நவீனத் தமிழ் இலக்கியத்துக்கு வளம் சேர்த்த படைப்பாளிகளில் முக்கியமானவர்களிலொருவர் தோப்பில் முகம்மது மீரான். அவர் மறைந்த செய்தியினை முகநூலில் நண்பர்கள் பலரின் பதிவுகள் தாங்கி வந்தன. அமைதியாக எழுத்துலகில் இயங்கிக்கொண்டிருந்த படைப்பாளி தோப்பில் முகம்மது மீரான். பல்வகையான இன, மத ரீதியாக இன்னல்கள் பலவற்றை முஸ்லீம் மக்கள் எதிர்கொள்ளும் இன்றைய காலகட்டத்தில் தோப்பில் முகம்மது மீரானின் படைப்புகள் இன்னுமொரு வகையிலும் முக்கியத்துவம் பெறுகின்றன. அது: அது அவரது படைப்புகள் முஸ்லீம் மக்களின் சமுதாயத்தை, அவர்கள் மத்தியில் நிலவும் பல்வகைக் கருத்துகளை, அவர்கள் மத்தியில் பேசப்படும் மொழியினை இவற்றுடன் அவர்கள்தம் வாழ்வினை வெளிப்படுத்தும் படைப்புகள். அவை இனங்களுக்கிடையில் புரிந்துணர்வினையும் இலக்கியச் சுவைத்தலுக்கு மேலதிகமாகத் தருகின்றன. அத்துடன் அவரது படைப்புகள் முஸ்லீம் மக்கள் மத்தியில் நிலவும் சர்ச்சைக்குரிய கருத்துகளையும் விமர்சிப்பதையும் காண முடிகின்றது. அவ்வகையிலும் அவர் படைப்புகள் முக்கியத்துவம் வாய்ந்தவை.
படைப்பாளியொருவருக்கு நாம் செய்யும் முறையான அஞ்சலி அவரது படைப்புகளை வாசிப்பதுதான். அவ்வகையில் அவருக்கு அஞ்சலி செய்யும் இத்தருணத்தில் அவரது வலைப்பதிவான ‘வேர்களின் பேச்சு தோப்பில் முஹம்மது மீரான்’ பக்கத்திலிருந்து அவரது நேர்காணலொன்றினையும், அவரது முக்கிய மூன்று நாவல்களில் இரண்டான ‘துறைமுகம்’, ‘சாய்வு நாற்காலி’ ஆகிய நாவல்கள் பற்றிய சுருக்கமான அறிமுகக் கட்டுரைகளிரண்டையும் இங்கு தொகுத்துத் தருகின்றேன். அஞ்சலி செய்யும் ஒவ்வொருவரும் இத்தருணத்தில் அவற்றைப்படிப்பது அவசியம். அவரை, அவரது படைப்புகளை மற்றும் அவரது எண்ணங்களைப் புரிந்துகொள்வதற்கு இது மிகவும் அவசியமென்று கருதுகின்றேன்.
இவரைப்பற்றிய கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாக் குறிப்பு: தோப்பில் முகமது மீரான் https://ta.wikipedia.org/s/11kk
தோப்பில் முகமது மீரான் என்பவர் (செப்டம்பர் 26, 1944 – மே 10, 2019)[1] தமிழ், மலையாள எழுத்தாளர் ஆவார். இவர் 1997 ஆம் ஆண்டில் தமிழுக்கான சாகித்திய அகாதமி விருது பெற்றார். முகமது மீரான் கன்னியாகுமரி மாவட்டத்தில், தேங்காப்பட்டினம் என்ற ஊரில் பிறந்தார். இவரது மனைவியின் பெயர் ஜலீலா மீரான். இவர் 5 புதினங்களையும் 6 சிறுகதைத் தொகுப்புகளையும் சில மொழிபெயர்ப்புகளையும் எழுதி வெளியிட்டுள்ளார். இவரது புதினம் சாய்வு நாற்காலி 1997 இல் தமிழுக்கான சாகித்திய அகாதமி விருது பெற்றது.
விருதுகள்: சாகித்திய அகாதமி விருது – சாய்வு நாற்காலி (1997), தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்ற விருது, இலக்கியச் சிந்தனை விருது, லில்லி தேவசிகாமணி விருது, தமிழக அரசு விருது, அமுதன் அடிகள் இலக்கிய விருது & தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்க விருது
எழுதிய நூல்கள்: (முழுமையானதல்ல)
புதினங்கள்: ஒரு கடலோரக் கிராமத்தின் கதை (1988), துறைமுகம் (1991), கூனன் தோப்பு 1993), சாய்வு நாற்காலி (1997), அஞ்சுவண்ணன் தெரு, குடியேற்றம்(2017)
சிறுகதைத் தொகுப்புகள்: அன்புக்கு முதுமை இல்லை, தங்கரசு, அனந்தசயனம் காலனி, ஒரு குட்டித் தீவின் வரிப்படம், தோப்பில் முகமது மீரான் கதைகள், ஒரு மாமரமும் கொஞ்சம் பறவைகளும்
மொழிபெயர்ப்புகள்: தெய்வத்தின் கண்ணே (என்பி. முகமது), வைக்கம் முகமது பஷீர் வாழ்க்கை வரலாறு (ஆய்வுக் கட்டுரை) ( எம். என். கரச்சேரி)