ஆய்வு: சங்க இலக்கியங்களில் சான்றாண்மை

ஆய்வு: சங்க இலக்கியங்களில் சான்றாண்மைதனிமனிதனின் சுயஒழுங்கு கட்டுப்பாடே அறத்திற்கு வித்தாக அமைகின்றது. சுயஒழுங்கு ,கட்டுப்பாடு,அறம், நாகரிகம் போன்றவை ஒன்றையொன்றுச் சார்ந்தவை. அறம் என்பது தனிப்பட்ட மனிதனுக்காக உருவாக்கப்பட்டதல்ல. இரண்டுக்கு மேற்பட்ட நபர்களுக்கிடையே சமூக உறவுகள் நிலவும்வேளையில் அறம் தோற்றம் பெறுகின்றது. அறங்கள் சமூக ஒழுங்கை அல்லது நடப்பில் நிகழ்கின்ற ஆதிக்க அடிமை உறவுகளை வெளிப்படுத்துகின்றன எனலாம். தனிமனித அறம், ஈகை, நட்பறம், துறவறம், வணிக அறம் போன்ற அறங்களில் சமூகத்துடன் தொடர்புடைய சான்றாண்மை அறம் குறித்து இக்கட்டுரை ஆராய்கிறது.

சான்றாண்மை :
‘சால்பு ( Good) என்னும் பொருளைத் தருகின்ற உலகமொழிகளின் சொற்களின் மூலப்பொருள் சான்றோர், சான்றாண்மை ( noble,aristocrat) என்றும், இதற்கு எதிர்மறையான புன்மை ( evil,bad) எனும் சொல் பல மொழிகளில் புலைமை, புலையன் ( low,plebean) என்ற மூலப்பொருளையும் குறிப்பிட்டது.’

(ராஜ்கௌதமன் – தமிழ்ச்சமூகத்தில் அறமும் ஆற்றலும், ப.எ: 255)

என்னும் நீட்சேவின் கருத்து குறிப்பிடத்தக்கது. இலத்தீன் மொழியில் சால்பு என்ற சொல் போர்வீரர்கள் என்ற பொருளில் வழங்கப்படுகிறது. சான்றாண்மை என்றால் ‘சால்பு’. தன்னை ஆளுதல் என்று பொருள.; சான்றாண்மை என்பது இனக்குழுச் சமூகத்தில் வேட்டை- பாதீடு என்றும் வீரயுகத்தில் வீரம், மறம் என்றும் மன்னராட்சியில் உயர்ந்தோரின் அறம் என்றும் மாற்றமடைந்துள்ளது. சான்றாண்மை சமூகத்தில் உயர்ந்த விழுமியமாக போற்றப்பட்டது.

சங்க இலக்கியங்களில் சான்றாண்மை :
சங்க இலக்கியங்களில் சான்றான் என்றால் வீரன், அறங்கள் மிக்கவன் என்ற இருபொருளில் கையாளப்பட்டுள்ளது. உயர்ந்த அறங்களைக் கொண்டவன் என்ற பொருளிலேயே அதிகம் சான்றோன் என்ற சொல் வழங்கப்பட்டுள்ளது. பொருள்வயின் பிரிய முற்படும் தலைவனிடம் தோழி பெரியோரின் ஒழுக்கம் குறித்து எடுத்துரைப்பதில் சான்றாண்மை புலப்படுகிறது.

‘ விழையா உள்ளம் விழையும் ஆயினும்
என்றும் கேட்டவை தோட்டியாக மீட்டுஆங்கு
அறனும் பொருளும் வழாமை நாடி
நற்கதவு உடைமை நோக்கி மற்றதன்
பின் ஆகும்மே முன்னியது முடித்தல்
அனைய பெரியோர் ஒழுக்கம்’
(அக.பா.எ-286)

இயல்பாகவே தீயனவற்றை விரும்பாத பெரியோரின் உள்ளம் எப்போதாவது அவற்றை விரும்பினும் அறத்தை அங்குசமாகக் கொண்டு யானை என்னும் ஐம்பொறிகளை அடக்குவர். அறத்தையும் பொருளையும் தக்கவழிகளில் நாடி தமக்கு வேண்டியவற்றை முறையாகச் செய்து கொள்வர். ஆராய்ந்து தீநெறிகளை விலக்கி நன்னெறிகளைப் பின்பற்றுவர். இதுவே பெரியோர் ஒழுக்கம். நினைத்ததைச் செய்துமுடித்தல், மனத்தை அடக்குதல் இரண்டும் வௌ;வேறு எல்லைகளைக் கொண்டது. நினைத்ததை முடிக்கும் செயலில் ஆதிக்கவுணர்வு மேம்பட்டிருப்பினும் அறத்தைப் பின்பற்றுவதில் அடக்கம் இருப்பதாலேயே சான்N;றார் எனப்பட்டனர். அறத்தையும் பொருளையும்  மிகுதியாக உடைமை கொண்டவர்கள் சான்றோர்கள். இவர்கள் அரசராகவோ, அந்தணராகவோ, வணிகராகவோ இருந்தார்கள். மன்னராட்சி காலத்தில் கல்வி, கேள்வி, அனுபவத்தில் வெற்றி பெற்ற சிறந்த இலட்சிய  ஆண்களே சான்றோராக ஏற்றுக் கொள்ளப்பட்டனர்.

Continue Reading →

ஈழத்துக்கவிதை இதழ்கள் (மீள்பிரசுரம்)

– ‘திறனாய்வுக் கட்டுரைகள்’ நூலிலிருந்து பெறப்பட்ட இக்கட்டுரையினை நன்றியுடன் காலத்தின் தேவை கருதி மீள்பிரசுரம் செய்கின்றோம். – பதிவுகள் –

-எம்.ஏ.நுஃமான் -அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற மேலைத் தேயங்களில் சுமார் அரை நூற்றாண்டுக்கு முன்பிருச்தே கவிதைக்கென்று தனிச்சஞ்சிகைகள் வெளிவரத் தொடங்கின. அமெரிக்காவில் இருந்து வெளிவரும் “பொயற்றி”, என்ற கவிதைச் சஞ்சிகை 1912ஆம் ஆண்டு முதல் வெளிவருகின்றது. 1909ஆம் ஆண்டு முதல் “பொயற்றி றிவியு” என்னுஞ் சஞ்சிகை இங்கிலாந்தில் இருந்து வெளிவருகின்றது. கவிதைகளையும், கவிதை பற்றிய விமர்சனங்களையும், புத்தக மதிப்புரைகளையும் இச் சஞ்சிகைகள் தாங்கி வருகின்றன.

தமிழில், கவிதைகளை மாத்திரம் தாங்கிய ஒரு இதழை வெளிக்கொண்டு வரும் முயற்சி, முதன்முதல் தமிழ் நாட்டிலேயே தொடங்கியது. பாரதிதாசனே இதைத் தொடங்கி வைத்தவர். அவர் வெளியிட்ட குயில் பத்திரிகையே தமிழின் முதலாவது கவிதை இதழ் என்று தெரிகின்றது. குயில், பாரதிதாசனின் படைப்புக்களையே பெரும்பாலும் தாங்கி வந்தது. குயிலைத் தொடர்ந்து கவிதை, சுரதா, வானம்பாடி முதலிய கவிதை இதழ்கள் தமிழகத்தில் இருந்து வெளிவந்தன. வானம்பாடி அண்மைக் காலத்து முயற்சியாகும். தமிழ் நாட்டுக் கவிதை உலகில் பரபரப்பை ஏற்படுத்திய வானம்பாடி, வானம்பாடிக் குழுவினருக்கிடையே ஏற்பட்ட முரண்பாடு காரணமாக நின்று விட்டதாகத் தெரிகின்றது.

ஆசிரியத் தலையங்கம் முதல் அடுத்த இதழுக்கான அறிவித்தல் வரை அனைத்தையும் செய்யுளிலேயே எழுதுவது தமிழ் நாட்டுக் கவிதை இதழ்களின் பிரதான பண்பாகக் காணப்பட்டது. பாரதிதாசனே இப்போக்கைத் தொடங்கி வைத்தவர் எனலாம். “சுரதா தன் கவிதைப் பத்திரிகையில் விளம்பரத்தைக் கூடக் கவிதையில் தான் பிரசுரிக்கிறார்” என்று நண்பர் ஒருவர் என்னிடம் சிலாகித்துப் பேசினார். அந்த அளவுக்கு ஆசிரியத் தலையங்கம், போட்டி அறிவித்தல், வர்த்தக விளம்பரங்கள் அனைத்தையும் அவை செய்யுளில் எழுதப்பட்ட காரணத்தால் கவிதையோடு சமமாக மதிக்கும் ஒரு சமரச மனப்பான்மை இவ்விதழ்களில் காணப்பட்டது. வானம்பாடி இதில் இருந்து வேறுபட்டது. முற்றிலும் புதுக்கவிதைக்கான ஒரு வெளியீட்டுக் களமாக அது அமைந்தது. ஆயினும் டாம்பீகமான மொழிப் பிரயோகம் அதன் பிரதான பண்பாகக் காணப்பட்டது. சமூக சமத்துவ நோக்கை வானம்பாடிக் குழுவினர் தங்கள் உட்பொருளாகக் கொண்டிருந்த போதிலும் சமூகத்தின் பொது வழக்குக்குப் புறம்பான மொழிப்பிரயோகத்தயும், சிந்தனை முறையையும், கற்பனைப் படிமங்களையும் பெருமளவு கையாண்டதால் வானம்பாடி எழுப்பிய குரல் சமூகத்தோடு ஒட்டாது அந்நியமாகவே ஒலித்தது. வானம்பாடியில் இதற்குப் புற நடைகள் உண்டு. எனினும் இதுவே பொதுப்பண்பு என எனக்குத் தோன்றுகின்றது.

தமிழ் நாட்டைப்போல், ஈழத்தில் இருந்தும் கவிதைக்கென்றே சில கவிதை இதழ்கள் வெளிவந்தன. ஈழத்துக் கவிதை இதழ்களுக்கு ஒரு இருபது வருட வரலாறு உண்டு. 1955ஆம் ஆண்டு புரட்டாதி மாதம் “தேன்மொழி”யின் முதல் இதழ் வெளிவந்தது. தேன்மொழியே ஈழத்தின் முதலாவது தமிழ்க் கவிதை இதழாகும். மஹாகவி, வாதர் ஆகிய இருவரும் சேர்ந்து சோமசுந்தரப் புலவரின் நினைவுச் சின்னமாகத் தேன்மொழியை வெளியிட்டனர். “கட்டிளமை செட்டுகின்ற கன்னிகையும் காதலனும் ஒன்று சேர்ந்தது போல எமது உள்ளத்திலே தோன்றிப் பேராவலாய் நிறைந்த இரு எண்ணங்களின் சேர்க்கைதான் இந்த இதழ். கவிதைகளை மாத்திரமே தாங்கிய ஒரு இதழை வெளிக்கொண்டு வரவேண்டும் என்பது மற்ற எண்ணம். நவாலியூர் சோமசுந்தரப் புலவருக்கு ஒரு நல்ல நினைவுச் சின்னம் உருவாக்க வேண்டும் என்பது மற்ற எண்ணம். இந்த இரண்டு எண்ணங்களும் சேர்ந்து தேன்மொழியை உருவாக்கிவிட்டன.” என்று முதலாவது இதழில் ஆசிரியர்கள் குறிப்பிட்டனர்.

Continue Reading →