடி நிகழ்கிறது.

இலக்கியமேடையிலும் தங்கள் பதவி, பணத்தால் தங்களை முன்னிறுத்தி, கௌரவிக்கப்படும் படைப்பாளிகளைப் பின்னுக்குத் தள்ளும் போக்கைப் பார்த்து எத்தனையோ நாட்கள் வருத்தப்பட்டதுண்டு.

முன்பொரு முறை தமிழக – மலேசிய கவிஞர்கள் சந்திப்பு ஒன்றை நான் பொறுப்பேற்று நடத்தினேன். சமகால கவிதைவெளியில் இயங்கிவரும் பல தமிழ்க்கவிஞர்கள் இடம்பெற்ற அந்த நிகழ்வின் துவக்கவிழாவில் கலந்துகொண்ட ஐ.ஏ.எஸ் அதிகாரி ஒருவர், ‘புரியாக்கவிதைதான் எழுதுகிறார்கள் என்று சாட ஆரம்பித்து வைரமுத்துபோல் எழுதவேண்டும் என்று முடித்தார். நான் உள்ளுக்குள் உறுமிக்கொண்டிருப்பதைக் கண்ட விழா ஏற்பாட்டாளர் நிகழ்வில் என்னைப் பேசவிடாமலே நிகழ்ச்சியை முடித்துவிட வேண்டும் என்பதில் கவனமாக இருந்தார். நான் அந்தச் சதியை முறியடித்து வெற்றிகரமாய் மேடையேறி ‘கவிதை புரியவில்லை’ என்று சொல்வதிலுள்ள அபத்தத்தைப் புட்டுப்புட்டுவைத்துவிட்டுத் திரும்பிப்பார்த்தால் பிரதம விருந்தினரான அந்த ஐ.ஏ.ஏஸ்க்காரரைக் காணவில்லை. அவர் தன் பேச்சை முடித்துவிட்டு எப்போதோ வீட்டுக்குப் போயிருந்தார்!

Continue Reading →