வாசிப்பும், யோசிப்பும் 339: கு.ப.ரா.வின் வசன கவிதை பற்றிய கூற்று பற்றி….

கு.ப.ராஜகோபாலன்எழுத்தாளர் ஜவாத் மரைக்கார் அவர்கள் தனது முகநூற் பதிவாக எழுத்தாளர் கு.ப.ரா.வின் கீழ்வரும் கூற்றொன்றினைப் பதிவு செய்திருந்தார். :

” வசன கவிதை என்பதற்கும் உருவமுண்டு. அதற்கும் அணி அலங்காரம் உண்டு. அதற்கும் தளையுண்டு. மோனையுண்டு. எல்லாவற்றிற்கும் மேலாக அதற்கும் ரிதம் உண்டு. செய்யுள் எழுதுவதைக்காட்டிலும் வசன கவிதை எழுதி வெற்றி பெறுவது சிரமம். செய்யுளில் எப்பேர்ப்பட்ட வெறும் வார்த்தைகளும் ஒரு இசை இன்பத்தை ஊட்டிவிடும். ஆனால் வசன கவிதையில் கருத்தின் வேகமும் உணர்ச்சியும் சொல்லில் தட்டினால்தான் கொஞ்சமாவது கவர்ச்சி கொடுக்கும். சொல்லில் கவிதையின் அம்சம் இல்லாவிட்டால் அது வசன கவிதையாகாது – வெறும் வசனம்தான் ” ( கு.ப. ராஜகோபாலன் – 1939 இல் )

மேற்படி கூற்றுக்கான என் எதிர்வினை:

இது கு.ப.ராஜகோபாலன் அவர்கள் மரபுக்கவிதையின் ஆதிக்கமிருந்த காலகட்டத்தில் , மரபுக்கவிதையைச் சிறிது எளிமைப்படுத்தி பாரதியார் மரபுக்கவிதைகளையும், வசன கவிதைகளையும் எழுதியதன் பின்னர் மணிக்கொடி எழுத்தாளர்கள் மரபை மீறிக்கவிதைகள் படைக்க முற்பட்ட காலகட்டத்தில் கூறிய அல்லது எழுதிய கூற்று. இதனை இன்று ஏற்க வேண்டியதில்லை. கு.ப.ரா போன்றவர்களால் மரபை முற்றாக மீற முடியாமலிருந்ததால் தான் இவ்விதம் கூற முடிவதாகவே கருதுகின்றேன். கவிதை என்றால் மரபுக்கவிதைதான். அதனால் வசன கவிதைகளிலும் மரபுக்கவிதையின் அம்சங்கள் இருக்க வேண்டுமென்று அவர் கருதினாரென்று கருதுகின்றேன். மரபுக்கவிதையின் அம்சங்களைப்போல்  வசனகவிதைகளும் மோனை, தளை போன்ற கட்டுப்பாடுகளை உள்ளடக்கியவை என்னும் கருத்தில்தான் கு.ப.ரா இங்கு கூறியுள்ளார்.  கட்டுப்பாடுகள் அல்லது விதிகளுடன் கூடிய மரபுக்கவிதைகளுக்குரிய அம்சங்களை முன்வைத்து , மரபை மீறி உருவான கவிதையொன்றினை ஆராய்வது சரியானதல்ல என்பதென் கருத்து.  இங்கு அவர் வசனகவிதைக்குரிய தளை, மோனை, அணி அலங்காரம் எவ்விதமிருக்க வேண்டும் என்று தெளிவாக விபரிக்காவிட்டாலும், மரபுக்கவிதைக்குரிய அம்சங்களான அவற்றின் அடிப்படையில் அவர் வசனகவிதையை ஆராய்வது சரியல்ல என்பதே என் கருத்து.  ஆனால் வசன கவிதையிலோ , புதுக்கவிதையிலோ அல்லது இன்றுள்ள கவிதையிலோ மரபுக்கவிதைக்குரிய அம்சங்கள் இருக்கலாம்; இல்லாமலிருக்கலாம். இருப்பதால் மட்டும் அவை கவிதைகளாவதில்லை. இல்லாமலிருப்பதால் மட்டும் அவை கவிதைகளில்லை என்பதுமில்லை. இன்று கவிதை மரபினை மீறி முற்றாக இன்னொரு தளத்தில் பயணிக்கின்றது. கவிதையென்பது உணர்வின் வெளிப்பாடு . அதனடிப்படையில் மட்டுமே மரபுக்கவிதையோ அல்லது ஏனைய கவிதை வடிவங்களோ நோக்கப்பட வேண்டுமென்று கருதுகின்றேன். அவ்விதம் கவிதையொன்றினை ஆராய்கையில் அதில் மரபுக்கவிதையின் கூறுகள் உள்ளனவா , இல்லையா என்று ஆராயலாமே தவிர அவை இருந்தால் மட்டுமே அது கவிதையா அல்லது இல்லையா என்று தீர்மானிக்க முடியாது. அவ்விதம் ஆராய்கையில் அதில் பாவிக்கப்பட்டுள்ள மொழி, பொருள் போன்ற ஏனைய பல விடயங்களும் கவனத்திலெடுக்கப்பட வேண்டும்.

Continue Reading →

வாசிப்பும்,யோசிப்பும் 338 : இலங்கைத் தமிழ் இலக்கியமும் , ‘இன்ஸான்’ பத்திரிகையும்.

1965-1970 காலப் பகுதியில் ' இன்ஸான்'( மனிதன்) என்ற வாராந்தரி பத்திரிகை ஏ.ஏ.லத்தீஃபை ஆசிரியராக கொண்டு வெளியாகியது. முஸ்லிம் வாழ்வியலை,சமூகப் பார்வையுடன் இலக்கியமாக்கும் வாய்ப்பை வழங்கி வழிகாட்டியது. எழுத்தாளர் திக்குவல்லை கமால் அவர்கள் ‘இன்ஸான்’ பத்திரிகை பற்றிப்பின்வருமாறு பதிவு செய்திருந்தார்:

“1965-1970 காலப் பகுதியில் ‘ இன்ஸான்'( மனிதன்) என்ற வாராந்தரி பத்திரிகை ஏ.ஏ.லத்தீஃபை ஆசிரியராக கொண்டு வெளியாகியது. முஸ்லிம் வாழ்வியலை,சமூகப் பார்வையுடன் இலக்கியமாக்கும் வாய்ப்பை வழங்கி வழிகாட்டியது. இதனூடாக வெளிப்பட்ட சிறுகதையாளர்களில குறிப்பிடத்தக்க ஒருவர் எம்.பி.எம. நிஸ்வான். ஐம்பது ஆண்டுகள் கழிந்தும் ஒரு பத்தோ இருபதோ இன்ஸான் கதைகளை தொகுத்து வெளியிடும் முயற்சி கைகூடவில்லை.இன்ஸானோடு சம்பந்தப்பட்ட ஒருசிலரே இன்று எம்மத்தியில் உள்ளனர்.அவர்கள் சந்திக்கும்போது பேசிக் கலைவதைத்தவிர வேறொன்றும் ஆகவில்லை. முஸ்லிம்களின் இலக்கியம் என்பது அனாதை இலக்கியமே என்பதற்கு இதைத்தவிர வேறென்ன அத்தாட்சி வேண்டும்? பாணந்துறை எம்.பி.எம்.நிஸ்வானின் இரு நூல்களின் வெளியீடு கடந்த 07.04.2018ல் உம்முல் மலீஹா மண்டபத்தில் நடைபெற்றபோது கருத்துரை வழங்குகையில் மேற்படி விடயங்களை எடுத்துக் கூறினேன்.”

எழுத்தாளர் அந்தனி ஜீவா ‘தினகரன்’ (இலங்கை) பத்திரிகையில் எழுத்தாளர்ர் அ.ந.கந்தசாமி பற்றி எழுதிய ‘சாகாத இலக்கியத்தின் சரித்திர நாயகன்’ கட்டுரைத்தொடரில் பின்வருமாறு கூறுவார்:

” அ.ந.க. அறிஞர் பெர்னாட்ஷா முதல் பேரறிஞர் பெட்ரண்ட் ரஸ்ஸல் வரை அறிந்து வைத்திருந்தார். பெட்ரண்ட் ரஸ்ஸலின் ‘யூத அராபிய உறவுகள்’ என்ற கட்டுரைத் தொடர் ஒன்றை ‘இன்ஸான்’ வார இதழில் தொடர்ந்து எழுதினார். “

கலாபூஷணம் மாத்தளை பெ.வடிவேலன் செப்டம்பர் 30, 2012 தினகரன் (இலங்கை) பத்திரிகையில் எழுதிய எழுத்தாளர் ஏ. ஏ. லத்தீப் பற்றிய ‘நக்கிள்ஸ் மலைகளின் மடிதனிலே…’ கட்டுரைத்தொடரில் பின்வருமாறு கூறுவார்:

“1965-1968 காலப்பகுதியில் இன்ஸான்” எழுப்பிய அலை ஓசையை மறக்க முடியாது. முஸ்லிம்களின் வரலாறு கலை இலக்கியம் சமூகவியல் போன்றவற்றில் இன்ஸான் ஆற்றிய பணி கால ஓட்டத்தில் கரைந்துவிட முடியாத ஒன்று “இலங்கை முஸ்லிம்களின் பேச்சு வழக்கான சோனகத் தமிழ் அழகை வீச்சாகக்கொண்டு அரசியல் விழிப்புணர்ச்சியை ஏற்படுத்திய பத்திரிகை அது”

ஏ. ஏ. லத்தீப் அவர்களே ‘இன்ஸான்’ பத்திரிகையையும் நடாத்தியதை மேற்படி கட்டுரையிலுள்ள “நானும் இலக்கிய ஆர்வலர் ஜனாப் நkர் ரியாலும் இன்ஸான் லத்தீஃபை பற்றி பலமணிநேரம் கலந்துரையாடினோம்” என்னும் கூற்று வெளிப்படுத்துக்கின்றது. மேற்படி கட்டுரை எழுத்தாளர் ஏ. ஏ. லத்தீப் பற்றிப் பின்வருமாறு கூறுவது அவரது கலை, இலக்கியப்பங்களிப்பைச் சிறப்பாக எடுத்துரைக்கின்றது:

Continue Reading →

(முகநூற் குறிப்புகள்) நூல் அறிமுகம் – புத்தக வரிசை தி ஜானகிராமனின் ‘செம்பருத்தி’

– முகநூலில் வெளியாகும் கலை, இலக்கிய முக்கியத்துவம் வாய்ந்த பதிவுகள் இப்பகுதியில் பிரசுரமாகும். இவ்விதமான பதிவுகள் முகநூலில் கலை, இலக்கிய முக்கியத்துவத்தை வெளிப்படுத்துவன. – பதிவுகள்.காம் –


அண்மையில் தி ஜானகிராமனின் ‘செம்பருத்தி’யை பலகாலம் கழித்து மீண்டும் வாசித்தேன். சாவி ஆசிரியராய் இருந்த தினமணிக் கதிரில் 1968ல் தொடராக வந்த புதினம் ‘செம்பருத்தி’.

தமிழ் இலக்கிய முன்னோடிகளில் ஒரு அசைக்கமுடியாத இடம் தி.ஜானகிராமனுடையது. தஞ்சை மண்ணின் மணம்கமழும் எழுத்து. காட்சி சித்தரிப்புகளிலும், உணர்வுகளைத் துல்லியமாக எழுத்தாக்கும் நுண்மையிலும் அவருக்கு இணை அவரே தான். அவருடைய பத்து நாவல்களில் மிகவும் அதிகம் விமரிசிக்கப்பட்டவை அம்மா வந்தாள், மோகமுள், மற்றும் மரப்பசு ஆகிய மூன்றும் எனில், அதிகம் கவனம் பெறாத நாவல் அவருடைய ‘செம்பருத்தி’ என சொல்லலாம்.

நிகழ்வுகளைக் கட்டமைக்கும் நேர்த்தி, சரளமான நடை, கதைசொல்லலை உரையாடல்களாலேயே நகர்த்திக் கொண்டுபோகும் லாவகம், சொல்லாமல் போனவற்றை ஓரிரு சொற்களில் பூடகமாய் இட்டுநிரப்பும் ஜாலம்….இவை தி ஜாவின் தனிமுத்திரை.

கண்களைக் கட்டிக்கொண்டு கம்பிமேல் நடக்கும் கழைக்கூத்தாடி நமக்குள் எழுப்பும் பரபரப்பையும் பரிவையும், அவருடைய முக்கிய வார்ப்புகள் எழுப்புவதை அந்தப் படைப்புகலைஞனின் வெற்றி எனத்தான் கொள்ள வேண்டும். ஆண்பெண் உறவுகளில் உள்ள சிக்கல்களை, மனிதமனம் காமம் சார்ந்து கொள்ளும் கோணல்களை, கட்டுமீறும் வேட்கைகளை, வெறும் நினைவுகளாகவே மட்டும் முயங்கும் ஆசைகளை தி ஜா போன்று சித்தரித்தவர்கள் இல்லை. அந்த விவரிப்பு, ஒரு நூல் பிசகினாலும் ஆபாசமாய் அனர்த்தப் படக்கூடிய கட்டங்களை, அந்த எல்லையின் இழையிலேயே தடுமாற்றமின்றி கொண்டுசெல்லும் நுட்பம்……எவ்வளவு பெரிய படைப்பாளி தி ஜா?!

ஒரு சாதாரண கதையோட்டத்தை தன் புனைவின் மந்திரத்தூரிகையால் பெரும்சித்திரமாய்த் தீட்டியிருக்கிறார் தி ஜா.

தி ஜா வின் படைப்புகளில், செம்பருத்தியில்தான் பெண்களின் சித்தரிப்பு ஏதோ ஒருவகையில் துர்க்குணமே சற்று தூக்கலாக காட்டியிருப்பதாய்ப் படுகிறது.

கதையின் ஓட்டத்தினூடே ஏதோ வரியில், ஒரு உரையாடல் துணுக்கில் கதையின் ஒரு முக்கிய முடிச்சை பொதித்து வைக்கும் தி ஜாவின் கதைகூறல் மிக நளினமானது. நாவலை படிப்பவர்கள், தன் வாசகத்தன்மையின் மேன்மையை தானே உணர்ந்துகொள்ள, அவர் வைக்கும் வசீகரமான ‘மின்னல்வேக வினாவிடை பரிட்சை’யோ இது என்று தோன்றுகிறது.

தி ஜா வைப் படிக்கப் போகிறோம் என்ற எண்ணம் வந்தவுடன் மனசு பரபரவென்று தன்னை அலம்பிவிட்டுக் கொண்டு தெளிந்து போவதும், படிக்கத் தொடங்கியவுடனே புத்தி தன்னை கூர்படுத்திக் கொள்வதும், வாசிப்பின் போது, இரண்டாம் பக்கத்திலேயே சூட்சும சரீரம்தாங்கி, ஜீவரசம் ததும்பும் கதை மாந்தரோடு தாமும் ஒரு பாத்திரமாய் மாறிப்போவதும் தி ஜா வின் ரசனைக்கார வாசகர்களின் சுபாவம். கேள்விகள் எழும்பாத மோனத்திளைப்பு. கேள்வியெல்லாம் எழுவது சில மீள்வாசிப்புகளுக்குப் பிறகுதான். அந்தக் கேள்விகளுக்கெல்லாம் நம் மனசே சொல்லும் ஒரே ஒரு பதிலும் ஒன்றுண்டு.

Continue Reading →

இலங்கைத்தமிழ் இலக்கியமும், விமர்சனமும் அ.ந.கந்தசாமியின் பங்களிப்பும், மு.பொன்னம்பலத்தின் இருட்டடிப்பும்!

அ.ந..க.இலங்கைத்தமிழ் இலக்கியத்தில் எழுத்தாளர் அ.ந.கந்தசாமி அவர்களின் பங்களிப்பு முக்கியமானது. முற்போக்கு இலக்கியத்தின் முன்னோடி எனக்கருதப்படும் இவர், புலமை காரணமாக அறிஞர் அ.ந.கந்தசாமி என்று அழைக்கப்பட்ட இவர் சிறுகதை, கவிதை,  நாடகம், விமர்சனம் மற்றும் மொழிபெயர்ப்பு என இலக்கியத்தின் பல்வேறு பிரிவுகளிலும் தனது குறுகிய கால வாழ்வினில் காத்திரமான பங்களிப்பினை நல்கியவர். அவ்வப்போது இலங்கைத்தமிழ்  இலக்கியம் பற்றி எழுதும் சிலர் அத்துறையில் போதிய புலமையற்றோ அல்லது திட்டமிட்டோ இவரது பங்களிப்பினை மறைத்துவிடுகின்றனர்.

அ.ந.க.வின் இலங்கைத்தமிழ் இலக்கியத்தில் விமர்சனத்துக்கான (அல்லது திறனாய்வுக்கான) பங்களிப்பு முக்கியத்துவம் வாய்ந்தது. அ.ந..க.வின் புலமை காரணமாகவே பேராசிரியர் க.கைலாசபதி அவர்கள் தனது ‘ஒப்பியல் இலக்கியம்’ நூலினை அ.ந.க.வுக்குச் சமர்ப்பணம் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது. இலங்கைத்தமிழ் இலக்கியத்தில் திறனாய்வுத்துறைக்குப் பெரும்பங்களிப்பு செய்தவர் பேராசிரியர் கைலாசபதி. அவர் ஒருவருக்குத் தன் நூலினைச் சமர்ப்பணம் செய்திருக்கின்றார் என்றால் அதனைச் சாதாரணமாக எடுத்துவிட முடியாது. அச்சமர்ப்பணத்தில் அவர் இவ்விதம் கூறுவார்:

“  பல்லாண்டுகளாக எனது இலக்கிய முயற்சிகளை நேர்மையுடன் விமர்சித்து ஊக்கங்கொடுத்து வருபவரும், இன்றைய  ஈழத்து  எழுத்தாளர்களின் முன்னோடிகளில் ஒருவரும், பிறமொழி யிலக்கியங்களைக் கற்றுமகிழ்ந்து அவற்றைத் தழுவியும் மொழிபெயர்த்தும்  தமிழுக்கு அணி செய்தவரும் ,பலதுறை வல்லுனருமான காலஞ்சென்ற அ.ந. கந்தசாமி அவர்களது நினைவுக்கு இந்நூலைச் சமர்ப்பிக்கிறேன்”  இக்கூற்றிலுள்ள “பல்லாண்டுகளாக எனது இலக்கிய முயற்சிகளை நேர்மையுடன் விமர்சித்து ஊக்கங்கொடுத்து வருபவரும்”  என்று பேராசிரியர் கைலாசபதி அவர்கள் கூறுவதொன்றே போதும் அ.ந.க.வின் திறனாய்வுப்புலமையினை எடுத்தியம்புதற்கு.

தினகரன் (இலங்கை) பத்திரிகையில் ‘சாகாத இலக்கியத்தின் சரித்திர நாயகன்’ என்னும் அ.ந.க பற்றிய கட்டுரைத்தொடரினை எழுதிய எழுத்தாளர் அந்தனி ஜீவா அவர்கள் அ.ந.க.வின் விமர்சனப்பங்களிப்பினைக் குறிப்பிடுகையில் பினவ்ருமாறு குறிப்பிடுவார்:

Continue Reading →

சிறுகதை: ‘டார்லிங்’

ராஜேஸ்வரி பாலசுப்ரமணியம்லண்டன் 2019-

அது ஒரு அழகான காலைநேரம். லண்டனில் வசந்தகாலம் முடிந்து விட்டது.சாடையான இளம் குளிர்காற்றின் தழுவலில் தோட்டத்து செடி கொடிகள் இணைந்து சிலிர்த்துக் கொண்டிருந்தன.பழுத்துக் கொண்டிருக்கும் தக்காளிகள் காலைச்சூரியனின் இளம் சூட்டில் பளபளத்தன. வேலியில் படர்ந்து பூத்துக் கிடந்த சிறுமல்லிகையின் மணம் மனத்திற்கு இதமளித்தது. வசந்த காலம் முடியப்போகிறது. தோட்டத்தில் போட்டிருந்த மரக்கறிவகைகள் தங்கள் சேவையைமுடித்த திருப்தியுடன் கொஞ்சம் கொஞ்சமாக வாடத் தொடங்கி விட்டன. ஒரு சில மாதங்களுக்கு முன் விதைத்த சிறு பயிர்கள் முளைத்து வளர்ந்து அதைச் செய்தவளுக்குப் பல விதமான பரிசுகளைக் காய்களென்றும் பழங்களென்றும் கொடுத்துவிட்டு கால மாற்றத்தில் தளர்ந்து,முதிர்ந்து தங்கள் வாழ்க்யை முடித்துக் கொண்டிருக்கின்றன.

‘நானும் அப்படியா? இந்த செடி கொடிகள் தங்களை இந்தப் பூமியில் விதைக்கச் சொல்லி யாரையும் கேட்கவில்லை, எனது திருப்திக்கு எனது தேவைக்கு விதைத்தேன், பாதுகாத்தேன், இன்று அந்த விதையின் பல பரிமாணங்களை ஒரு பாதுகாவலன் மாதிரிப் பார்த்தக் கொண்டிருக்கிறேன்’ வாடித் தளர்ந்து கொண்டிருக்கும் திராட்சையிலைகளைத் தடவியபடி யோசித்துக் கொண்ட போது அவள் மனம் சட்டென்று அவளைப் பற்றிக் கேள்வி கேட்டது.

‘வாழ்க்கை என்ற வெற்றுக் கானல் நீரோட்;டத்தில் நானும் இப்படித்தானா? என்னைப் போன்ற பல பெண்களும் இப்படித்தானா, சுயமாக எதுவும் செய்ய முடியாத வெற்றுவிதைத் தொடர்களா,கானல் நீரோட்டத்தில் வெறும் பிம்பங்களா? ஞானேஸ்வரி தன்னைத்தானே கேட்டுக் கொண்டிருந்தபோது, வீட்டுக்குள்ளிருந்து அவள் கணவரின் குரல் சத்தமாக அவளையழைத்தது.

‘ஞானேஸ்வரி. யாரோ கதவைத் தட்டுகினம்’. அவர் மிகவும் சத்தமாக அவளையழைக்கிறார்.

அவளின் கணவருக்குப் பல வருத்தங்கள். பெரிதாக நடந்து திரிய முடியாது. அவள் ஒரு இயந்திரம்.அவர் அழைத்த குரலுக்கு அசைந்து திரியும் ஒரு நடமாடும் மனித இயந்திரம்.

அவள் தோட்டத்திலிருந்து வீட்டுக்குச் சென்று கதவைத் திறந்தாள்.

ஞானேஸ்வரி தனக்கு முன்னால் நிமிர்ந்து நின்றிருந்த ஆங்கிலேயப் பெண்மணியை ஏற இறங்கப் பார்த்தாள். அன்று திங்கட் கிழமை.வெளியில் பாடசாலை போகும் குழந்தைகள், வேலைக்குப்போகும் மாந்தர்கள் என்று தெருவில் பல சந்தடிகள். வந்து நின்ற ஆங்கிலேயப் பெண்மணி,’ ஹலோ எனது பெயர் மேரி டானியல், உள்ளூராட்சியின் முதியோர் நலவிடயங்களைச் சார்ந்த விசாரணைப் பிரிவிலிருந்து வருகிறேன். நீங்கள் திருமதி அருளம்பலம் ஞானேஸ்வரிதானே?’.

அவள் ஒரு அழகிய பெண். குரலும் மிகவும் இனிமையாகவும் கனிவாகவுமிருந்தது. முதியோர்களின் பராமரிப்புக்கென்றே பிறந்த அன்பான முகத்தில் ஒரு அழகிய சிறு புன்முறுவல் தவழ்ந்துகொண்டிருந்தது.

Continue Reading →

திருப்பூர் தாய்த்தமிழ்ப்பள்ளி இருபதாம் ஆண்டு மலர்

- சுப்ரபாரதிமணியன் -கல்வியாளர்கள் ச.சீ. இராஜகோபால், வசந்தி தேவி, , விஜய் அசோகன் (சுவீடன்), மருத்துவர் முத்துச்சாமி, சுப்ரபாரதிமணீயன், வெ.குமணன், சு,மூர்த்தி, உட்பட பலரின் கல்வி சார்ந்த கட்டுரைகள், குழந்தைகளின் படைப்புகளுக்கானத் தனிப்பகுதி என சிறப்பம்சங்கள் கொண்ட மலர் இது .

இந்த மலரின் குறிப்பிடத்தக்க அம்சம் பல கல்வியாளர்கள் எழுதிய சிறப்புககட்டுரைகள்.  தமிழ் கல்வி பற்றியும் தமிழ் கல்வியின் இன்றைய நிலை எழுப்பும் கேள்விகள் பற்றியும் அந்தக் கட்டுரைகள் பேசுகின்றன என்பது தான் முக்கியம். அந்த வகையில் திருப்பூர் பாண்டியன் நகர் தாய்த்தமிழ்ப் பள்ளியின் தாளாளரும் மருத்துவருமான சு. முத்துசாமி அவர்களின் முதல் கட்டுரை கவனத்திற்குரியது. மருத்துவர் ஆக இருப்பதால் பலதரப்பட்ட மக்களிடமும் பேசும் வாய்ப்பு அமைந்தது. மக்கள் தங்கள் சக்திக்கு மீறி இரவு பகலாக உழைத்து தங்கள் குழந்தைகளை ஆங்கில வழிக் கல்வியில் படிக்க வைக்கும் சூழல் இருப்பதையும் ஆனால் அதில் கல்வி தரம் இல்லை என்றும் அறிந்து கொண்டேன் என்கிறார். தமிழ் வழியில் படித்த கல்வியும் தமிழ் பற்றும் ஆர்வமும் ஏன் தமிழ் வழியில் கற்பிக்கும் ஒரு பள்ளியை ஆரம்பிக்க கூடாது என்ற எண்ணத்தை அவரிடம் தோற்றுவித்திருக்கிறது. இருபது ஆண்டுகளுக்கு முன்னால் அந்த சமயத்தில் தமிழ்நாடு முழுக்க வெவ்வேறு ஊர்களில் அந்தந்த ஊர்களில் உள்ள  தமிழ் ஆர்வலர்களின் முயற்சியால் சுமார் 50 தாய்த்தமிழ்ப்  பள்ளிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. ஆனால் இன்றைய நிலையில் அதில் பாதிக்கு மேலான பள்ளிகள் மூடப்பட்டுவிட்டன. பொருளாதார சிக்கல்களும் பள்ளிக் கல்வித்துறை சார்ந்த அழுத்தங்களும் காரணம். அந்த அனுபவங்களை மருத்துவர் முத்துசாமி கட்டுரையில் வெளிப்படுத்தியிருக்கிறார். இன்றைக்கு திருப்பூர் பாண்டியன் நகர் தாய்த்தமிழ்ப் பள்ளி இருக்கும் சூழலையும் சிக்கல்களையும் அவர் கோடிட்டு இருக்கிறார்

.தமிழ்ப்பள்ளிகளில் வருங்கால தமிழகத்தின் நாற்றங்கால்கள் என்று கோபி குமணன் கட்டுரையை ஆரம்பிக்கிறார் .உலகம் முழுக்க தாய் மொழியில் கல்வி கற்று அறிவார்ந்த சமூகமாக உயர்ந்து நிற்கும் போது இங்கு மட்டும் அந்நிய மொழியில் அனைத்து பாடங்களும் கற்பிக்கப்படுவது மிகப்பெரிய கொடுமை. இயல்பாக தன் சொந்தக் காலில் நடை பழக வேண்டிய குழந்தை அந்தப் பருவத்திலேயே ஊன்றுகோலுக்குத் தள்ளப்பட்டு ஆங்கிலத்தை படிக்க வேண்டிய கட்டாயத்தில் இருப்பதை அவரின் கட்டுரை தெளிவுபடுத்துகிறது.

அதற்கு அடுத்த கட்டுரை சுப்ரபாரதிமணியன் எழுதி உள்ளது ஆகும். ஒருபுறம் ஆங்கிலக் கல்வியின் வன்முறை சாதாரண மக்களை கல்வி இடமிருந்து அன்னியமாக்கி விட்டது. இன்னொருபுறம் தமிழ்ப்பள்ளிகள் பலவீனமாகி விட்ட சூழ்நிலை. இந்தச் சூழலில் இடம்பெயர்ந்த வந்து இங்கு இருக்கும் மக்களின் குழந்தைகள் தாங்கள் ஏன் தமிழ் கற்றுக்கொள்ள வேண்டும் என்ற கேள்வியை எழுப்புகிறார்கள். அவர்களின் பெற்றோர்களும் அப்படித்தான்.. பிழைக்க வந்த இடத்தில் அந்த மாநில மொழியை கற்றுக் கொள்ளாமல் புறக்கணிக்கும் இடம்பெயர்ந்த மக்களின் புறக்கணிப்பைக் குறிப்பிடுகிறது . அந்தவகையில் புறக்கணிக்கப்பட்ட அவர்களின் குழந்தைகள் குழந்தைத் தொழிலாளர்களாகும்  அபாயத்தை இந்த கட்டுரை சொல்கிறது

Continue Reading →

கவிதை: தவிக்கவிட்டுப் போனதேனோ !

 - மூத்த தமிழறிஞர் சிலம்பொலி செல்லப்பனார்

– மூத்த தமிழறிஞர் சிலம்பொலி செல்லப்பனார் பிரிவினையிட்டு இரங்கற்பா  –

சித்திரை பிறக்கமுன்னர் சிலம்பொலி அடங்கியதே
மொத்தமுள்ள தமிழறிஞர் முழுப்போரும் அழுகின்றார்
எத்தனையோ பட்டங்கள் ஏற்றநிறை  விருதெல்லாம்
அத்தனையும் அவர்பிரிவால் அழுதபடி நிற்கிறதே

உலகமெலாம் சென்றிருந்தார் உவப்புடனே தமிழ்கொடுத்தார்
நிலைபெறு மாறெண்ணிநிற்க நிறைவாக அவர்கொடுத்தார்
அளவில்லா கட்டுரைகள் அவர்கொடுத்தார் உலகினுக்கு
அழவிட்டு சிலம்பொலியார் அவ்வுலகு சென்றுவிட்டார்

மாநாடு பலகண்டார் மலர்கள் பலகொடுத்தார்
பூமாலை புகழ்மாலை தேடியவர் போகவில்லை
கோமனாய் கொலுவிருந்தார் கொழுகொம்பாய் தமிழ்கொண்டார்
பாவலரும் காவலரும் பதறியழச் சென்றுவிட்டார்

Continue Reading →

‘Fleeting Infinity (VOL 1) ((கணநேர எல்லையின்மை) இருமொழிக்கவிதைத்தொகுப்பு பற்றி..

எழுத்தாளர் லதா ராமகிருஷ்ணன் தொகுத்த சமகால இருமொழிக்கவிதைத்தொகுப்பான a ‘Fleeting Infinity (VOL 1) ((கணநேர எல்லையின்மை) அநாமிகா அல்ஃபபெட்ஸ் (Anaaamikaa alphabets) பதிப்பக வெளியீடாக வெளிவந்துள்ளது. அத்தொகுப்பிலுள்ள எனது கவிதையான ” குதிரைத் திருடர்களே! உங்களுக்கொரு செய்தி.”

 

எழுத்தாளர் லதா ராமகிருஷ்ணன் தொகுத்த சமகால இருமொழிக்கவிதைத்தொகுப்பான a 'Fleeting Infinity (VOL 1) ((கணநேர எல்லையின்மை) அநாமிகா அல்ஃபபெட்ஸ் (Anaaamikaa alphabets) பதிப்பக வெளியீடாக வெளிவந்துள்ளது. அத்தொகுப்பிலுள்ள எனது கவிதையான "கவிதை: குதிரைத் திருடர்களே! உங்களுக்கொரு செய்தி."எழுத்தாளர் லதா ராமகிருஷ்ணன் தொகுத்த சமகால இருமொழிக்கவிதைத்தொகுப்பான a 'Fleeting Infinity (VOL 1) ((கணநேர எல்லையின்மை) அநாமிகா அல்ஃபபெட்ஸ் (Anaaamikaa alphabets) பதிப்பக வெளியீடாக வெளிவந்துள்ளது. அத்தொகுப்பிலுள்ள எனது கவிதையான "கவிதை: குதிரைத் திருடர்களே! உங்களுக்கொரு செய்தி."

தமிழில் வெளியான கவிதைத்தொகுதிகளில் முக்கியமானதோர் கவிதைத்தொகுதியாக இக்கவிதைத்தொகுதி விளங்கும் என்பதை இத்தொகுதியின் கவிதைகள் புலப்படுத்துகின்றன. தொகுப்பின் தலைப்பான ‘கணநேர எல்லையின்மை’ நல்லதொரு கவித்துவம் மிக்க தலைப்பு.  பல்வேறு நாடுகளிலிருந்தும் கவிதைகள் தேர்வு செய்யப்பட்டிருப்பதன் மூலம் இத்தொகுப்பின் முக்கியத்துவம் அதிகரிக்கின்றது.

சிறப்பான தொகுதியொன்றினைத்தந்ததற்காகவும், இதற்கான அவரது கடுமையான உழைப்பிற்காகவும் லதா ராமகிருஷ்ணன் அவர்களுக்கு எனது பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன். கூடவே இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ள கவிஞர்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துகள்.

Continue Reading →

பேராசிரியர் எம்.ஏ. நுஃமானின் சமூக யதார்த்தமும் இலக்கிய புனைவும்

பேராசிரியர் எம்.ஏ. நுஃமானின் சமூக யதார்த்தமும் இலக்கிய புனைவும்புனைவை வாசிக்கும்போது தனிமனிதர்களையும் அபுனைவுகளை வாசிக்கும்போது சமூகத்தையும் புரிந்துகொள்ள முடியும் என்பதாககேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் பேராசிரியர் நுஃமானின் அபுனைவு எனக்குப் புனைவுகளைப் புரிய வைத்தது என்று சொல்லலாம். நான் இலக்கியத்தை முறையாகப் பயின்றவனில்லை. சுயம்புலிங்கமாகப் புரிந்துகொண்டவன் என்பதால் “சமூக யதார்த்தமும் இலக்கிய புனைவும்” என்ற பேராசிரியர் எம்.ஏ. நுஃமானின் புத்தகம் தெளிவைக்கொடுத்தது.

தமிழகத்திற்கு 84இல் முதல் முதலாக சென்ற நான், இராமேஸ்வரத்தில் இறங்கி அங்கும், அதன் பின்பு சென்னை சென்ற இரயிலிலும் கோட்டுப் போட்டஆண்களையும் பொன்னிறப் பெண்களையும் தேடி ஏமாற்றமடைந்தேன் என எனது எக்‌ஸைல்புத்தகத்தில் எழுதியிருந்தேன். நான் பார்த்த சினிமா ஊடகம் எனக்கு அவ்விதமான தேடலை உருவாக்கியது. அதேபோல் கவிதாயினி அனாரை சந்தித்தபோது, ” நான் கவிதையை ஊன்றிப் படிப்பவனில்லை “என்றேன். இது உங்களுக்குப் படிக்க இலகுவாக இருக்கும் எனச்சொல்லியவாறு, ‘கிழக்கிலங்கை நாட்டுப் பாடல்கள்’ என்ற நூலை கையில் தந்தார். வாசித்தபோது அதில் உள்ள பெண்களும் ஆண்களும் ஒருவரை ஒருவர் நோக்கிப் பாடும் பாடல்கள் எனக்கு வியப்பைக் கொடுத்தன . பெண் விடுதலையான சமூகத்தை அந்த நாட்டுப் பாடல்களில் பார்த்தேன்.

புனைவிற்கும் சமூக யதார்த்தத்திற்கும் தூரம் அதிகம் எனத் தெரிந்தாலும் சமூகத்திலிருந்து இலக்கியம் இவ்வளவு தூரம் தள்ளியிருக்குமென்பதை நாட்டார் இலக்கியத்தில் காதல் பாடல்களில் – யதார்த்தத்தையும் புனைவையும் எடுத்து பேராசிரியர் நுஃமான் தெளிவாகக் கூறியுள்ளார். எமது இஸ்லாமியச் சமூகத்தில் இப்படியான விடயங்கள் நடப்பதற்கான சாத்தியமில்லை . அதாவது இவைகள் காதலர்களது படைப்புக்கள் அல்ல.முக்கியமாகக் கிழக்கிலங்கையில் விவசாய வேலைகளில் ஆண்களே ஈடுபடுவதாகவும் இப்படியான சினிமாத்தனமான பாடல்களுக்கு இடமில்லை என்கிறார்.

உதாரணமாக பெண்பாடுவது போல்

“ கச்சான் அடிக்க கயல்மீன் குதி பாய
மச்சானுக்கென்று வளர்த்தேன் குரும்ப முலை “

இப்படியான பாடல் பெண்ணால் பாடியிருக்க முடியாது. ஆண் கவிஞர்களது புனைவு என்கிறார் .

இதே தர்க்கத்தை நாம் வைத்தால், நமது அகநானூறு சங்கப் பாடல்கள் எல்லாம் சமூகத்தின் யதார்த்தத்தை விலகி நடந்த புனைவாக வேண்டும் . சங்ககால எழுத்துகளை வைத்து அந்தக் காலத்தை அறிய எத்தனை பேர் ஆய்வுசெய்தார்கள் ? அகநானுறை விடுங்கள். புறநானுறை உண்மையென நம்பி ஈழத்தில் புதிதாக மீண்டுமொரு சங்க காலத்தைப் படைக்க இரத்தத்தையும் எலும்புகளையும் நிலமெங்கும் வாரியிறைத்தோமே? புனைவை ஆய்வது பரவாயில்லை. ஆனால், புனைவை நிஜம் எனச்சொல்வதுதானே இங்கே உதைக்கிறது . இந்தியர்கள் ராமன் இருந்த இடம், கடந்த இடமென்பதுபோல் நாமும் கானலைத் தேடி தாகத்துடன் அலைந்தோம்.

Continue Reading →