அஞ்சலி: தோப்பில் முஹம்மது மீரான்!

எழுத்தாளர் தோப்பில் முஹம்மது மீரான்நவீனத் தமிழ் இலக்கியத்துக்கு வளம் சேர்த்த படைப்பாளிகளில் முக்கியமானவர்களிலொருவர் தோப்பில் முகம்மது மீரான். அவர் மறைந்த செய்தியினை முகநூலில் நண்பர்கள் பலரின் பதிவுகள் தாங்கி வந்தன.  அமைதியாக எழுத்துலகில் இயங்கிக்கொண்டிருந்த படைப்பாளி தோப்பில் முகம்மது மீரான். பல்வகையான இன, மத ரீதியாக இன்னல்கள் பலவற்றை முஸ்லீம் மக்கள் எதிர்கொள்ளும்  இன்றைய காலகட்டத்தில் தோப்பில் முகம்மது மீரானின் படைப்புகள் இன்னுமொரு வகையிலும் முக்கியத்துவம் பெறுகின்றன. அது: அது அவரது படைப்புகள் முஸ்லீம் மக்களின் சமுதாயத்தை, அவர்கள் மத்தியில் நிலவும் பல்வகைக் கருத்துகளை, அவர்கள் மத்தியில் பேசப்படும் மொழியினை இவற்றுடன் அவர்கள்தம் வாழ்வினை வெளிப்படுத்தும் படைப்புகள். அவை இனங்களுக்கிடையில் புரிந்துணர்வினையும் இலக்கியச் சுவைத்தலுக்கு மேலதிகமாகத் தருகின்றன. அத்துடன் அவரது படைப்புகள் முஸ்லீம் மக்கள் மத்தியில் நிலவும் சர்ச்சைக்குரிய கருத்துகளையும் விமர்சிப்பதையும் காண முடிகின்றது. அவ்வகையிலும் அவர் படைப்புகள் முக்கியத்துவம் வாய்ந்தவை.

படைப்பாளியொருவருக்கு நாம் செய்யும்  முறையான அஞ்சலி அவரது  படைப்புகளை வாசிப்பதுதான். அவ்வகையில் அவருக்கு அஞ்சலி செய்யும் இத்தருணத்தில் அவரது வலைப்பதிவான ‘வேர்களின் பேச்சு தோப்பில் முஹம்மது மீரான்’ பக்கத்திலிருந்து அவரது நேர்காணலொன்றினையும், அவரது முக்கிய மூன்று நாவல்களில் இரண்டான ‘துறைமுகம்’, ‘சாய்வு நாற்காலி’ ஆகிய நாவல்கள் பற்றிய சுருக்கமான அறிமுகக் கட்டுரைகளிரண்டையும் இங்கு தொகுத்துத் தருகின்றேன். அஞ்சலி செய்யும் ஒவ்வொருவரும் இத்தருணத்தில் அவற்றைப்படிப்பது அவசியம். அவரை, அவரது படைப்புகளை மற்றும் அவரது எண்ணங்களைப் புரிந்துகொள்வதற்கு இது மிகவும் அவசியமென்று கருதுகின்றேன்.

இவரைப்பற்றிய கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாக் குறிப்பு: தோப்பில் முகமது மீரான் https://ta.wikipedia.org/s/11kk

தோப்பில் முகமது மீரான் என்பவர் (செப்டம்பர் 26, 1944 – மே 10, 2019)[1] தமிழ், மலையாள எழுத்தாளர் ஆவார். இவர் 1997 ஆம் ஆண்டில் தமிழுக்கான சாகித்திய அகாதமி விருது பெற்றார். முகமது மீரான் கன்னியாகுமரி மாவட்டத்தில், தேங்காப்பட்டினம் என்ற ஊரில் பிறந்தார். இவரது மனைவியின் பெயர் ஜலீலா மீரான். இவர் 5 புதினங்களையும் 6 சிறுகதைத் தொகுப்புகளையும் சில மொழிபெயர்ப்புகளையும் எழுதி வெளியிட்டுள்ளார். இவரது புதினம் சாய்வு நாற்காலி 1997 இல் தமிழுக்கான சாகித்திய அகாதமி விருது பெற்றது.

விருதுகள்: சாகித்திய அகாதமி விருது – சாய்வு நாற்காலி (1997),  தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்ற விருது,  இலக்கியச் சிந்தனை விருது,  லில்லி தேவசிகாமணி விருது,  தமிழக அரசு விருது, அமுதன் அடிகள் இலக்கிய விருது &  தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்க விருது

எழுதிய நூல்கள்: (முழுமையானதல்ல)
புதினங்கள்: ஒரு கடலோரக் கிராமத்தின் கதை (1988),  துறைமுகம் (1991), கூனன் தோப்பு 1993),  சாய்வு நாற்காலி (1997), அஞ்சுவண்ணன் தெரு,  குடியேற்றம்(2017)
சிறுகதைத் தொகுப்புகள்: அன்புக்கு முதுமை இல்லை,  தங்கரசு, அனந்தசயனம் காலனி, ஒரு குட்டித் தீவின் வரிப்படம், தோப்பில் முகமது மீரான் கதைகள், ஒரு மாமரமும் கொஞ்சம் பறவைகளும்
மொழிபெயர்ப்புகள்:  தெய்வத்தின் கண்ணே (என்பி. முகமது), வைக்கம் முகமது பஷீர் வாழ்க்கை வரலாறு (ஆய்வுக் கட்டுரை) ( எம். என். கரச்சேரி)

Continue Reading →

பாலியல் வன்முறை

- ஸ்ரீரஞ்சனி -– நெதர்லாந்தில் நிகழ்ந்த 34வது பெண்கள் சந்திப்பின் போது வாசிக்கப்பட்ட கட்டுரை –

பாலியல் வன்முறை என்பது பாலியல் இலக்கை நோக்கிய உடல்ரீதியான மற்றும் உளரீதியான ஒரு துன்புறுத்தல் ஆகும். எங்களுடைய கலாசாரம் மற்றும் அமைப்புமுறைக் கட்டமைப்புகளால் ஆதரிக்கப்படும் இது அதிகாரத்தின் ஒரு வகையான வெளிப்படுத்தலாக இருக்கிறது. பால்மயமாக்கப்பட்ட இந்த வன்முறையைச் சமூகத்தில் இருந்து அகற்றுவதற்கு, அதன் பல்வகைமையான தோற்றுவாய்களை அடையாளம்காணல், அவை பற்றிப் பேசல்,  அவற்றை அகற்றுவதற்கான தீர்வுகளை இனம்கண்டறிதல் போன்றவை முக்கியமானவையாக இருக்கின்றன.

வாழ்க்கைக் காலத்தின் ஏதோ ஒரு கட்டத்தில் மூன்றில் ஒரு பெண்ணும், ஆறில் ஒரு ஆணும் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்படுவதாக ஆய்வுகள் கூறுகின்றன. ஆண் எனத் தன்னை அடையாளம் காண்பவர்களுக்கும் பெண் எனத் தன்னை அடையாளம் காண்பவர்களுக்கும் பாலியல் வன்முறை பொதுவானதாயினும், இன்றைய எனது பார்வை தமிழ் பெண்களாகிய எங்களை நோக்கியதாகத்தான் இருக்கப்போகிறது.

இலங்கையில் வாழ்ந்த எங்களுக்கு ரெயினில், பஸ்சில் போகும்போது நிகழ்ந்த பலவகையான பாலியல் வன்முறைகள் நினைவிருக்கலாம். ஆனால், அந்த நேரம் அது பற்றி நான் எதுவுமே செய்யவில்லை. அப்படித்தான் எங்களில் பலர் இருந்திருப்போம். அப்படியான நேரங்களில் முடிந்தால் அந்த இடத்தை விட்டு நகர்ந்திருப்போம்; நகரவே முடியாத நெருக்கடி எனில், அது எவ்வளவுதான் அருவருப்பைத் தந்திருந்தாலும் அதைச் சகித்திருப்போம். இவ்வகையான சம்பவங்கள் நாங்களும் அவற்றை விரும்புகிறோம் என்ற எண்ணத்தை அல்லது நாம் எதுவும் செய்யமாட்டோம் என்பதால் என்னவும் செய்யலாமென்ற தைரியத்தை அந்தப் பாலியல் வன்முறையாளர்களுக்குக் கொடுத்திருக்கக்கூடும். அதனாலும் அந்தப் பாலியல் வன்முறையாளர்கள் அப்படியான செயல்களை மேலும் மேலும் செய்திருக்கலாம். எனவே முடிந்தவரை உடனடியான எதிர்ப்பைச் சொல்லல் மிகவும் முக்கியமாகும். முடியாதபோது அவரவர் விருப்பத்துக்கும் செளகரியத்துக்கும் ஏற்ப அதனை எப்படி மேவுவது என ஆராய்வது நல்லது.

பாலியல் வன்புணர்வு, பாலியல் தொந்தரவு, பாலியல் உறுப்புக்களை வெளிக்காட்டல், விரும்பத்தகாத கருத்துரைகள் சொல்லல், இரத்த உறவுள்ளவர்களுக்குள் வன்புணர்வு எனப் பலவகைகளில் பெண்கள் மீது இந்தப் பாலியல் வன்முறை நடாத்தப்படுகிறது. 

ஆரம்ப காலங்களில் துணையை இழந்த பெண்ணை அவனுடன் உடன்கட்டை ஏற்றுதலில் ஆரம்பித்த பால் அடிப்படையிலான இந்தப் பாலியல் வன்முறை, பின் கைம்மைகாப்பது எனத் தரையில் படுக்கும்படி, தலைக்கு மொட்டையடிக்கும்படி, சுகங்களைத் துறக்கும்படி அறிவுறுத்தி, அதன்பின் வெள்ளைச் சீலை, பூ, பொட்டு இன்மையுடனான ஓர் அபசகுணமாக பெண்ணை உருவகப்படுத்தியது. தற்போது, காலத்துடனான மாற்றமாக மேலும் பல்வேறு புது வடிவங்களில் இந்தப் பாலியல் வன்முறை உருவெடுத்திருக்கிறது. வடிவங்கள் மாறியிருக்கின்றனவே அன்றி பெண்கள் மேலான இந்தப் பாலியல் வன்முறையின் தீவிரம் குறையவில்லை.

Continue Reading →